full screen background image

“இப்படியே கோர்ட்டுக்கும், வீட்டுக்குமா அலைங்க…” – தயாரிப்பாளர்களுக்கு சாபம் விட்ட இளையராஜா..!

“இப்படியே கோர்ட்டுக்கும், வீட்டுக்குமா அலைங்க…” – தயாரிப்பாளர்களுக்கு சாபம் விட்ட இளையராஜா..!

நேற்று முன்தினம் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவின் 75-வது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தாலும், கடைசி நிமிடத்தில் ஒட்டு மொத்த நிகழ்ச்சிக்கும் திருஷ்டி பொட்டு வைப்பதுபோல அமைந்தது இசைஞானி இளையராஜாவின் கடைசிப் பேச்சு.

அவர் எப்போதும்போல் நிகழ்ச்சியின் கடைசி பாடலாக ‘நாயகன்’ படத்தில் இடம் பெற்ற ‘தென் பாண்டிச் சீமையிலே’ பாடலைப் பாடினார். கூடவே வெளிநாடு வாழ் தமிழர்களுக்காக இதே மெட்டில் பாடும் ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே…’ என்ற வரிகளையும் பாடித்தான் நிகழ்ச்சியை முடித்தார். அப்போதும் மைதானத்தில் 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

பாடலை பாடி முடித்துவிட்டு இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இந்த விழா இவ்வளவு பெரிதாக நடைபெறும் என நான் நினைக்கவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் தம்பி விஷாலுக்கும் எனது பாராட்டுக்கள். அதே நேரம் இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப, ரொம்ப நன்றி.

இந்திய நீதிமன்ற சரித்திரத்திலேயே ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அது எனக்குத்தான். இதற்குக் காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள்தான்.

விஷால் மற்றும் அவரின் அணியினர் முறையாகத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுத்தான் சங்கத்திற்கு பொறுப்பிற்கு வந்தார்கள். வந்த பின்பு சங்கத்தின் வேலைகளைச் செய்து, சங்கத்துக்காக இதுபோல் பலவித வேலைகளை செய்து சங்கத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள்.

சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள். சிலர் பாடலில் இருக்கும் குறையைக் கண்டு பிடித்துக் காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்த மாதிரிதான் இங்கே சில பேர் இதுபோல் வழக்கு போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். நீங்க போடுங்க. போட்டுக்கிட்டேயிருங்க. நீங்களெல்லாம் இது மாதிரியே கேஸ் போட்டு கோர்ட்டுக்கும், வீட்டுக்கும் நடையா நடைன்னு நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்று முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்தார் இளையராஜா.

இளையராஜா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும், அவரும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு உறுப்பினர்தான். தற்போது சங்கம் இரண்டாக பிரிந்திருக்கும் நிலையில் அவரைப் போன்ற மூத்தவர்கள் நடுநிலைமை வகித்து செயல்படுவதை விடுத்து விஷாலுக்கு ஆதரவு தருவதாகச் சொல்லி மற்றைய உறுப்பினர்களைக் கிண்டல் செய்து பொது மேடையில் பேசியது ஏற்புடையதல்ல.. இதனால் எங்களது மனம் பெரிதும் வேதனையடைந்துள்ளது என்று எதிரணியைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்களும் இப்போது வருத்தத்தில் உள்ளார்களாம்..!

Our Score