பிரபல யூ டியூப் சேனலான ‘பிளாக் ஷீப்’ நிறுவனமும் ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மோண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான முருகானந்தமும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
இந்தப் படத்தில் ‘மைக் செட்’ ஸ்ரீராம், ‘பிளாக் ஷீப்’ அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோரும் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்களும், நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன், இசை – சந்தோஷ் தயாநிதி, கலை இயக்கம் – வினோத், படத் தொகுப்பு – தமிழ், ஆடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் – அருண் ராஜா, நடன இயக்கம் அசார், சண்டை காட்சிகள் – பில்லா ஜெகன், தயாரிப்பு நிர்வாகி – துரை, பாடல்கள் – மதுரை பாலா, அ.ப.ராஜா, மக்கள் தொடர்பு – யுவராஜ்.
இந்தப் படத்தின் மூலமாக தமிழகத்தின் பிரபல பேச்சாளரான ராஜ்மோகன் இயக்குநராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் ‘புட் சட்னி’, ‘தமிழ் வணக்கம்’ உள்ளிட்ட யூ டியூப் சேனல்களில் மிகவும் பிரபலமானவையாகும்.
பொதுவாக பள்ளிக் கூடம் சார்ந்த திரைப்படம் என்றால் நமது பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால், இந்த திரைப்படம் தற்கால 2000-ம் வருடத்திய தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.
யூ டியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவிற்கு வந்து நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், ஒரு யூ டியூப் சேனலே சொந்தப் படத் தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது.
இன்னமும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த பூஜை நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்.கே. புரோடக்சன்ஸ் கலை, இயக்குநர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெள்ளித் திரைக்கு வர உள்ளது.