full screen background image

“பத்மஸ்ரீ விருது பாலிவுட் நடிகைகளுக்கு மட்டும்தானா..?” – நடிகை ஜெயசுதா கேள்வி..!

“பத்மஸ்ரீ விருது பாலிவுட் நடிகைகளுக்கு மட்டும்தானா..?” – நடிகை ஜெயசுதா கேள்வி..!

தமிழில் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’, ‘நான் அவனில்லை’,  ‘பாக்தாத் பேரழகி’, ‘அபூர்வ ராகங்கள்’, ‘மேல் நாட்டு மருமகள்’, ‘பட்டாக்கத்தி பைரவன்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘பாண்டியன்’, ‘அலை பாயுதே’, ‘தவசி’, ‘செக்கச் சிவந்த வானம்’ உட்பட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர் நடிகை ஜெயசுதா.

தற்போது விஜய்யின் ‘வாரிசு’ உட்பட பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் திரைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி, ஒரு தெலுங்கு சேனலுக்கு அளித்த பேட்டியில்  தனக்கு இன்னமும் பத்மஸ்ரீ’ விருது வழங்கப்படாதது குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார்.

அவர் அந்தப் பேட்டியில் பேசும்போது, “நான் இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தாலும், யாரும் எனக்கு ஒரு பூங்கொத்துகூட கொடுத்து வாழ்த்தவில்லை. இதுவே ஒரு ஹீரோவாக இருந்திருந்தால், பெரிதாக கொண்டாடியிருப்பார்கள்.

இந்த 50 ஆண்டு கால எனது நீண்ட, நெடிய பயணத்தில், ஹீரோக்கள் கொண்டாடப்படுவதையும், நடிகைகள் குறைத்து மதிப்பிடப்படுவதையும் பார்க்கிறேன்.

ஒரு முன்னணி ஹீரோ சரியாக நடனம் ஆடாவிட்டால்கூட, ஹீரோயினைதான் இயக்குநர் குறை சொல்வார். தவிர, மும்பையில் இருந்து வரும் நடிகைகளுக்கு இங்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அவர்களது நாய்க்குட்டிக்குகூட அறை ஒதுக்குகின்றனர்.

‘‘இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் உங்களுக்கு ஏன் பத்மஸ்ரீ விருது கொடுக்கவில்லை?’’ என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஒரு வேளை அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொடுத்திருக்கலாம். பத்மஸ்ரீ விருதுக்கு பாலிவுட் நடிகைகள் மட்டுமே தகுதியானவர்களா..? மற்ற மொழி நடிகைகளுக்கு தகுதி இல்லையா…?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்  நடிகை ஜெயசுதா.

Our Score