தமிழ்த் திரைப்பட உலகில் இசை ராஜாவாக வலம் வரும் இசைஞானி இளையராஜாவிடம் வாழ்த்து பெறுவது சாதாரணமானதல்ல. அதிலும் பிற இசையமைப்பாளர்களே தங்களது திறமையை இசைஞானியிடம் காட்டி அவரிடத்தில் ஒரு வாழ்த்தைப் பெற்றாலே அது தங்களது ஆயுசுக்கும் போதும் என்பார்கள். அப்படியொரு நெகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.
முதலில் கங்கை அமரனின் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா, ‘ஆடுகிறான் கண்ணன்’ என்ற சீரியலுக்குத்தான் முதன் முதலாய் இசையமைத்தார். பின்னர் சில வருடங்கள் தொடர்ந்து பல சீரியக்களுக்கு இசையமைத்தார்.
இயக்குநர் சரவணன் இயக்கிய ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்தார் சத்யா. தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’. ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா-2’ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இப்போது ‘அசுரகுலம்’, ‘மானே தேனே பேயே’, ‘கிட்ணா’ மற்றும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ‘அசுரகுலம்’ படத்தில் ‘பொல்லாத பொம்பள’ என்ற பாடலுக்கு நடிகர் தம்பி ராமையாவை பாட வைத்திருக்கிறார்.
இதுவரை மென்மையான பாடல்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த சத்யா காஞ்சனா – 2 படத்தில் இடம் பெற்று ஹிட்டான ‘சில்லாட்ட பில்லாட்ட’ பாடல் மூலம் தனக்கு குத்து பாடல்களுக்கும் இசை அமைக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்.
‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தை பார்த்த இளையராஜா, கார்த்திக் ராஜா இருவருமே, “படத்தின் Re recording ரொம்ப நல்லா இருக்கு..” என்று பாராட்டினார்களாம்.
“இசைஞானி இளையராஜா பாராட்டியது எனக்கு மிகப் பெரிய சந்தோஷத்தையும், இன்னும் சிறப்பாக இசையமைக்க ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது..” என்கிறார் சத்யா.
மிக விரைவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதத்தில் இசை ஆல்பம் ஒன்றையும் உருவாக்க உள்ளார் இசையமைப்பாளர் சத்யா.