நேற்று சென்னையில் காலமான பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் போலீஸ் மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக சென்னையில் அமைந்தகரை எம்.ஜி.எம். மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணியளவில் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல், நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு 4 மணியளவில் கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவில் திரண்டு வந்தனர். நீண்ட வரிசையில் நின்று கண்ணீர் மல்க எஸ்.பி.பி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., நடிகர்கள் பிரசன்னா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, இசையமைப்பாளர் தீனா, இயக்குநர் சமுத்திரகனி, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ஏராளமான பொதுமக்களும் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினார்கள்.
ஆனால் கொரோனா பரவல் உள்ள சூழ்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு சமூக இடைவெளியை மறந்து அஞ்சலி செலுத்த மக்கள் திரண்டதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, அவரது உடலை வீட்டில் வைத்திருக்க மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தலின்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் நேற்று இரவு 7.40 மணக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் அருகேயிருக்கும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கம் வரையில் வழிநெடுகிலும் மக்கள் திரண்டு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது தீவிர ரசிகர்கள் மோட்டார் சைக்கிள் மூலம் ஆம்புலன்சு வாகனத்தை பின் தொடர்ந்து பண்ணை வீடுவரை சென்றனர். வழி நெடுகிலும் அவரது உடலுக்கு ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் வைக்கப்பட்டிருந்த பண்ணை வீட்டில் 4 டி.எஸ்.பிக்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை எஸ்.பி.பி. உடலுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பொதுமக்களுக்கும் சில கட்டுப்பாடுகளுடன் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எஸ்.பி.அரவிந்தன் இன்று காலையில் தெரிவித்தார்.
இதன்படி இன்று காலை 7 மணி முதல் ரசிகர்களும் எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அவருடைய உடலுக்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், ஆந்திர மாநில மந்திரி அனில் குமார் யாதவ், பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. கருணாகர ரெட்டி, நெல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. கிருஷ்ணா ரெட்டி, தடா தொகுதி எம்.எல்.ஏ. சஞ்சீவி, செங்கல்பட்டு சரக போலீஸ் ஐ.ஜி. நாகராஜன், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, நடிகர்கள் விஜய், அர்ஜூன், ரகுமான், மயில்சாமி, பிரேம்ஜி, இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், பாடகர் மனோ, சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
எஸ்.பி.பி.யின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், காவல்துறை மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி நேற்றே அறிவித்திருந்தார்.
அதன்படி குடும்பத்தினரின் இறுதிச் சடங்குகள் நிறைவு பெற்ற பிறகு, காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எஸ்.பி.பி.யை இறுதியாக ஒருமுறை காண்பதற்காக வந்திருந்த அவரது ரசிகர்கள், அவரது உடலை, காவல் துறை அணிவகுப்புடன் சுமந்து சென்றபோது, எஸ்.பி.பி.யின் புகழை போற்றும் விதமாக முழக்கங்கள் எழுப்பியபடி சென்றனர்.
பகல் 11.50 மணியளவில் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு நடிகர் விஜய் வந்தார். எஸ்.பி.பி.யின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர், எஸ்.பி.பி.சரணை கட்டியணைத்து ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த விஜய், பின்னர் புறப்பட்டு சென்றார்.
இதன் பின்னர் காவல் துறையினர் சார்பில், ஆயுதப் படை துணை கமிஷனர் திருவேங்கடம் தலைமையில் வந்திருந்த 24 ஆயுதப் படை போலீசார் 3 முறை குண்டுகளை முழங்க 72 குண்டுகள் வெடிக்க… அரசு மரியாதையுடன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நேற்று மதியம் துவங்கி இன்று மதியம்வரையிலும் தமிழகத்தில் இருக்கும் அனைத்துத் தொலைக்காட்சிகளும் எஸ்.பி.பி.யின் மரண நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பின.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் இதுநாள்வரையிலும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக இருந்தார் என்பதை நேற்றைய அவரது இறப்பு உணர்த்தியிருப்பதாக ஒரு ரசிகர் மனம் நெகிழ்ந்து குறிப்பிட்டிருந்தார்.
அதுதான் உண்மை என்பதுபோல், நுங்கம்பாக்கத்தில் இருந்து தாமரைப்பாக்கம் போகும் வழியெங்கும் சாலையோரம் பொதுமக்களும், ரசிகர்களும் காத்திருந்து எஸ்.பி.பி.க்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தது நெகிழ வைத்தது.
எஸ்.பி.பி.யின் புகழ் என்றென்றும்.. தமிழ் உள்ளவரையிலும் நீடித்து நிலைத்து நிற்கும்..!
அவரது ஆன்மா சாந்தியாகட்டும்..!