இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி..!

இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி..!

தமிழ்ச் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான  பாலுமகேந்திரா சிறிது நேரத்திற்கு முன்பாக சென்னையில் வடபழனி விஜயா மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய வயது 74.

தமிழ்ச் சினிமாவில் மிக அளப்பரிய சாதனைகளைப் படைத்திருக்கும் பாலுமகேந்திரா 1972-ம் ஆண்டு பனிமுடுக்கு என்ற படத்தின் ஒளிப்பதிவாளராக இந்தியத் திரையுலகில் கால் பதித்தார்.

1979-ல் கோகிலா என்ற கன்னடப் படத்தை இயக்கி இயக்குநர்கள் வரிசையில் இடம் பிடித்தார். இதுவரையிலும் 22 படங்களை இயக்கியிருக்கிறார். இதில் அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம்பிறை, நீங்கள் கேட்டவை, உன் கண்ணில் நீர் வழிந்தால், ரெட்டைவால் குருவி, வீடு, சந்தியா ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதி லீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என்று 14 தமிழ்ப் படங்களை இயக்கியிருக்கிறார்.

ஓலங்கள், ஊமைக்குயில், யாத்ரா என்ற 3 மலையாளப் படங்களையும், கோகிலா என்ற கன்னடப் படத்தையும், சத்மா, அவுர் ஏக் பிரீன் கஹானி என்று 2 ஹிந்தி படங்களையும், நீரக்சனா என்ற தெலுங்கு படத்தையும் இயக்கியுள்ளார்.  27 படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார்.  இதில் பெரும்பாலானவை மலையாளப் படங்களாகும்.

1978-ம் ஆண்டு கோகிலா படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவுக்கான தேசிய விருதைப் பெற்றார். 1983-ம் ஆண்டு மூன்றாம் பிறை படத்துக்காகம மீண்டும் ஒரு தேசிய விருது. 1988-ம் ஆண்டு இவர் இயக்கிய வீடு சிறந்த படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றது. 1990-ல் இவர் இயக்கிய சந்தியாராகம் சிறந்த குடும்ப உறவுகளைச் சொன்ன படமாக தேசிய விருதினைப் பெற்றது. 1992-ல் இவர் இயக்கிய வண்ண வண்ணப் பூக்கள் சிறந்த மாநில மொழி திரைப்படமாக தேசிய விருதினைப் பெற்றது..!

கோகிலா படத்திற்காக சிறந்த மாநில அரசின் விருதினை கர்நாடக அரசு கொடுத்திருந்தது.. நெல்லு, பிரயாணம் ஆகிய படங்களின் சிறந்த ஒளிப்பதிவுக்காக கேரள அரசின் விருதுகளைப் பெற்றிருக்கிறார்.. ஆந்திர அரசின் நந்தி விருதையும் சிறந்த ஒளிப்பதிவுக்காக Manavoori Pandavulu Nireekshana ஆகிய  2 படங்களுக்கு பெற்றிருக்கிறார்.

இவருடைய படங்கள் அனைத்துமே மனித உறவுகளை உண்மையாகவே வெளிப்படுத்தும்விதமாக அமைந்திருந்ததுதான் இவருடைய தனிப்பட்ட சிறப்பு. அதோடு இவருடைய படங்களின் ஒளிப்பதிவு மற்ற அனைத்து படங்களில் இருந்தும் வித்தியாசமானதாக இருக்கும்.. அதனால்தான் இவர் கேமிரா கவிஞர் என்றே அழைக்கப்பட்டிருந்தார்.இயக்குநர் மகேந்திரனின் புகழ் பெற்ற முள்ளும் மலரும் படத்திற்கு பாலுமகேந்திராதான் ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அழியாதகோலங்கள் திரைப்படம் ஒரு புது வழியை தமிழ்ச் சினிமாவுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்றே சொல்லலாம்.மூடுபனி இவருடைய புதுமையான திரைக்கதையில் உத்தியால் புகழ் பெற்ற படம். மூன்றாம் பிறை படம் இன்றைக்கும் தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்திருக்கிறது. அதில் சிறப்பாக நடித்ததற்காக கமலுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்திருந்தது. இதே படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு அதுவும் பாராட்டுக்களை பெற்றது. வீடு, சந்தியா ராகம் போன்ற படங்களெல்லாம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட உலக சினிமாக்கள் என்று இப்போதும் சினிமா ஆர்வலர்களால் குறிப்பிடப்படுகிறது. 

இவருடைய முதல் படத்தைத் தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் இசை இசைஞானி இளையராஜாதான். அவரைத் தவிர வேறு யாரிடமும் இசைக்காக செல்ல மாட்டேன் என்று மிக உறுதியுடன் இருந்தார். இவருடைய ஜூலி கணபதி படம் வரையிலும் இசைஞானி இவருக்காக போட்ட பாடல்கள் அனைத்துமே சூப்பர்டூப்பர் ஹிட். இன்றைக்கும் இரவு நேர தாலாட்டில் பாலுமகேந்திராவின் படங்கள் நிச்சயம் இடம் பிடிக்கின்றன..!

இவருடைய சீடர்களாக பாலா, வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம், நவீன்  ஆகியோர் சிறந்த இயக்குநர்களாக தமி்ழ்த் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கி்ன்றனர்.. ஒரு மூன்று தலைமுறை கண்ட இயக்குநராக தமிழ்ச் சினிமாவுக்கு இவர் படைத்த படைப்புகள் என்றென்றும் இவரது பெயரைச் சொல்லிக் கொண்டேயிருக்கும்..! 

Our Score