இந்த நிலை மாறும் – சினிமா விமர்சனம்

இந்த நிலை மாறும் – சினிமா விமர்சனம்

PANTHALAM CINEMAS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் சிவா, விஜி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் முக்கிய கதாபாத்திரங்களான இரண்டு நண்பர்கள் கேரக்டர்களில் ராம்குமார் சுதர்சன் வழக்கறிஞராகவும், அஸ்வின் குமார் ஐ.டி ஊழியராகவும் நடித்திருக்கிறார்கள்.

மேலும் டெல்லி கணேஷ், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன், கார்த்திக், வினோத் வர்கா, சந்தானபாரதி, பாண்டு, நிவேதிதா சாரா, பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – சுகுமாரன் சுந்தர், புகைப்படங்கள் – சரவண், இசை – அருண் காந்த், பின்னணி இசை – ஏலன், படத் தொகுப்பு – அருண் காந்த், ஒலி வடிவமைப்பு – அருண் காந்த், கலர் சேர்க்கை – அருண் காந்த், பட லோகோ வடிவமைப்பு – கோபிநாத், வி.எஃப்.எக்ஸ் – வினோத், இணை இயக்கம் – தீனா, இணை தயாரிப்பு – இன்பா, மக்கள் தொடர்பு – நிகில் முருகன்,

ஏற்கனவே 'கோகோமாக்கோ' என்னும் படத்தை இயக்கிய இயக்குநரான அருண்காந்த், இந்தப் படத்தை எழுதி, படத் தொகுப்பு செய்து, ஒலி வடிவமைப்பு செய்து, கலர் சேர்க்கையும் செய்து படத்தையும் இயக்கியிருக்கிறார்.

படத்தின் ஹீரோக்களான ராம்குமார் சுதர்ஷனும், அஷ்வின் குமாரும் ஐ.டி. நிறுவனத்தின் வேலை செய்கிறார்கள். அந்த வேலை அவர்களுக்கு பெரும் சுமையாகத் தெரிய.. சொந்தமாகத் தொழில் துவங்க முடிவெடுக்கிறார்கள்.

அதன்படி நிவேதா சதிஷுடன் இணைந்து இண்டர்நெட் ரேடியோ ஒன்றை தொடங்குகிறார்கள். ஏற்கனவே இந்த இண்டர்நெட் ரேடியோ துறையில் வேலை பார்த்து வரும் சாம்ஸ் அவர்களுக்கு உதவி செய்கிறார்.

தங்களது ரேடியோவின் முதல் நிகழ்ச்சியாக பத்திரிகைகளில் வெளியாகும் மேட்ரிமேனியல் பகுதியில் விளம்பரம் கொடுப்பவர்களைப் பற்றி கலாய்க்கிறார்கள். இவர்களது கலாய்த்ததால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள். இதனை தங்களுக்குக் கிடைத்த பெரிய அவமானமாக கருதி விளம்பரம் கொடுப்பதை நிறுத்துகிறார்கள்.. இதனால், அந்தப் பத்திரிகைக்கு வருமானம் குறைகிறது.

இதனால் கோபமடையும் அந்தக் குறிப்பிட்ட பத்திரிகை இவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்கிறது. இதையடுத்து கோர்ட்டிலும் தாங்கள் செய்தது சரிதான் என்று வாதாடுகிறார்கள் நாயகர்கள்.

இந்த வழக்கில் அவர்கள் வெற்றி பெற்றார்களா.. இல்லையா... என்பதுதான் இந்தப் படத்தின் மீதமான திரைக்கதை.

நாட்டில் தற்போது எத்தனையோ பிரச்சினைகள் நடந்து மக்கள் போராடி, போராடி களைத்துப் போயிருக்கும் நேரத்தில் வேலை வெட்டியில்லாத ஒரு வேலையைச் செய்வதைப் போல இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார் இயக்குநர்.

அதையாவது மிகச் சரியாகச் செய்து வெற்றி பெற்றாரா என்றால் அதுவும் இல்லை. படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேருமே தாங்கள் காட்டியதுதான் நடிப்பு என்னும் ரீதியில் நடித்திருக்கிறார். டயலாக் டெலிவரி செய்திருக்கிறார்கள். யாராவது ஒருவராவது மனதைத் தொடுவதைப் போல் நடிப்பார்களா என்று கடைசிவரையிலும் முழித்து, முழித்துப் பார்த்து கடைசியில் நமக்கு கண் முழியே பிதுங்கிவிட்டது.

படத்தின் துவக்கத்தில் இன்றைய ஐ.டி. இளைஞர்களுக்கு இருக்கும் வேலைச் சுமையையும், அவர்களது மேலதிகாரிகளின் கெடுபிடியையும் பட்டவர்த்தனமாய் காட்டியிருக்கிறார். இதன் விளைவாகத்தான் நாயகர்கள் சொந்தத் தொழில் துவக்குகிறார்களாம். நிஜம்தான்.

இந்த வரன் தேடும் பிரச்சினையிலும் இப்போதைய முன்னணி நிலவரத்தை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். அது ஒன்றுதான் இந்தப் படத்தினால் நமக்குக் கிடைத்திருக்கும் லாபம்.

இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்றவர்கள் வரன் தேடும்போதே அதிகப்பட்சம் ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் மாப்பிள்ளையோ.. அல்லது அரசுப் பதவியில் இருப்பவர்களையோதான் தேடுகிறார்கள். ‘ஒரு விவசாயிக்குத்தான் பெண் கொடு்ப்பேன்’ என்றோ.. ‘ராணுவத்தில் வேலை பார்ப்பவருக்குத்தான் பெண் கொடு்ப்பேன்’ என்றோ எந்தப் பெற்றோரும் சொல்வதில்லை. இதையும் படத்தில் குறித்து வைத்து கலாய்த்திருக்கிறார்கள். பாராட்டுக்கள்.

ஆனால் வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றவுடன் பிரச்சினை வேறு பக்கம் திசை திரும்புவதும்,. பேசிப் பேசியே கொல்வதுமாய் இருக்க.. நமக்குத்தான் மண்டை காய்கிறது.

அனுபவமிக்க காமெடி நடிகர் சாம்ஸ் நம்மைக் காப்பாற்றுவார் என்று நினைத்தால் அவருக்கே படத்தில் பெரிய அளவுக்கு வேலையில்லை.

இந்த லட்சணத்தில் கோர்ட்டில் பொய் சாட்சியம் அளிக்கும் பெண்ணுக்கு கோர்ட்டிலேயே வழக்கறிஞர் ராம்குமார் சுதர்சன் தாலி கட்ட முன் வருவது படு மொக்கைத்தனம். உண்மையை வெளிக்கொணர்கிறார்களாம்.. பாவம் உண்மையான வழக்கறிஞர்கள்... இந்தக் காட்சியை பார்த்தால் என்ன நினைப்பார்களோ..?

ஒய்.ஜி.மகேந்திரன் பத்திரிகையாளர் சார்பான வக்கீலாக நீட்டி முழங்குகிறார். இவருடன் டெல்லி கணேஷ், டி.எம்.கார்த்திக் போன்றோரின் வருகையும் இவர்களது நடிப்பும் பெரிதாக ஈர்க்கவில்லை. இயக்கம் சரியில்லையெனில் எத்தனை நல்ல கலைஞர்கள் கையில் கிடைத்தாலும் அது ச்சும்மா விழலுக்கு இழைத்த நீர்தான்..!

படம் முழுக்கவே இரண்டு செட்டுகளில்தான் நடைபெறுகிறது. ஒன்று ரேடியோ ஸ்டேஷன் செட். இன்னொன்று நீதிமன்ற செட். இந்த செட்டுக்களை மட்டும் அழகாக அமைத்திருக்கிறார்கள். ஆனால் நீதிமன்றத்தில் அனல் பறக்கும் என்று பார்த்தால் கடைசியாக அனைத்தும் புஸ்வானமாகிவிட்டது. வாதங்கள் அனைத்தும் அரதப் பழசு டைப்பில் எழுதியிருக்கிறார்கள். இதனாலேயே படத்தின் பிற்பாதியில் ஒரு ஈர்ப்பு இல்லாமலேயே போய்விட்டது.

ஒளிப்பதிவாளர் சுகுமாரன் சுந்தர், ஹெலி கேமராவை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார் போலும். அவுட்டோர் காட்சிகள் என்றால் 2 நிமிடங்களுக்கு ஒரு முறை ஏரியல் வியூ ஷாட்டை வைத்து நம்மையும் தவிக்க விட்டிருக்கிறார். தொழில் நுட்பம் என்பது படத்தை மேம்படுத்தவே.. படுத்த அல்ல இயக்குநரே..!

குறைந்த செலவில் படம் எடுக்க நினைத்த இயக்குநர் அருண்காந்தின் முயற்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் அது தரமானதாக இருக்க வேண்டாமா இயக்குநரே..!?

இயக்குநர் அருண்காந்த் தான் ஒரு சகலகலாவல்லவர் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படத்திற்கு இசையமைத்து, பாடல்கள் எழுதி, படத் தொகுப்பு செய்து, கலை இயக்கத்தை மேற்கொண்டு, ஒலி வடிவமைப்பு செய்து, கலரிங் செய்து, ஆடை வடிவமைப்பு செய்து, கிராபிக்ஸ் டிசைனும் செய்து கடைசியாக கதை, திரைக்கதை, வசனத்தையும் எழுதி இயக்கியிருக்கிறார்.

படத்தின் பட்ஜெட் குறைவு என்பதால் அனைத்தையும் தன் மீது சுமந்திருக்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இவ்வளவு துறைகளுக்கும் தனித்தனி நிபுணர்களை பயன்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருந்தால்... ஒருவேளை ‘இது ஒரு முறை பார்க்கக் கூடிய படம்’ என்றாவது சொல்லும் அளவுக்கு வந்திருக்க வாய்ப்புண்டு.

ஆனால் இப்போது..? ஆசை ஒரு மனிதனுக்குத் தேவைதான். ஆனால் இந்த அளவுக்கு பேராசையாக அது இருக்கக் கூடாது..

படத்தின் முடிவிலும் அடுத்த பாகம் மருத்துவத் துறையில் நடக்கும் ஊழலைப் பற்றியது என்பதாக முடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் இப்போதே நமக்கு நெஞ்சில் ‘பக்’ என்றாகிறது. இயக்குநர் செலவை பொருட்படுத்தாமல் சிறந்த கலைஞர்களை உடன் வைத்துக் கொண்டு அந்தப் படத்தைக் கொணர்ந்தால் நல்லது.

இல்லையெனில் அடுத்த விமர்சனமும் இப்படியாகத்தான் இருக்கும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.