தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
யுவனின் சகோதரரான ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் (இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கரின் மகன்) ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பேய் பசி’.
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்திருக்கிறார். மேலும் இதே படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்கு இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார்.
படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குநரான ஸ்ரீனிவாஸ் கவிநயம். இவர் தமிழ் சினிமாவின் வெற்றிப் படங்களான ‘சூது கவ்வும்’, ‘தீயாய் வேலை செய்யணும் குமாரு’, ஆகிய படங்களுக்கு இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
யுவனின் நடனம் பற்றி இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவிநயம் பேசும்போது, “இந்தப் படம் ஒரு திரில்லர் கதையைக் கொண்டது. திரைக்கதையில் பாடல்கள் பொருந்தாது என்று கருதி பாடல்களை தவிர்த்து விட்டோம்.
ஆனால், இந்தக் கதைக்கு பின்னணி இசை கோர்ப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்ததால் யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்து பணியாற்றினோம். பிண்ணனி இசையில் யுவன் ஷங்கர் ராஜாவின் உழைப்பு அபரிதமானது. ஆனால் அவருடைய ரசிகர்களுக்கு இந்த படத்தில் பாடல்கள் இல்லை என்ற செய்தி ஏமாற்றமளித்துவிட்டது.
ஆகவே ஒரு பாடல் புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டுமே என்றெண்ணி ஒரு பாடலை சேர்த்தோம். அதில் யுவனே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது எங்களது ‘பேய் பசி’ படத்துக்கு கிடைத்த மிக பெரிய பலம்…” என்றார்.