வி.வி.ஆர். சினிமாஸ்க் என்ற நிறுவனத்தின் சார்பில் V.வெங்கட்ராஜ் தயாரித்திருக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.
இப்படத்தில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், சின்னத்திரை நடிகருமான தீபக் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் நேஹா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், சென்ட்ராயன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் சண்டி ஆகியோர் நடித்து உள்ளனர். A7 என்ற புதிய இசைக் குழுவினர் இசை அமைப்பாளர்களாக அறிமுகமாகியிருக்கிறார்கள். கானா பாலா, யுகபாரதி மற்றும் கண்ணன் பாடல்களை எழுதியுள்ளனர். ஆர்.வெங்கடேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சின்னத்திரையில் மிக பிரபலமான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ போன்ற பல நகைச்சுவை வெற்றி தொடர்களின் இயக்குனரான எஸ்.என்.சக்திவேல் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
2015-ம் ஆண்டில் முதல் படமாக சென்சார் செய்யப்பட்ட இந்தப் படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது.
இது பற்றி பேசிய தயாரிப்பாளர் வெங்கட்ராஜ், ” 2015-ம் ஆண்டின் முதல் சென்சார் படமே எங்களுடைய நிறுவனத்தின் படம் என்பதில் மிகப் பெருமையடைகிறோம். அதைவிட பெருமை, இந்தப் படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருப்பதுதான்.
எங்களுடைய முதல் படமே அனைவரின் பாராட்டையும் பெற்றிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். எங்களது படத்தை நம்பி வாங்கியிருக்கும் விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் இதைக் கேட்டு சந்தோஷமடைந்துள்ளனர். ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வரும் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது..” என்றார்.








