full screen background image

நடிப்பு இல்லைன்னா டப்பிங் வாய்ஸ்-நடிகர் சுப்பு பஞ்சுவின் கேரியர்..!

நடிப்பு இல்லைன்னா டப்பிங் வாய்ஸ்-நடிகர் சுப்பு பஞ்சுவின் கேரியர்..!

பிரபல படத் தயாரிப்பாளர், கவிஞரான பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு. ரேடான் நிறுவனத்தின் ‘அரசி’ தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர். 2008-ம் ஆண்டு வெளிவந்த ‘சரோஜா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் நடிகராக அறிமுகமானார்.

தொடர்ந்து ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவின் அண்ணனாக நகைச்சுவை கலந்த கதாபாத்திரத்தில் யதார்த்தமாக நடித்து தமிழ் சினிமாவில் தன்னை ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டார். அதையடுத்து ‘மங்காத்தா’, ‘கலகலப்பு’, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘சேட்டை’, ‘பட்டத்து யானை’, ‘தலைவா’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘பிரியாணி’, சமீபத்தில் வெளிவந்த ‘நிமிர்ந்து நில்’ உட்பட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்போதும் பல படங்களில் நடித்தும் வருகிறார்.

நடிகராக மட்டுமல்லாமல் அவருடைய அருமையான குரல் மூலம் ‘வாய்ஸ் ஆக்டர்’ ஆகவும் ‘சிவாஜி’, ‘கந்தசாமி’ படங்களில் பின்னணிக் குரல் கொடுத்து ‘எங்கேயோ கேட்ட குரல்’ மாதிரி இருக்கிறதே என அவரைப் பற்றி பேசவும் வைத்தார். ‘சிவாஜி’ படத்தில் வில்லனாக நடித்த சுமன் மற்றும், ‘கந்தசாமி’ படத்தில் வில்லனாக நடித்த முகேஷ் திவாரிக்கும் பின்னணி பேசியது இவர்தான்.

தற்போது, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில், இந்தியா முழுவதும் மே 1-ம் தேதி வெளிவர இருக்கும் ‘தி அமேசிங் ஸ்பைடர் மேன் 2’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ள ‘ஜேமி ஃபாக்ஸ்’-க்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார் சுப்பு பஞ்சு.

2012-ம் ஆண்டு வெளிவந்த ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன்’ படத்தின் அடுத்த பாகமாக வெளிவர உள்ள ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ திரைப்படம் உலக அளவில் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் 2-டி, 3-டி, ஐமேக்ஸ் 3-டி மற்றும் ஆரோ 11.1, டால்பி அட்மாஸ் ஆகிய தொழில் நுட்பங்களில் திரையிடப்பட உள்ளது.

“மிகப் பிரம்மாண்டமான ஹாலிவுட் படமான ‘தி அமேசிங் ஸ்பைடர்மேன் 2’ படத்தில் மிக முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்கு பின்னணி குரல் கொடுத்தது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கும் படமாக இந்த படம் அமையும். ஜேமி ஃபாக்ஸ் நடித்துள்ள கதாபாத்திரத்திற்கேற்ப ஏற்ற, இறக்கங்களுடன் இருக்கிற என்னுடைய பின்னணிக் குரலும் இந்தப் படத்தில் பேசப்படும் விதத்தில் இருக்கும்..” என ஹாலிவுட் படத்தில் குரல் கொடுத்ததைப் பற்றி மகிழ்ச்சி பொங்கக் கூறுகிறார் சுப்பு பஞ்சு.

ஓகே.. நடிப்பு இல்லைன்னா வாய்ஸ்.. பொழைச்சுக்குவீங்க பிரதர்..!

Our Score