இனம் பட விவகாரம்-உத்தம வில்லனுக்கும் சிக்கல்..!

இனம் பட விவகாரம்-உத்தம வில்லனுக்கும் சிக்கல்..!

‘இனம்’ படத்திற்கான திரையுலக எதிர்ப்புகளை நாசூக்காக தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் மூலமாக சமாளித்துவிட்ட தயாரிப்புத் தரப்பினர் எதிர்பாராமல் வெளிநாடுகளில் இருந்து வந்து கொண்டிருக்கும் எதிர்ப்பலைகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கின்றனர்.

உள்நாட்டு வசூலுக்கு அடுத்து ஒரு தமிழ்ப் படத்திற்கு மிகப் பெரிய பலமே, எஃப்.எம்.எஸ். எனப்படும் வெளிநாட்டு உரிமையின் கீழ் கிடைக்கும் பணம்தான்.. அ்மெரிக்கா, லண்டன், கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருக்கும் ஈழத தமிழர்கள்தான் இந்த வெளிநாட்டு பண வசூலுக்கு முதல் முக்கியக் காரணம்.. லண்டனிலும், கனடாவிலும் இவர்களைத் தவிர்த்துவிட்டு தமிழ்ப் படங்கள் ஓடுவது என்பதே முடியாத காரியம்.

இந்த நேரத்தில் ‘இனம்’ படம் பற்றி கேள்விப்பட்ட ஈழத் தமிழர்கள் பலரும் சந்தோஷ்சிவன் மீது பெரும் கோபத்தில் இருக்கிறார்கள். தேவையில்லாமல் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டு தனது பெயருக்கும், கம்பெனிக்கும் பெரும் சிக்கலையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி.

இந்தப் படம் ஈழ ஆதரவுக்கு எதிரானது என்கிற ஒரேயொரு விஷயமே இந்தப் படத்தை உலகத்தில் இருக்கும் ஈழத் தமிழர்கள் அனைவருமே புறக்கணிக்க காரணமாக இருக்கிறது. இந்தப் படத்தை பரப்புரை செய்யும் அனைவரையுமே புறக்கணிக்கும் முடிவில் அந்தந்த நாடுகளில் வசிக்கும் ஈழ அகதிகள், மக்களின் அமைப்புகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

நேற்றைக்கே திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு எந்தவிதத்திலும் எஃப்.எம்.எஸ். விஷயத்தில் ஒத்துழைப்பதில்லை என்ற முடிவை வெளிநாட்டு ஈழ வர்த்தகர்கள் எடுத்துவிட்டார்களாம்..

இந்த முடிவு திருப்பதி பிரதர்ஸ் தற்போது தயாரித்து வரும் கமல்ஹாசனின் ‘உத்தமவில்லன்’ படத்திற்கு எதிராகவும் இருக்கிறது.. பல கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு வெளிநாட்டு உரிமையின் மூலம் கிடைக்கவிருக்கும் கோடிகள் கிடைக்காமல் போனால் இதனால் பாதிக்கப்படப் போவது லிங்குசாமியும், கமல்ஹாசனும்தான்..!

தற்போது மும்பையில் சூர்யாவை வைத்து படம் இயக்கிக் கொண்டிருக்கும் லிங்குசாமிக்கும், அதே படத்தில் ஒளிப்பதிவாளராக இருக்கும் சந்தோஷ்சிவனுக்கும் இப்போது தலையாய பிரச்சினையாக இந்தப் படம் உருவாகிவிட்டது..!

இந்த இரண்டு கிரகங்களுமே ஒரே படத்தில் பணியாற்றும் சூர்யாவின் ‘அஞ்சானு’க்கும் சிக்கல் வரப் போவதை உணர்ந்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதில் இருந்து வெளிவர வேண்டி முதல்படியாகத்தான் சர்ச்சைக்கிடமான சில காட்சிகளை நீக்கியிருப்பதாக லிங்குசாமி அறிவித்திருக்கிறார்.

இருந்தாலும், ஒட்டு மொத்தப் படத்தையுமே புறக்கணிப்பதே ஈழத் தமிழர்களின் எண்ணமாக இருப்பதால் யாரை வைத்து எப்படி சமரசம் பேசுவது என்று தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார்கள் படக் குழுவினர்.

நேற்றைக்கே தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் ஒரு டீம் தனியே நிர்வாகிகளிடம் சென்று இயக்குநர்கள் சங்கம் அவசரப்பட்டு இதில் தலையைக் கொடுத்திருக்கக் கூடாது.. யாரைக் கேட்டு ஆதரவு கொடுத்தீர்கள் என்றெல்லாம் கேட்டுவிட்டார்களாம்..

ஆக.. இவர்களை வைத்து பேசுவது என்பதும் முடியாத விஷயமாதலால் வெகு சீக்கிரம் லிங்குசாமியும், சந்தோஷ் சிவனும் மீடியாக்களை சந்தித்து தங்களது விளக்கங்களை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

Our Score