full screen background image

புதிய கோணத்தில் உருவாகியிருக்கும் திரில்லர் படம் ‘இறுதிப் பக்கம்’

புதிய கோணத்தில் உருவாகியிருக்கும் திரில்லர் படம் ‘இறுதிப் பக்கம்’

தமிழ்ச் சினிமாவில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது ‘இறுதிப் பக்கம்’ என்கிற  திரைப்படம்.

ட்ரீம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது.

படத்தில் நாயகியாக அம்ருதா ்ரீநிவாசன் நடித்திருக்கிறார். இவர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான ‘கள்ளச் சிரிப்பு’ வெப் சீரீஸில் நடித்தவர். மற்றும் ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் உள்ளிட்டவர்களும் நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளர்  பிரவின் பாலு, ஏராளமான குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து அனுபவம் பெற்றவர். இப்போது ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்திருக்கும் ‘நாய் சேகர் ‘ படத்திற்கு அவர்தான் ஒளிப்பதிவாளர்.

இசையமைத்துள்ள  ஜோன்ஸ் ரூபர்ட், ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பொறியாளன்’, மாயன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். படத் தொகுப்பாளர் ராம் பாண்டியன் ‘ஆண்டவன் கட்டளை ‘, ‘கிருமி ‘ போன்ற படங்களில் உதவி படத் தொகுப்பாளராகப் பணியாற்றியவர். படத்திற்குக் கதை, எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.

இவர் மென்பொருள் பொறியாளர். கை நிறைய சம்பளத்துடன் வேலை வாய்ப்பு கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு தன் ஆழ் மனதில் உறங்கிக் கொண்டிருந்த சினிமா விருப்பத்தின்படி திரையுலகத்திற்குள் வந்துள்ளார்.

இவர் யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாததால் அனுபம்மிக்கவர்களைப் படக் குழுவாக்கி பலமான கூட்டணியாக அமைத்து, அந்தத் திறமைசாலிகளைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.

“ஒரு திரைப்படத்திற்கு முக்கியமாக இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று நல்ல கதை. இன்னொன்று படக் குழு. படக் குழு மட்டும் நமக்கு சரியாக அமைந்து விட்டால் 70% படம் முடிந்ததுபோல் நம்பிக்கை வந்து விடும். அப்படியொரு  திறமைசாலிகள் கொண்ட படக் குழுவினரைத் தேடினேன். அது எனக்கு அமைந்தது. அந்தக் குழுவை வைத்துக் கொண்டுதான் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

நான் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவன். அதனால்  எனது திரைக்கதையை அமைத்துக் கொண்டு  ஒவ்வொருவரிடமும் காட்டி  பிடித்திருந்தால் மட்டும் பணியாற்றுங்கள் என்ற ரீதியில்தான் அனைவரையும் அணுகினேன். கதை மேல் ஏற்பட்ட நம்பிக்கை மட்டுமே அவர்களை பணியாற்றச் சம்மதித்து, இந்த படமும் உருவாகி இருக்கிறது.

பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள்  யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும்.

ஒன்று நல்லவனாக இருப்பான்.. அல்லது கெட்டவனாக இருப்பான். அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான். இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படிதான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும்.

ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கதை புலப்படும். வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள். அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த ‘இறுதிப் பக்கம்’ திரைப்படம்.

ஒரு கொலை நடந்துவிட்டது. அந்தக் கொலையைச் செய்தது யார் என்பதுதான்  வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக இந்த ‘இறுதிப் பக்கம்’ படம் இருக்கும்” என்றார்.

இந்த ‘இறுதிப் பக்கம்’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்துப் பிடித்துப்போய் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார். இதைத்  தங்கள் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாக  எண்ணி   நெகிழ்ந்து போய் உள்ளது படக் குழு.

இந்தப் படத்தை ஆக்சன் ரியாக்சன் பிலிம்ஸ் சார்பில் ஜெனிஷ் வெளியிடுகிறார்.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 
Our Score