கொல்லி மலையில் உள்ள ஆகாய கங்கை என்னும் சிறிய நீர் வீழ்ச்சியில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல்முறையாக பிரபு தேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
சேலம் அருகில் இருக்கும் கொல்லிமலை, வரலாற்றில் ‘வல்வில் ஓரி’ என்ற கடையெழு வள்ளல்களில், மன்னர்களில் ஒருவர் ஆட்சி செய்த மலைப்பரப்பாகும். இலக்கியத்தில் குறிஞ்சி நிலப் பகுதியாய் வரும் இந்த கொல்லிமலை, சித்தர்களும் அபூர்வ சக்திகளும் நிரம்பிய இடமாகக் கருதப்படுகிறது.
பெரியண்ணன் கோவில், எட்டுக்கை துர்க்கை அம்மன், அறப்பளீஸ்வரர் என்ற சக்தி மிகு தெய்வங்கள் இங்கு குடி கொண்டுள்ளதாய் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.
இந்தக் கொல்லி மலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லி மலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.
சாதாரணமாக சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத்தான் இந்த அருவிக் கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும்வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி.
இந்த ஆகாய கங்கை அருவியில் முதல்முறையாக ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இந்தப் புதிய படத்தில் பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை எம்.எஸ்.மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.முருகன் தயாரிக்கிறார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்திருக்கிறார். மேலும், கலையரசன், நாசர், அர்ஜெய், தீனா, தேவதர்ஷினி, இயக்குநர் நட்டு தேவ், ஜெய்சன் ஜோஸ், சந்தோஷ், முரளி, விஜய், ரேவதி தரண், குஹாசினி, தீபிகா, சுபாஷ், சரவணன், ஸ்ரீராம், அகத்தியர், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் – கே.முருகன், நிர்வாகத் தயாரிப்பாளர் – எஸ்.சரவண ரவிக்குமார் இயக்குநர் – பா.விஜய், ஒளிப்பதிவு – தீபக் குமார் பதி, கலை இயக்கம் – சரவணன், இசை – கணேஷ், படத் தொகுப்பு – சான் லோகேஷ், சண்டை இயக்கம் – கணேஷ், உடைகள் – சாய், ஆடை வடிவமைப்பாளர் – டோரதி, ஒப்பனை – குப்புசாமி, ஸ்டில்ஸ் – அன்பு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்.
ஆகாய கங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் பயணித்துள்ளனர்.
நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில் நுட்பக் கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்து கொண்டு அருவிக்கரையை 11 மணிக்கு அடைந்து அதன் பின்னர்தான் அன்றைய படப்பிடிப்பையே நடத்த முடிந்திருக்கிறது.
இது போன்று ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கித்தான் அந்த இடத்தில் படப்பிடிப்பினை தொடர்ந்து பல நாட்கள் நடத்தியுள்ளனர். பிரபுதேவா, மகிமா நம்பியார், தேவதர்ஷினி, தினா, அர்ஜே உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.
“உணவு தயாரித்து தரும் தொழிலாளி முதல் உதவி இயக்குநர்கள்வரை அத்தனை பேரும் மிகுந்த ஒத்துழைப்போடு வலிகளையும் சிரமங்களையும் பொருட்படுத்தாமல் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக வேலை செய்து கொடுத்தது படத்தினுடைய தனி சிறப்பாகும்….” என்று தயாரிப்பாளர் கே.முருகன் சிலாகித்துக் கூறினார்.