சின்னத்திரை நடிகர் கெளசிக் ஏற்கெனவே ‘பனிவிழும் நிலவு’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்போது இரண்டாவது படமாக இந்த ‘ஆதியும் அந்தமும்’ படத்தை இயக்கியிருக்கிறார்.
சின்னத்திரை நடிகரான ‘கோலங்கள்’ அஜய் ஹீரோவாகவும் மித்தாலி அகர்வால், கவிதா சீனிவாசன், ஆகியோர் ஹீரோயின்களாகவும் நடித்திருக்கிறார்கள். எல்.வி.கணேசன் இசையமைத்திருக்கிறார். ஆர்.எஸ்.ஆர்.ஸ்கிரீன்ஸ் மற்றும் என்.கே.கிராப்ட் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது. பெப்சி தொழிலாளர்கள் கொடுத்த திடீர் பாய்ச்சலில் கொஞ்சம் சோர்ந்து போயிருந்த விழா குழுவினருக்கு, வந்திருந்த வி.ஐ.பி.க்கள் ஹார்லிக்ஸ், பூஸ்ட்டெல்லாம் கொடுத்து பேசினார்கள்..
7 ஆண்டுகளாக ‘கோலங்களில்’ கொடி கட்டிப் பிறந்த அஜய்க்கு, உடன் பிறவா சகோதரிபோல காட்சியளித்த தேவயானி இதற்காகவே ஸ்பெஷல் கெஸ்ட்டாக வந்திருந்தார். “என் தம்பியின் இந்தப் படம் நிச்சயமா ஜெயிக்கணும்.. அவருக்குள்ள ஒரு நடிப்பு கனவு ரொம்ப வருஷமா இருந்துச்சு.. இன்னிக்குத்தான் அது நிறைவேறிருக்கு. அவரோட திறமை எனக்கு நல்லா தெரியும். நிச்சயம் இது ஜெயிக்கக் கூடிய படமாத்தான் இருக்கும்..” என்று மனதாரப் பாராட்டினார்..!
“இந்தப் படம் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் வகையைச் சேர்ந்தது..” என்றார் இயக்குநர் கெளசிக். இந்த கேரக்டரை ரெடி செஞ்சவுடனேயே எனக்கு அஜய்தான் சட்டுன்னு ஞாபகம் வந்துச்சு.. மிகக் குறுகிய காலத்தில் பட்ஜெட் படமா எடுத்திருக்கோம். ஆனா ஒரு பெரிய படம் மாதிரியான மேக்கிங் இதுல இருக்கு..” என்றார் இயக்குநர்..!
ஹீரோவான அஜய்.. தொடர்ந்து மூன்று நாட்களாக பத்திரிகையாளர்களையும் கண் கலங்க வைத்த மூன்றாவது நடிகராக இடம் பிடித்துவிட்டார். இவரது நன்றி அறிவிப்பில் அவருடைய வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும்தான் இல்லை. மிச்ச, சொச்சம் அனைவரையும் வார்த்தைகளால் குளிரவைத்துவிட்டார்..
படத்தின் டிரெயிலரும் புதுசா எதையோ சொல்ல வந்திருப்பதையே காட்டுகிறது..!