எட்டுத் திக்கும் பற – சினிமா விமர்சனம்

எட்டுத் திக்கும் பற – சினிமா விமர்சனம்

V5 மீடியா, மற்றும் வர்ணலயா ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் பெவின்ஸ் பால், விஜயா ராமச்சந்திரன் ஆகிய இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

படத்தில் சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், நித்திஷ் வீரா, சாந்தினி, முத்துராமன், சாவந்திகா, சாஜு மோன், ‘சூப்பர் குட்’ சுப்ரமணி, சம்பத் ராம், சுகந்தி நாச்சியாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – வ.கீரா, ஔிப்பதிவு – சிபின் சிவன், இசை – எம்.எஸ்.ஸ்ரீகாந்த், பாடல்கள் – கு.உமாதேவி, சாவீ, படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை இயக்கம் – மகேஷ், நடன இயக்கம் – அபிநயஸ்ரீ, சண்டை இயக்கம் – சரவன், மக்கள் தொடர்பு – கோபிநாதன், மணவை புவன், தயாரிப்பு மேற்பார்வை – சிவசங்கர், இணை தயாரிப்பு – எஸ்.பி.முகிலன், தயாரிப்பு – பெவின்ஸ் பால், ராமச்சந்திரன்,  ரிஷி கணேஷ்.

இயக்குநர் கீரா ஏற்கெனவே ‘பச்சை என்கிற காற்று’ என்னும் அரசியல் படத்தையும்  ‘மெர்லின் ‘ என்ற திகில் படத்தையும் இயக்கியவர்.

இந்தப் படத்திற்கு முதலில் ‘பற’ என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள். ஆனால் பட வெளியீட்டின்போது ‘பற’ என்பது வேறொரு சாதியின் பெயரைச் சுருக்கமாக அழைக்கிறது. இது தவறானது என்று சென்சாரில் அறிவுறுத்தியதால், ‘எட்டுத் திக்கும் பற’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.

இது சாதி வெறிக்கு எதிரான படம். குறிப்பாக ஆணவக் கொலையின் கொடூரத்தை, ரத்தமும் சதையுமாக சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கொடுமைக்கு ஒரு தீர்வையும் இந்தப் படம் சொல்லியிருக்கிறது.

சமீபத்தில் ‘நாடோடிகள்-2’, ‘கன்னி மாடம்’ ஆகிய படங்களில் ஆணவக் கொலைகளைப் பற்றி விலாவாரியாக பேசியிருந்தார்கள். அந்த வரிசையில் இத்திரைப்படமும் இடம் பிடித்திருக்கிறது.

ஆதிக்க சாதியைச் சேர்ந்த சாந்தினியும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாஜூ மோனும் காதலிக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு எப்படியும் பெற்றோர்களின் ஒப்புதல் கிடைக்காது என்னும் காரணத்தினால் காதலர்கள் இருவரும் ஒரு நாள் இரவில் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

அதே நாள் இரவில் சென்னையில் ரோட்டோரமாக குடியிருந்து வரும் நித்திஷ் வீரா மறுநாள் காலையில் தனது காதலியான சாவந்திகாவை திருமணம் செய்ய நினைத்து அவளை அழைத்துக் கொண்டு பணம், நகையுடன் தனது நண்பர்களைத் தேடி செல்கிறார்.

சென்னையில் பிறந்து வளர்ந்து இப்போது அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர் ஒருவர் தனது தந்தையிடம் அவரது பூர்வீகச் சொத்தை விற்றுப் பணத்தைக் கொடுக்கும்படி கேட்கிறார். அவரது தந்தையோ தனக்கு மனைவி இல்லாமல் தான் தனியே இருப்பதாலும், இப்போது தன்னையும் தன் வயதையொத்த ஒரு முஸ்லீம் பெண்மணி மணக்க முன் வந்திருப்பதையும் மகனிடம் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.

இரவு நேர கிளப்பில் பபூன் வேஷம் போட்டு சிரிக்க வைக்கும் முனீஸ்காந்தின் சிறு வயது மகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட அவனது சிகிச்சைக்காக அவசரமாக 25,000 ரூபாய் தேவைப்படுகிறது. வேலை பார்த்த இடத்தில் பணம் கிடைக்காததால் பணத்திற்காக தனது நண்பர்கள் பலரிடமும் அந்த நள்ளிரவில் வீடு தேடி சென்று உதவி கேட்கிறார். எங்கும் கிடைக்கவில்லை.

இந்த நேரத்தில் நித்திஷ் வீராவும், சாவந்திகாவும் முனீஸ்காந்தின் கண்ணில் பட அவர்களது பையை திருடிக் கொண்டு ஓடுகிறார் முனீஸ்காந்த். ஆனால் மருத்துவமனையில் அவரது மனைவி “இது யாரிடமோ திருடிய பணம்.. இது என் பிள்ளைக்கு வேண்டாம்..” என்று சொல்லி வாங்க மறுத்துவிட.. திரும்பவும் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க நித்திஷ் வீராவைத் தேடி அலைகிறார்.

இன்னொரு பக்கம் ஊரைவிட்டு ஓடி வரும் காதலர்களைத் தேடி சாந்தினியின் சமூகம் சார்ந்த அரசியல் கட்சிப் பிரமுகர்கள் களத்தில் குதிக்கிறார்கள். பலரும் கார்களில் கொலை வெறியுடன் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி போவதாகப் பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு ஓடி வரும் காதலர்கள் சென்னையில் ‘அம்பேத்’ என்னும் இளம் வழக்கறிஞரான சமுத்திரக்கனியிடம் சரண்டராகிறார்கள். அவர் இவர்களுக்கு சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து வைக்கத் திட்டமிடுகிறார்.

அம்பேத்திடம் காதலர்கள் இருப்பதை அறியும் கட்சிக்காரர்கள் பலரும் அம்பேத்தை மிரட்டுகிறார்கள். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இவர்களை ஏமாற்றியாவது திருமணத்தை நடத்த முனைகிறார் அம்பேத்.

இதே நேரம் அமெரிக்க மகனிடம் சொல்ல முடியவில்லையென்றாலும் சரி.. நாம் இன்றைக்கு யாரிடமும் சொல்லாமல் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று பெரியவர் குமரேசனும், அவரது பெண் தோழரும் முடிவெடுக்கிறார்கள்.

இந்த மூன்று பேரின் கதையோடு காதலர்களைத் தேடியலையும் கொலைகாரக் கூட்டமும் சேர்ந்து கொள்ள.. அனைவரும் ஓரிடத்தில் சேர்கிறார்கள். இதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘எட்டுத் திக்கும் பற’ படத்தின் பரபரப்பான திரைக்கதை.

எந்த நடிகர், நடிகையரிடமும் நடிப்புக்காக இயக்குநர் மெனக்கெடவில்லை. அவரவர்க்கு என்ன வருகிறதோ அதையே சிறப்பாகக் கொடுங்கள் என்று வாங்கியிருக்கிறார்.

சாந்தினியும், சாஜூமோனும் மிக எளிமையாகப் பேசுகிறார்கள். யோசிக்கிறார்கள். திருமணம் செய்து கொள்ள எத்தனிக்கிறார்கள். சமுத்திரக்கனி அவர்களிடம், “இப்போது உங்களுக்கு எல்லாமே நன்றாகத்தான் இருக்கும். ஆனால் கல்யாணமான பின்னாடி.. நீ அழுக்கு நைட்டிலேயும், அவன் பரட்டைத் தலையோடையும் பார்க்கும்போது உங்களுக்கே உங்களை பிடிக்காது. இப்ப உங்களுக்கு வந்திருக்கிறது காதல் இல்லை. இன்பாச்சுவேஷன். இனக் கவர்ச்சி.. அவ்வளவுதான்..” என்று தீர்க்கமாகச் சொல்லியும் தங்களது காதலை ஊர்ஜிதமாக நம்பும்வகையில் அவர்களது பதிலும், நடிப்பும் அமைந்திருப்பது இந்தக் கதையில் ஒரு சிறப்பான இடம்.

இதேபோல், சமுத்திரக்கனியும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சம்பத் ராமும் வார்த்தைகளால் மோதிக் கொள்வதும், சாதிக் கட்சித் தலைவர் தங்களது சாதியின் பெருமைகளைப் பற்றி சமுத்திரக்கனியிடம் பேசுவதும் நாடு எங்கே போகிறது என்பதைக் காட்டுகிறது.

பரிதாபத்திலும், பரிதாபமாக ரோட்டோரமாக சேலையைத் தடுப்பாகக் கட்டி அதற்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற ஏழை மக்களின் வாழ்க்கையிலும் அரசு அதிகாரிகள் தங்களின் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தும்விதத்தையும் மிக எளிமையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒவ்வொரு இரவிலும் அந்த நடைபாதைவாசிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பயப்படும்படியான சம்பவங்களையும், அவர்களைச் சூழ்ந்திருக்கும் இருளைவிடவும் அதிகப் பயத்தைத் தரும் காவல் துறையின் சைரன் ஒலி சப்தங்களையும்.. அதனுடன் அந்தக் காவல்துறை அதிகாரிகள் காட்டும் முறைகேடான கொடூரமான பேச்சுக்கள்.. விசாரணைகளையும் சற்று பயத்துடன் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

நித்திஷ் வீரா தாங்கள் திருமணமானவுடன் வசிக்கப் போகும் குடிசை வீிட்டுக்கு காதலியை அழைத்து வந்தவுடன் ‘இனிமேல் நான் குளிக்கும்போது யாரும் எட்டிப் பார்க்க மாட்டாங்கள்ல..?’ என்று காதலி கேட்கும் கேள்வி அத்தனை நவநாகரிக மனிதர்களையும் நோக்கித்தான் பாய்கிறது.

நடைபாதைகளில் வசிக்கும் இளம் பெண்கள் தாங்கள் சந்திக்கும் பிரச்சினைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பதும்.. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள.. ஒரு ஓலை குடிசையாவது தங்களுக்கு வேண்டும் என்று அவர்கள் தவிக்கும் தவிப்பும் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

இன்னொரு பக்கம்.. தன்னுடைய மகனின் உயிரைக் காப்பாற்ற இவ்வளவு பெரிய உலகத்தில் ஒருவர்கூட இல்லையே என்று தவிக்கும் அப்பன்.. காமெடியனாகவே பார்க்கப்படும் நான்.. என் வாழ்க்கையிலேயும் அப்படியேதான் இருக்க வேண்டுமா என்று தவியாய் தவித்து திருடியாவது மகனைக் காப்பாற்றுவோம் என்று முடிவெடுக்கும்போது… அப்படி செய்வதிலும் ஒரு நியாயம் உண்டு என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

நடிகர் முனீஸ்காந்த் தனது பண்பட்ட நடிப்பினால் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். அவரது மனைவி அதனை வாங்க மறுத்து திருப்பியனுப்ப.. அவள் வாக்கே தேவ வாக்கு என்பதைப் போல திரும்பவும் ஓடி வந்து பணத்தைக் கொடுக்க முனையும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் பாராட்டுக்குரியது. முனீஸ்காந்தின் சிறப்பான நடிப்புதான் அந்தப் பகுதியை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறது.

இறுதியில் கிளப்புகளில் அரைகுறை ஆடைகளில் நடனமாடி மகிழ்வித்து சமூகத்திற்கே கேலிக் கூத்தாக இருக்கும் ஒரு பெண்… ஓடோடி வந்து தன்னுடைய சக ஊழியனான பபூனின் மகனுக்கான சிகிச்சைக்குரிய பணத்தைக் கொடுக்கும் காட்சி சற்று நெகிழ்ச்சியைக் கொடுக்கும் திரைக்கதை.

தான் பெற்று.. கஷ்டப்பட்டு படிக்க வைத்த மகன்.. தான் சொல்ல வருவதைக்கூட கேட்க நேரமில்லாமல் தனக்கு ஆணையிடும் நோக்கில் தன் பிரச்சினையைப் பற்றி மட்டுமே பேசும் சுயநலக்காரனாக இருப்பதை அறியும்… அந்தத் தந்தையின் துயரத்தை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தீக்கதிர்’ குமரேசன் இயல்பாகக் காட்டியிருக்கிறார்.

அந்த அவமானத்துடன் ‘யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. நாளைக்கே நாம் திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று அவர் முடிவெடுத்து அதைச் செயல்படுத்தும்போது அந்தத் தம்பதிகளை மனதார வாழ்த்தத்தான் நம் மனமும் தோன்றுகிறது..! இஸ்லாமியை பெண்மணியாக நடித்திருக்கும் நாச்சியாள் சுகந்தியின் திருமணத்தின்போது இருக்கும் குழப்பமான அந்தத் தோரணை.. தன் மகள் நேரில் வந்து வாழ்த்தியவுடன் முகமலரும் அந்தக் கணம்.. சட்டென்று மணமகளாய் நம் கண்களுக்குத் தெரிகிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் இருவருக்கும்..!

ஒரு நள்ளிரவில் துவங்கும் படம் மறுநாள் பகலில் முடிகிறது. இந்த 24 மணி நேர காட்சிகளில் ஒளிப்பதிவாளர் சிபின் சிவனின் ஒளிப்பதிவு மீடியம் பட்ஜெட் படங்களுக்கே உரித்தானதாக உள்ளது. நித்திஷ் வீரா-சாவந்திகாவின் பொதுக் கழிப்பறை காதலை மிகுந்த ரொமான்ஸூடன் படமாக்கியிருக்கிறார்கள்.

மாண்டேஜ் காட்சிகளாகத் தொகுக்கப்பட்ட காட்சிகளுக்கேற்ற பாடல்களும் திரையில் ஓடின. ‘பற பற பற’ பாடல் ஒட்டு மொத்தப் படத்தின் கதையையுமே சொல்லிவிட்டது.

படம் மூன்றுவித சம்பவங்களை ஒன்றாக்கி காட்டுகிறது என்பதால் அந்த வேகத்தைக் காட்டும்விதமாக படத் தொகுப்பினை செய்திருக்கிறார் படத்தின் தொகுப்பாளர் சாபு ஜோஸப். ஆனாலும் சில இடங்களில் படத்தின் வேகம் திரைக்கதையினால் போதாமல் இருக்கிறது.

ஆணவக் கொலையின் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் வாக்கு வங்கிப் பிரச்சினையை இந்தப் படத்தில் தெளிவாக முதலிலேயே காட்டிவிட்டார்கள். ஏதோ ஒரு தோட்டத்தில் இருக்கும் தலைவர் பேச்சிலேயே ‘நம் பிள்ளை வாழ்க்கைக் கெடக் கூடாதுல்ல..’, ‘நம் பிள்ளைகளை மயக்கிட்டானுக’ என்றெல்லாம் பேசி.. சாதிய வன்மத்தைத் தூண்டுவதை அப்படியே திரைக்கதையாக வைத்திருக்கிறார் இயக்குநர்.

சாதிய வன்மம் சக மனிதர்களையே கொன்று குவிக்கிறது என்றாலும் அதுதான் சமூக நீதி என்று நினைக்கும் சாதி வெறி பிடித்தவர்கள்.. தங்களது சாதி வெறி என்ற செடிக்கும் ஊற்றும் நீராக தங்களது சாதிப் பாசத்தைக் காட்ட நடிக்கிறார்கள். பெற்றோர்கள் தங்களது சாதிய அரசியல்வாதிகளிடமிருந்து விலகி நின்று தங்களது குடும்பத்தை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் இந்த ஆணவக் கொலைகளை நிச்சயம் தடுக்கலாம். இதையும் இப்படம் போதிக்கிறது.

சாதியம் கடந்த காதலர்களான சாஜூ மோன், சாந்தினிக்காக படம் பார்த்தவர்களையே உச்சுக் கொட்ட வைக்கும் அளவுக்கு இறுதியில் காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர்.

இதேபோல் தங்களது சொந்த வாழ்வில் சாதியத்தை எதிர்த்ததற்காக தங்களது மகனையே இழந்த பின்பும் இன்னமும் அந்த மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் அம்பேத் என்னும் சமுத்திரக்கனி மற்றும் அவரது மனைவியின் கதாபாத்திரம் மேன்மையானது.

ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் சமுத்திரக்கனி இந்த சாதியப் பிரச்சினைக்காக எதிர்கொள்ளும் ஆபத்துகள்தான் தற்போதைய தமிழகத்தின் நிலைமையை பறை சாற்றுகிறது. இது போன்ற போராளி கதாபாத்திரங்கள் சமுத்திரக்கனியின் தோற்றத்திற்கும், அவரது குரலுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறது. சில படங்களில் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிப் போகிறார். இதிலும் அப்படியே..!

அரசியல்வாதி வில்லனை இப்படி பட்டவர்த்தனமாய் தோட்டத்தை வைத்து மிக எளிதாக அடையாளம் காணும் அளவுக்கு உருவாக்கியிருக்கும் இயக்குநரின் தைரியத்தைப் பாராட்டுகிறோம்.

சாதிப் பெருமை பேசியே கூட்டம் சேர்க்கும் ரவுடிகள் எப்படி ஒன்றிணைகிறார்கள் என்பதையும் படத்தில் உண்மையாகவே காட்டியிருக்கிறார்கள். இறுதிக்கட்டப் போரில் நித்திஷ் வீராவின் மரணம் சோகமானது. இதேபோல் காதலன் சாஜூமோன் கொல்லப்படுவதும் இப்போதும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதுதான்..!

என்னதான் காவல்துறை நேர்மையாக இருப்பதாக சொன்னாலும், சாதியும், அரசியலும் இங்கே ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்திருக்கும்வரையிலும் இது போன்ற கொடுமைகளைத் தடுப்பதென்பது முடியாத காரியம் என்பதையே இந்தப் படத்தின் முடிவும் உணர்த்துகிறது.

சாதீயக் கொடுமைகளை எதிர்க்கும், ஆணவக் கொலைகளை கண்டிக்கும் ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள தமிழ் இயக்குநர்கள் பட்டியலில் இயக்குநர் வ.கீராவும் இடம் பிடித்துவிட்டார்.

புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும், அவர்கள் சந்திக்கும் அநியாயங்களையும், எதிர்கொள்ளும் பாராட்டங்களையும் இணைத்து கதையாக்கி.. அதனையும் ஒரு இழையில் கொண்டு வரும் திரைக்கதை யுக்தியில் கொணர்ந்து தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத்தில் இந்தப் படத்தை பூரணமாகிகியிருக்கிறார் இயக்குநர் வ.கீரா. இதற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்.

சாதீயத்தின் பல அடுக்கு கொடுமைகளை எதிர்த்து இதுவரையிலும் பலதரப்பட்ட படங்கள் வந்துவிட்டன. ஆனால் இன்னமும் சாதியக் கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆக. இது போன்ற இன்றைய தலைமுறையினருக்கான சாதிய விழிப்புணர்வுக்கான திரைப்படங்களின் தேவையும் அத்தியாவசியமாக இருக்கிறது.

இது போன்ற படங்கள் படம் பார்க்கும் சில ரசிகர்களின் மனதிலாவது மாற்றத்தை உண்டு செய்தால் அதுவே இந்தக் கலைத் துறை நமது சமூகத்திற்கு செய்யும் மிகப் பெரிய மாற்றமாகவும், உதவியாகவும் இருக்கும். இதற்காக இது போன்ற சமூக விழிப்புணர்வு கொண்ட படங்கள்.. சாதீய எதிர்ப்பு திரைப்படங்கள் வர வேண்டியது அவசியமாகிறது.. !

வரவேற்போம்.!!

வாழ்த்துவோம்.!!!

Our Score