“மாஸ்டர்’ படத்தில் விஜய் பெற்ற சம்பளம் நியாயமானதா..?” – தயாரிப்பாளரின் விளக்கம்

“மாஸ்டர்’ படத்தில் விஜய் பெற்ற சம்பளம் நியாயமானதா..?” – தயாரிப்பாளரின் விளக்கம்

‘மாஸ்டர்’ படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் பெற்ற சம்பளம் 80 கோடி என்று குத்துமதிப்பாக சொல்கிறார்கள். ஏனெனில், படத்தின் தயாரிப்பாளர் விஜய்க்குக் கொடுத்த சம்பளம் எவ்வளவு என்பதை வெளிப்படையாக இதுவரையிலும் சொல்லவில்லை. எவ்வளவு சம்பளம் வாங்கினேன் என்று விஜய்யும் இதுவரையிலும் சொல்லவில்லை.

ஆனால், “விஜய்க்கு அதிகச் சம்பளம் கொடுத்திருக்கிறீர்களே.. உங்களது உறவினர் என்பதால் கொடுத்தீர்களா…” என்ற கேள்விக்கு மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ பதிலளித்திருக்கிறார்.

அவர் இது குறித்து அளித்த விளக்கத்தில், “விஜய்க்கு துவக்கத்திலேயே என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதை அப்படியே கொடுத்துவிட்டேன். அந்தச் சம்பளம் குறித்து அதற்கு மேல் அவரிடத்தில் நான் ஒரு முறை கூட பேசியதில்லை.

நான் துவக்கத்தில் இருந்தே ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். அது எங்கள் இருவருக்குமான நட்பு. அந்த நட்பை குலைக்கும்விதமாக எதையும் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். ஏனெனில், நாங்கள் உறவினர்கள் என்பதையும் தாண்டி நல்ல நண்பர்களாக இருந்தோம். இப்போதும் அப்படியேதான் இருக்கிறோம்.

இந்த ‘மாஸ்டர்’ படத்தின் துவக்கத்திலேயே என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யப் போகிறோம் என்பதில் நாங்கள் தெளிவாகத்தான் இருந்தோம். அதன்படிதான் செயல்பட்டோம்.

விஜய் தற்போது மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராக இருக்கிறார் என்றால் அதில் அவருடைய கடின உழைப்பு இருக்கிறது. 1992-ம் ஆண்டில் இருந்து பல ஆண்டு கால அவருடைய கடினமான உழைப்பின் மூலம் கிடைத்ததுதான் அவருடைய அந்த உயர்வு. இதை யாரும் மறந்துவிடக் கூடாது.

வெள்ளி, தங்கம், வைரம் மூன்றுக்கும் வேறு, வேறான மதிப்புகள் இருக்கும். இந்த மதிப்புகளுக்கேற்ற விலையும் அவைகளுக்கு உண்டு. இந்த வரிசையில் விஜய் வைரமாக ஜொலிப்பவர். அதனால் அவர் வைரத்திற்குரிய மதிப்பைப் பெறத் தகுதியுடையவர்தான்..” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.

Our Score