full screen background image

“தகுதியில்லாதவர்கள்தான் தேசிய விருது தேர்வு கமிட்டியில் இருக்கிறார்கள்” – இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கடும் தாக்கு..!

“தகுதியில்லாதவர்கள்தான் தேசிய விருது தேர்வு கமிட்டியில் இருக்கிறார்கள்” – இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கடும் தாக்கு..!

“தேசிய திரைப்பட விருது என்பது கொடூரமான நகைச்சுவையாகிவிட்டது. திரைப்படங்களை பார்க்காதவர்கள், படம் குறித்து அறியாதவர்கள் விருது வழங்குகின்றனர். பாலிவுட்டைச் சேர்ந்தவர்களே நடுவர்களாக உள்ளனர்…” என்று பிரபல மலையாள திரைப்பட இயக்குநரான அடூர் கோபாலகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறைந்த இயக்குநர் ஜான் ஆபிரகாம் நினைவு விருது விழா கோழிக்கோட்டில் நேற்று நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், ”முன்பெல்லாம் தேசிய விருது வழங்கும் விழாவைச் சேர்ந்த நடுவர்கள் நன்கு அறியப்பட்ட இயக்குநர்களாகவும், கலைஞர்களாகவும், விமர்சகர்களாகவும் இருந்தனர். தற்போது யாரென்றே தெரியாத நடுவர்கள் இந்த நகைச்சுவையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

விருது படங்களுக்கு என்ன அளவுகோல் என்பதும் தெரியவில்லை. அவர்களின் பட்டியலில் சிறந்த படங்கள் இல்லை. பிளாக் பஸ்டர் படங்களுக்குத்தான் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதெல்லாம் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கக் கூடாது. அதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும். இது பெரிய அநியாயம் என்றுதான் என்னால் சொல்ல முடியும். கேரளாவை அனைத்துத் துறைகளில் இருந்தும் ஒதுக்கி வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சினிமா என்பதை ஒரு பொழுதுபோக்காக பலரும் கருதுகிறார்கள். உண்மையில் சினிமா ஒரு கலை வடிவம். தேசிய விருது வழங்கும் குழுவில் உள்ள நடுவர்கள் பெரும்பாலும் பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள். ஒரு பிரபல பாலிவுட் நட்சத்திரம் தனது தொலைபேசி அழைப்பை எடுத்ததாக பெருமையுடன் பெருமையுடன் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் இருந்தார்.

அதேசமயம் டெல்லியில் இருக்கும் என் நண்பர் ஒருவர், நடுவர்கள் வெறும் இரண்டு படங்களை பார்த்ததும் சோர்வடைந்துவிடுகின்றனர் என்றார். திரைப்படங்களைப் பார்க்காதவர்கள் அல்லது திரைப்படங்களைப் பற்றி எதுவும் புரியாதவர்கள் மரியாதை நிமித்தமாக விருதுகளை வழங்குகின்றனர்…” என்றார்.

Our Score