full screen background image

இமைக்கா நொடிகள் – சினிமா விமர்சனம்

இமைக்கா நொடிகள் – சினிமா விமர்சனம்

கேமியோ ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

படத்தின் நாயகியாக நயன்தாரா நடித்திருக்கிறார். மேலும் அதர்வா, ராஷி கண்ணா, தேவன், ஆர்.ஜே.ரமேஷ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் ஒரு மிக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி ஒரு கவுரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

 ‘டிமாண்டி காலனி’ படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். வசனம் – பட்டுக்கோட்டை பிரபாகர், ஒளிப்பதிவாளர் – ஆர்.டி.ராஜசேகர், இசை – ஹிப்ஹாப் தமிழா ஆதி, படத் தொகுப்பு – புவன் சீனிவாசன், கலை இயக்கம் – செல்வக்குமார், சண்டை இயக்கம் – ஸ்டன் சிவா, ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், தயாரிப்பு நிறுவனம் – கேமியோ பிலிம்ஸ், தயாரிப்பாளர் – சி.ஜெ.ஜெயக்குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்கிரா, ரேகா, டிஒன்.

அறம், கோலமாவு கோகிலா ஆகிய படங்களை தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகப் பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வரிசையில் அவர் கதை கேட்டு, கதை பிடித்துப் போய் அவரே தயாரிப்பாளரை பிக்ஸ் செய்து கொடுத்து படத்தின் உருவாக்கத்திற்கும முழுமுதற் காரணமாகவும் இருந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்.

சி.பி.ஐ.யில் கண்காணிப்பாளர் ரேன்க்கில் பணியாற்றுபவர் அஞ்சலி விக்கிரமாதித்யன் என்னும் நயன்தாரா. அவருக்குக் கீழ் அதிகாரியாக பணியாற்றுபவர் தேவன். நயன்தாராவின் தம்பி அதர்வா. அதர்வாவின் காதலி ராஷி கண்ணா.

பெங்களூரில் 5 ஆண்டுகளுக்கு முன்பாக 3 இளைஞர்கள் வரிசையாக படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை வழக்கை பெங்களூர் போலீஸார் விசாரித்தனர். ஆனால் குற்றவாளியை நெருங்கிய சமயம் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

அப்போது இந்த வழக்கை நயன்தாராதான் விசாரித்தார். விசாரணையின் முடிவில் ருத்ரா என்னும் அந்த சீரியல் கொலைகாரன் இவன்தான் என்று ஒருவனை சுட்டுக் கொலை செய்து கேஸை முடித்து வைத்தார் நயன்தாரா.

கதை இப்போது ஆரம்பிக்கிறது. ஜென்ஸி என்னும் பெண்ணை ருத்ரா என்னும் அனுராக் காஷ்யப் கடத்தி வைத்திருக்கிறார். 2 கோடி ரூபாய் பணத்தை ஜென்ஸியின் அப்பாவிடம் கேட்கிறார் அனுராக். ஜென்ஸியின் அப்பா போலீஸுக்கு போகாமல் சி.பி.ஐ.க்கு செல்கிறார். இப்போது சி.பி.ஐ. வழக்கை பதிவு செய்துவிட்டு அனுராக்கிற்கு வலை விரித்திருக்கிறது.

ஆனால் அனுராக் சி.பி.ஐ.யிடம் சிக்காமல் பணத்தையும் வாங்கிக் கொண்டு ஜென்ஸியையும் படுகொலை செய்துவிடுகிறார். கூடவே தொலைக்காட்சிகளுக்கு போன் செய்து அஞ்சலி மீது கடும் விமர்சனத்தை வைக்கிறார். அஞ்சலிக்கும், அவருக்கும் இடையில் முன் விரோதம் இருக்குமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அவரது பேச்சு இருக்கிறது.

அடுத்து ஒரு அமைச்சரின் மகனையும் கடத்துகிறார் அனுராக். இப்போது தந்திரமாக பணத்தை அஞ்சலியிடம் கொடுத்தனுப்பும்படி சொல்லிவிட்டு அவரிடத்தில் இருந்தே பணத்தையும் வாங்கிக் கொண்டு அமைச்சரின் மகனையும் படுகொலை செய்கிறார் அனுராக்.

விஷயம் மிக சீரியஸாக.. முன்பு சீரியல் கொலைகளை செய்த ருத்ராதான் நான் என்று திரும்பத் திரும்ப டிவிக்களில் சொல்கிறார் அனுராக். அஞ்சலியோ அதை நம்பத் தயாராக இல்லை. இதில் யாரோ சூழ்ச்சி செய்து விளையாடுவதாகவே நினைக்கிறார்.

மூன்றாவதாக அதர்வாவின் காதலியான ராஷி கண்ணாவைக் கடத்திச் சென்று அவரைக் கொலை செய்ய முயல்கிறார் அனுராக். இப்போது தண்டத் தொகையை அதர்வா மூலமாக எடுத்துக் கொள்கிறார் அனுராக். இதனால் சி.பி.ஐ.யும், போலீஸும் அதர்வாதான் சீரியல் கில்லர் ருத்ரா என்று தவறாக நினைக்கிறது.

ஆனாலும் நயன்தாரா புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு ராஷி கண்ணாவைக் காப்பாற்றினால் அவர் பேச்சு மூச்சில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இன்னொரு பக்கம் அதர்வா தலைமறைவாகிறார். தம்பிக்கு சப்போர்ட் செய்கிறாரோ என்கிற சந்தேகத்தில் நயன்தாராவும் சஸ்பெண்ட்டாகி ஹவுஸ் அரெஸ்ட்டில் இருக்கிறார்.

தன்னுடைய அக்காதான் குற்றவாளியோ என்று அதர்வாவே சந்தேகப்படும் அளவுக்கு அனுராக் டிராமா போடுகிறார். அதர்வாவும் இதை நம்புகிறார். இப்போது அனுராக், அதர்வாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையில் புகைச்சலை உருவாக்கிவிட்டு தான் தப்பிக்க நினைக்கிறார்.

அவர் நினைத்தது நடந்ததா.. அனுராக்கை நயன்தாரா கைது செய்தாரா.. அதர்வா பழி வாங்கினாரா.. ராஷி கண்ணா என்ன ஆனார்.. உண்மையில் அந்த சீரியல் கில்லர் யார் என்பதையெல்லாம் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!

நயன்தாராவின் அழகான முகம் அடிக்கடி குளோஸப்பில் காட்டப்படுவதிலேயே காட்சிகளை நகர்த்தியிருப்பதால் அதை ரசிப்பதா அல்லது அவரது பேச்சைக் கேட்பதா.. கதையைப் பார்ப்பதா என்கிற குழப்பமும் ஏற்படுகிறது.

நயன்தாராவின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படி ஏதுமில்லை. ஆனால் சில சுவையான முக பாவனைகளை அவரது குளோஸப் காட்சிகள் உணர்த்துகின்றன. அவற்றோடு நயன்ஸின் ரசிகர்களை திருப்தி செய்திருக்கிறார் இயக்குநர்.

அதர்வா காதலுக்காக ஏங்கும் காதலனாக உருகியிருக்கிறார். காதலியைக் காணத் துடித்தபடியே இருக்கும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடையிடையே வந்து வந்து தொந்திரவு செய்திருப்பதால் மெயினான கதையை நம்மால் ரசிக்கவே முடியவில்லை.

இடைவேளைக்கு பின்பு கேம் ஸ்டார்ட் என்று அனுராக் சொல்வதும், கேம் ஓவர் என்று அதர்வா சொல்லிக் கதையை முடிப்பதுவரையிலும் இருவருக்குமிடையேயான அந்தப் போர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் பரபரப்பானவைதான். ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

ராசி கண்ணாவின் அறிமுகக் காட்சி ரசனையானது. இது ஒன்றைத்தான் இயக்குநரின் டச்சாகச் சொல்ல முடிகிறது. ராசி நன்றாகவே நடித்திருக்கிறார். தன்னை அனாதை என்று காதலனே குத்திக் காட்டிய பின்பு காதலை முறித்துக் கொண்டு போகும்போதும், பெங்களூரில் சந்திக்கும் அதர்வாவை சந்திக்கவே விருப்பமில்லை என்று வருத்தப்பட்டு சொல்லும்போது பாவமாகிப் போய் நிற்கிறார். ஆனால் கதையோடு ஒன்றாத திரைக்கதை என்பதால் நமக்குத்தான் ஹி. ஹி.. ஹி… என்றாகிவிட்டது.

படத்தில் கொடுத்த சம்பளத்திற்கேற்ப கலக்கியிருப்பவர் சந்தேகமேயில்லாமல் அனுராக் காஷ்யப்தான். இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலமே இவர்தான். தன்னுடைய உடல் மொழியாலும், அழுத்தமான தமிழ் உச்சரிப்பாலும், அவருக்குக் கிடைத்த கம்பீரமான குரலாலும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்திழுத்திருக்கிறார். இவருக்குக் குரல் கொடுத்திருக்கும் இயக்குநர் மகிழ் திருமேனிக்கு நமது வாழ்த்துகள்.

அனுராக்கின் உடல் மொழியையும், நடிப்பையும் 360 டிகிரி அளவுக்குப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இதேபோல் நயன்தாராவையும் பார்க்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அனுராக் வரும் காட்சிகளிலெல்லாம் அவரது வில்லத்தனத்தை காட்டும்விதமாய் கேமிரா கோணங்களையும், இயக்குதலையும் பதற வைத்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. அனுராக்கை இந்தாண்டின் மிகச் சிறந்த வில்லன் நடிகர் என்று இப்போதே சொல்லிவிடலாம்.

அனுராக், நயன்தாராவை கார்னர் செய்து பேசும் பேச்சுக்களும், தன்னுடைய குரலில் காட்டும் நடிப்பையும் கூட நம்மால் பெரிதும் ரசிக்க முடிகிறது. வெல்டன் ஸார்..!

விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்திருந்தாலும் “ஆர் யு ஓகே பேபி” என்று நயன்தாராவிடம் கேட்கும் அழகே அழகு. தன் மகளுக்கு அறிவுரை சொல்லும்விதமாக காரோட்டியபடியே அவர் சொல்லும் வசனங்கள் சுவையானவை. பாடல் காட்சிகளில் அவரது தற்போதைய நிலை தெளிவுபடுத்தப்பட்டாலும் விஜய் சேதுபதிக்கு பெண்களிடையே இருக்கும் நல்ல பெயரை இந்தப் படத்தின் மூலமாகவும் அறுவடை செய்திருக்கிறார் இயக்குநர்.

நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் அந்தக் குட்டிப் பொண்ணுக்கு ஒரு ஸ்வீட் ஷொட்டும், முத்தமும்..! செம வாய் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்தச் சுட்டிக் குழந்தையைச் சொல்லலாம்.

ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் டைப் படங்களுக்கேற்ற இசையையும், ஒளிப்பதிவையும் கேட்டு வாங்கியிருக்கிறார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜேசகர் தன் ஒளிப்பதிவில் குறை வைக்காமல் வழங்கியிருக்கிறார். முதல் டூயட் பாடல் காட்சியில் சுமாரான அழகு கொண்ட ராசி கண்ணாவை ஜோரான அழகியாக காட்டியிருக்கிறார்.

முதல் காட்சியில் ஒரு ஏரியல் ஷாட்டில் யாருய்யா இந்த ஒளிப்பதிவாளர் என்று ஒரு நிமிடம் யோசிக்க வைத்த ஆர்.டி.ராஜசேகர் படம் முழுவதிலும் பல முறை இதேபோல் தனியாகப் பாராட்டைப் பெறுகிறார். சண்டை காட்சிகளிலும், மருத்துவமனை சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் கவனமாக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.

அதேபோல் இந்தக் காட்சிகளை மிக அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார் படத் தொகுப்பாளர். அவருக்கும் நமது பாராட்டுக்கள். பின்னணி இசையில் கொஞ்சம், கொஞ்சம் டென்ஷனை கூட்டும்வகையில் இசையமைத்திருக்கும் ஹிப்ஹாப் ஆதிக்கு நன்றி. ஆனால் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகமாக மட்டுமே இருக்கிறது.

இடைவேளைக்கு பின்பு வரும் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்டுகளும், நயன்தாரா-விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் எதிர்பாராதவை. மிக அழுத்தமானவை. ஆனால் சி.பி.ஐ.யில் ஒரு உயர் அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் இது போல் தொடர் கொலைகளுக்குக் காரணமாக இருப்பாரா.. ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் அவரால் அதை செய்ய முடியுமா.. அவ்வளவு இரும்பு மனம் கொண்டவரா அஞ்சலி விக்ரமாதித்தயன்..?

அழுத்தமான இயக்கத்தை படம் முழுவதும் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒரு கொலை வழக்கை துப்பறியும் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படம் என்றே சொன்னாலும் அதைக் கெடுப்பதுபோல் அதர்வா-ராசி கண்ணாவின் காதல் கதையை படத்தில் வைத்தது ஏன் என்று தெரியவில்லை.

இந்தப் படத்தில் மூன்று படத்தின் கதைகள் ஒன்று சேர்ந்துள்ளன. ஒன்று நயன்தாரா-விஜய்சேதுபதி சம்பந்தமான காதல் கதை.. இரண்டு அதர்வா-ராசி கண்ணாவின் காதல் கதை. மூன்றாவது அனுராக்-நயன்தாராவின் புலி-மான் வேட்டை கதை. இந்த மூன்று கதைகளையும் ஒன்றாகச் சேர்த்து வைத்து 2 மணி நேரம் 50 நிமிடத்தில் பெரும் படமாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். இதுவே சற்று அயர்ச்சியைக் கொடுக்கிறது.

முதலில் இந்தப் படத்திற்கு அதர்வா தேவையே இல்லை. இது ஹீரோயிஸ படமும் இல்லை. ஹீரோயிஸத்திற்காக திரைக்கதையில் ஓட்டையைப் போட்டிருப்பதால் இடைவேளைக்கு பின்பு லாஜிக் மேல் லாஜிக்காக இடிக்கிறது. நயன்தாரா ஒரு பக்கம் ஹீரோ போல் ஆக்சனைக் காட்ட இன்னொரு பக்கம் அதர்வா தன் ஹீரோயிஸத்தைக் காட்ட.. வில்லனான அனுராக் காஷ்யப் தன்னுடைய உண்மையான ஹீரோ வேஷத்தைக் காட்ட.. கடைசியில் படம் யாருக்கானது என்பதே தெரியாமல் போய்விட்டது.

அதர்வா-ராசி கண்ணா காதல் கதை இந்தப் படத்திற்குத் தேவையில்லாதது. அத்தனை நீளத்தை விட்டுவைக்காமல், தயவு தாட்சண்யம் பார்க்காமல் முதற்பாதியில் 25 நிமிடங்களையும் பிற்பாதியில் 15 நிமிடங்களையும் நீக்கினால் படம் மிகவும் கிரிப்பாக இருக்கும்.

ஒரு மருத்துவர்.. இன்றைய காலக்கட்டத்தில்.. தனது காதலி இன்னொரு பையனை ஹக் செய்வதைப் பார்த்துவிட்டு பொறாமைப்பட்டு சந்தேகப்படுகிறார் என்றெல்லாம் திரைக்கதை அமைப்பது அவர்களுக்கே காமெடியாகப் படுகிறது. அதர்வா ராசி கணணாவை சந்தேகப்படுவதற்கான சரியான காரணங்கள் படத்தில் சொல்லப்படாததால் அந்த காதல் போர்ஷனே போரடிக்கிறது. நம்ப முடியாததாகிவிட்டது.

பெங்களூரே பரபரப்பாக இருக்கிறது. அக்காள் ஒருத்தி சி.பி.ஐ.யில் அதிகாரியாகப் பணியாற்றுகிறாள். அவள் ஹேண்டில் செய்யும் கேஸ்தான் இப்போது பெங்களூரில் பரபரப்பு என்பதையெல்லாம் பற்றியெல்லாம் கேள்வியே படாமல் இருக்கும் இந்தக் கால இளைஞராக காட்டியிருப்பது அதர்வா மீதான ஈர்ப்பை பெருமளவுக் குறைத்துவிட்டது.

அதேபோல் அவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துக் காப்பாற்றிய பின்பு எழுந்த உடனேயே தன் காதலி எங்கே என்று கேட்கிறார். இப்போது காதலி முக்கியமா.. தன்னை எதற்காகச் சுட்டார்கள்.. யார் சுட்டார்கள்.. ஏன் சுட்டார்கள் என்பதையெல்லாம் கேட்டிருக்க வேண்டாமா..

அதிலும் லாஜிக் எல்லை மீறலின் உச்சக்கட்டமாக சி.பி.ஐ.க்கு இருக்கும் ஒரேயொரு துருப்புச் சீட்டான அதர்வாவை அவரது நண்பர்கள் எளிதாக சந்திப்பதும், அதர்வா தம்பித்து ஓடும் அளவுக்கு போலீஸார் பாதுகாப்பில் அசட்டையாக இருப்பதும் மிகப் பெரிய லாஜிக் ஓட்டைகள்.

அதேபோல் கிளப்பின் சிசிடிவி ரெக்கார்டு அறைக்குள் மிக எளிதாக நுழைந்து ஒரு மருத்துவம் படித்த நபர் கம்ப்யூட்டர்களை ஆபரேட் செய்து கேமிராவில் பதிவான பதிவுகளைத் தேடிப் பிடித்துச் சொல்வதெல்லாம் எந்த வகையான உண்மைத்தனம் இயக்குநரே..?

அதுதான் அனுராக்கின் உண்மை சுயரூபம்தான் தெரிந்துவிட்டதே. உடனேயே தனது மேலதிகாரிகளுக்கு போட்டோவை வாட்ஸ்அப்பில் அனுப்பி “இவர்தான் ருத்ரா. இவரை முதலில் பிடியுங்கள்…” என்று சொல்லியோ.. அல்லது போனிலோ பேசியிருந்தால் கடைசியான கிளைமாக்ஸ் வரைக்கும் போகத் தேவையே இல்லையே..?!

சி.பி.ஐ. அதிகாரிகளுக்கான நடத்தை விதிகளைக்கூட இயக்குநர் சரிவர படிக்கவில்லை போலும். துப்பாக்கியை பயன்படுத்த மாஜிஸ்திரேட், கலெக்டரிடம் அனுமதி பெற்று வைத்திருப்பதை நான்கைந்து இடங்களில் சொல்லியிருக்கும் இயக்குநர் அமைச்சரின் மகன் கடத்தப்பட்ட விவகாரத்தில் போலீஸுக்கு முந்திக் கொண்டு இதில் சம்பந்தப்பட்டது ஏன்.. வழக்கைக் கையில் எடுத்தது ஏன் என்பதையும் சொல்லாமலேயே கதையை நகர்த்தியிருக்கிறார்.

இப்படி  மூன்று ரீல்களுக்கு முன்னாலேயே முடித்திருக்க வேண்டிய திரைக்கதையை தேவையே இல்லாமல் இழு, இழுவென்று இழுத்திருக்கிறார் இயக்குநர்.

இப்போதும் சொல்கிறோம். தயவு தாட்சண்யமே இல்லாமல் அதர்வா-ராசி கண்ணா சம்பந்தப்பட்ட காதல் கதைகளை கத்தரித்துவிடுங்கள். நிச்சயமாக தியேட்டரில் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடுவார்கள்.

நம்மால் சொல்லத்தான் முடியும்..! சொல்லிவிட்டோம்..!!!

Our Score