இந்தியன்-2 படத்தின் சமரசப் பேச்சுக்கு கமல்ஹாசன்தான் காரணமா..?

இந்தியன்-2 படத்தின் சமரசப் பேச்சுக்கு கமல்ஹாசன்தான் காரணமா..?

இந்தியன்-2’ பட விவகாரத்தில் கமல்ஹாசன் கடைசி நிமிடத்தில் தலையிட்டதால்தான் இயக்குநர் ஷங்கர் சமரசத்திற்கு ஒத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் ‘இந்தியன்-2’.

இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா லாக் டவுன் காரணமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்தும், நிறுத்தப்பட்டும் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இயக்குநர் ஷங்கர் திடீரென்று தெலுங்கில் ஒரு படத்தை இயக்கப் போவதாகச் சொன்னவுடன் இதை எதிர்த்து லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

அந்த வழக்கு பல்வேறு விசாரணைகளையும் தாண்டி சமீபத்தில் இரு தரப்பும் சமரசமாகச் செல்வதாக ஒருமித்தக் குரலில் சொன்னதால் நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது இயக்குநர் ஷங்கர் முன்னுரிமை கொடுத்து ‘இந்தியன்-2’ படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம்சரணை வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வரும் வேளையில் எப்படி திடீரென்று இந்த சமரசத்திற்கு ஒத்துக் கொண்டார் என்று விசாரித்தபோது இதில் கமல்ஹாசனும் தலையிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் இருக்கிறது. இதற்கடுத்து அடுத்த மாதத் துவக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைய இருக்கிறது.

இதற்குப் பின்பு கமல் அடுத்து வெற்றி மாறன் படம் அல்லது ‘இந்தியன்-2’-வில்தான் நடித்தாக வேண்டும். ‘விக்ரம்’ படம் எப்படி வந்தாலும் பரவாயில்லை. ஆனால் ‘இந்தியன்-2’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால் அது அரசியல் ரீதியாக தனக்கு மிகப் பெரிய பூஸ்ட்டாக இருக்கும் என்று கமல்ஹாசன் நினைக்கிறார்.

அதோடு தமிழகத்தில் தன்னுடைய மக்கள் நீதி மையம் கட்சியைப் பலப்படுத்த நினைக்கும் கமலுக்கு பின் ஊக்கியாக ஒரு விஷயம் தேவைப்படுகிறது. அது ‘இந்தியன்-2’ படத்தில் இருக்கிறது. ஊழலுக்கு எதிர்ப்பாக கமல்ஹாசன் திரையில் குரல் கொடுக்கையில் அது மக்களிடம் இன்னமும் மிக எளிதாகப் போய் சேரும் என்று அவர் எண்ணுகிறார். இதனாலேயே ‘இந்தியன்-2’ படத்தை சீக்கிரமாக முடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் கமல்ஹாசன் இருக்கிறார்.

இந்தக் கட்டாயத்தினால்தான் இயக்குநர் ஷங்கரிடம் கமல்ஹாசனே பேசி “சீக்கிரமா இதை முடிச்சிருவோம்.. அப்புறம் நாம தனித்தனியா அவங்கவங்க வேலையைப் பார்க்கலாம். எனக்கும் நிறைய அரசியல் வேலைகள் இருக்கின்றன…” என்று கேட்டுக் கொண்டாராம்.

இதனால்தான் இயக்குநர் ஷங்கர் இந்த சமரசப் பேச்சுக்கு ஒத்துக் கொண்டிருக்கிறாராம். கமல் ‘விக்ரம்’ படப்பிடிப்பை முடித்து வரும் அதே வேளையில் இயக்குநர் ஷங்கரும் ராம் சரண் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு வந்துவிடுவார்.

கிடைத்த நாட்களில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக படத்தை முடித்துவிடலாம் என்று தயாரிப்பு தரப்பும் தயாராகவே உள்ளது.

எப்படியிருந்தாலும் ‘இந்தியன்-2’ படம் அநேகமாக அடு்த்த மாதம் மீண்டும் துவக்கப்படலாம் என்று தெரிகிறது.

Our Score