பேய் இருக்கு. ஆனா பயம் இல்ல! புதிய படத்தின் கதைக்கரு..!

பேய் இருக்கு. ஆனா பயம் இல்ல! புதிய படத்தின் கதைக்கரு..!

‘இருக்கு ஆனா இல்ல’.. இப்படியொரு எக்குத்தப்பான டைட்டிலுடன் ஒரு படம் தயாராகியிருக்கிறது. குவைத்வாழ் தமிழர்கள் சத்யா நாகராஜ், செல்லத்துரை, சாமி வெங்கட், பாலாமணி ஜெயபாலன் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்..

ஈடன், விவாந்த், மனிஷா ஸ்ரீ, ஒய்.ஜி.மகேந்திரன், ஆதவன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கிரிஷ் ஏ.சந்தர் ஒளிப்பதிவு செய்ய ஷமீர் இசையமைத்திருக்கிறார். கே.எம்.சரவணன் என்ற புதுமுக இயக்குநர் இதனை இயக்கியிருக்கிறார்..! 

இந்தப் படத்தின் கதையையும், இயக்குநரையும் சல்லடை போட்டு தேடிப் பிடித்திருப்பதாக படத்தின் கூடுதல் தயாரிப்பாளர் கலைஞானி தெரிவித்தார்.. இவர் மறைந்த மூத்த தயாரிப்பாளர் ஏ.கே.வேலனின் மகன். இவருடைய மேற்பார்வையில்தான் இந்தப் படம் வளர்ந்ததாம்.

இது பற்றி இவர் சொல்லும்போது, “இப்படியொரு தயாரிப்பாளர் நம்ம நண்பரா வந்தப்பவே இவர் இப்படியே தொடர்ந்து பல படங்களை எடுக்கணும்.. அப்படியொரு சிச்சுவேஷனைத்தான் உருவாக்கணும்னு நினைச்சு கதைகளை கேட்கத் துவங்கினோம்.. நிறைய பேர் வந்து கதை சொன்னாங்க..கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர்.. ஐடியில் பணியாற்றுபவர்கள்.. சினிமாவுக்கு வெளியே இருந்தவர்கள்.. துணை இயக்குநர்கள்.. சில இயக்குநர்கள்.. இப்படி.. இவங்க எல்லாத்தையும் சல்லடையால் சலித்து பின்பு கடைசியா நாங்க செலக்ட் பண்ணிய நபர்தான் இந்த இயக்குநர் சரவணன்..” என்றார்.. இவர் மாதிரியான பொறுப்பான நபர்கள் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கிடைத்துவிட்டால் பிரச்சனையில்லைதான்..

தயாரிப்பாளர்களுக்குத் தெரியாமல் ஒரு ஷாட்கூட இதில் எடுக்கப்படவில்லை என்றார் இயக்குநர். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் திரைக்கதையும், வசனமும் அவர்களுக்கு அத்துப்படி. யாராவது ஒரு ஆர்ட்டிஸ்ட் செட்டில் சும்மா எங்களை பார்க்க வந்திருந்தால்கூட உங்களுக்குத்தான் இன்னிக்கு ஷூட் இல்லையே என்று கேட்பார் தயாரிப்பாளர். அந்த அளவுக்கு அவர் இந்தப் படத்தில் தரோவாக இருந்தார்கள் என்றார் இயக்குநர்.

இந்த இருக்கு. ஆனா இல்லை என்ற டைட்டிலுக்கு என்ன பெயர்க் காரணம் என்று கேட்டதற்கு.. ‘பேய் இருக்கு. ஆனா பயம் இல்லை’ என்ற ரீதியிலேயே இன்னும் நாலைந்து ஆப்ஷன்களை சொன்னவர்கள் கடைசிவரையிலும் கதை என்னன்னு சொல்லவே இல்லை. ஆனாலும் படத்தின் டிரெயிலர் சொல்வதென்னவோ, இதுவொரு திரில்லர் ஸ்டோரி என்பதைத்தான்..! 

Our Score