நாளை ‘புலி’ படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் இன்று ‘புலி’ படத்துடன் தொடர்புடைய அனைவரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் தற்போது சோதனையிட்டு வருகின்றனர். மொத்தம் 32 இடங்களில் சோதனையாம்.
நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் பிடிசெல்வகுமார், ஷிபு தமீம், ஹன்ஸிகா, சமந்தா, நயன்தாரா ஆகியவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் தொடர் சோதனைகள் நடந்து வருகின்றன. கூடுதலாக விஜய்யின் அடுத்தப் படத்தைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவின் அலுவலகத்திலும் ரெய்டாம்..!
பொதுவாகவே பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகும் நேரத்தில் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள்.. சம்பந்தப்பட்ட படத்தின் தயாரிப்பாளர்களிடையே பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். இது கருப்பாகவும் இருக்கலாம். அல்லது வெள்ளையாகவும் இருக்கலாம். இதற்காகவே அடிக்கடி ரிலீஸ் சமயத்தில் ரெய்டு செய்வது வருமான வரித்துறையினரின் வழக்கம்தான்.
அதுபோலத்தான் இந்த ரெய்டு என்கிறார்கள் சம்பந்தப்பட்டவர்கள். இதில் கூடுதலாக சமந்தா, நயன்தார வீட்டிலெல்லாம் ஏன் என்றால்.. ‘புலி’ படத்தை மட்டுமே குறி வைத்ததாக யாரும் நினைக்க்க் கூடாது அல்லவா? அதனால்தான் என்கிறார்கள்.
சமந்தா தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். நயன்தாராவும் வெளியூரில் இருக்கிறாராம். எல்லாம் தெரிந்தும் சைடாக ‘ஏதாவது’ கிடைத்தால்கூட பதவி உயர்வுக்கு வழி வகுக்குமே என்றெண்ணி களத்தில் குதித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
‘புலி’ படத்தைப் பொறுத்தவரையில் 100 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம். ரஜினியின் படங்களுக்கு பின்பு ஏரியாவாரியாக அதிக தொகைக்கு கைமாற்றப்படும் படமாகவும் இது இருக்கிறது என்பதால் வருமான வரித்துறையினரின் கவனிப்பில் எப்போதும் இருந்து வந்தது.
விஜய்யின் படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்று படத்தின் விளம்பரத்திற்காக இரு நாட்களுக்கு முன்பாக கொழுத்திப் போடப்பட்ட செய்தியொன்றுதான் இப்போதைய இந்த திடீர் ரெய்டுக்கு காரணமாக அமைந்துள்ளது என்கிறார்கள்.
படத்தின் விளம்பரத்திற்காக செய்யப்பட்ட பைசா செலவில்லாத மவுத் டாக், இன்றைக்கு இப்படியொரு சிக்கலை அவர்களுக்கே ஏற்படுத்தியிருக்கிறது..!
எப்படியிருந்தாலும் ‘புலி’யின் சீற்றத்தை நிறுத்த முடியாது என்பதும் உண்மை..!









