full screen background image

இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கு : இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கு : இசை நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

இசையமைப்பாளர் இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு மனுவுக்கு இந்தியன் ரெக்காா்டு உள்ளிட்ட 3 இசை நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1980-களில் வெளியான இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களின் இசையைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இசையமைப்பாளா் இளையராஜா தொடுத்த மேல் முறையீட்டு மனுவுக்கு இந்தியன் ரெக்கார்டு உள்ளிட்ட 3 இசை நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா இசையமைத்து, கடந்த 1978-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான 20 தமிழ்ப் படங்கள், 5 தெலுங்கு படங்கள், 3 கன்னடப் படங்கள், 2 மலையாளப் படங்கள் என மொத்தம் 30 படங்களின் இசைப் பாடல்களுக்கான காப்புரிமையை அந்தப் படங்களின் தயாரிப்பாளா்களிடமிருந்து தாங்கள் பெற்றுள்ளதால், அந்தப் படங்களின் இசையையோ, பாட்டுகளையோ பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டுமெனக் கோரி சென்னை அண்ணா சாலையிலுள்ள இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்த 30 படங்களின் இசை, பாடல்களைப் பயன்படுத்த இளையராஜா மற்றும் மலேசியாவைச் சோ்ந்த அகி மியூசிக், ஹரியாணாவை சோ்ந்த யுனைசிஸ் இன்போ சொலியூஷன்ஸ் ஆகிய இரு மியூசிக் நிறுவனங்களுக்கு தடை விதித்து 2020 பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதில், “படத் தயாரிப்பாளா்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனத்துக்கு ஆதரவாக எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது.

படத் தயாரிப்பாளா்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை, பாடல்களின் காப்புரிமை இசையமைப்பாளா்களுக்கே உள்ளது. அந்த வகையில் ஒரு படத்தின் இசை தொடா்பான பணிகளுக்கு முதல் உரிமையாளா் இசையமைப்பாளா் மட்டுமே.

மேலும், இந்தியாவில் டிஜிட்டல் மீடியா உரிமம் என்பது 1996-ம் ஆண்டு முதல்தான் அமலில் உள்ளது. அந்த உரிமத்தை 1980-ல் வெளியான படங்களுக்கு கோர முடியாது..” என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமா்வில் நடைபெற்றது.

அப்போது, இளையராஜா தரப்பில் வழக்குரைஞா்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோர் ஆஜராகி, “இந்த வழக்கு வா்த்தகம் தொடா்பானது என்பதால், அது தொடா்பான அமா்வே விசாரிக்க வேண்டும். ஆனால், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு அந்த அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும்…” என வாதிட்டனா்.

அதையடுத்து நீதிபதிகள், இது தொடா்பாக இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம், மற்றும் 2 இசை நிறுவனங்கள் ஆகியவை நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனா்.

Our Score