கடந்த சில நாட்களாகவே பிரசாத் ரீரிக்கார்டிங் தியேட்டர் பக்கம் செம சூடு.. இதுநாள் வரையில் அமைதியாக இருந்த அந்தப் பகுதியில் இப்போது அதகளமான சூழல்..
இயக்குநர் சீனு ராமசாமி தான் இயக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தில் வைரமுத்து எழுதிய ஒரு பாடலை இளையராஜாதான் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், இதற்கு இளையராஜா மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
பின்பு இளையராஜாவின் ரசிகர்களின் கோபக் கனலில் ஏற்கெனவே இயக்குநர் பாலா ஒரு முறை இதேபோல் வைரமுத்துவுக்காக கேட்டு இளையராஜாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட கதையும் வெளியாகி டென்ஷனானது..
டைம்ஸ் ஆஃப் இந்தியா தினசரியில் பேட்டியளித்திருந்த சீனு ராமசாமி இளையராஜாவை தான் சந்தித்து இது பற்றி கேட்டதாக சொல்லியிருந்த செய்திதான் இந்தப் பிரச்சினைக்கு முதல் காரணம்..
இதன் பின்பு இளையராஜாவின் சார்பில் அவரது ஒப்புதல் பெற்று அவரது ரசிகர்களின் முகநூல் பக்கத்தில் வெளியான செய்திக்கு பிறகு அச்செய்தியை மறுத்த இயக்குநர் சீனு ராமசாமி தனக்கு அந்த ஆசை இருக்கிறது என்பதை மட்டுமே சொல்லியிருந்தார்.
இப்போது தனது முகநூல் பக்கத்திலும் அதே கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி. அச்செய்தி இதுதான் :
கலையுலக நண்பர்களே!
எனது திரைப்படங்களால் ஈர்க்கப்பட்ட தமிழ் நெஞ்சங்களே!
அனைவர்க்கும் வணக்கம்.
எனது ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படத்தில் தத்தெடுத்த மகனைப் பற்றிய உறவை மையப்படுத்தி ஒரு தாயின் பாடல் இடம் பெறுகிறது.
இதைக் கவிப்பேரரசு வைரமுத்து எழுத, திரு.யுவன் சங்கர்ராஜா இசை அமைக்கிறார். இந்தப் பாடலை யாரைப் பாட வைக்கலாம் என்ற யோசனையில் என் ஆழ்மனதில் தோன்றியவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.
இதை இப்படத்தின் இசை அமைப்பாளர் திரு.யுவனிடமும், தயாரிப்பாளர் திரு.லிங்குசாமியிடமும் தெரியப்படுத்தினேன். யுவன் தன் அப்பாவிடம் ‘நான் கேட்கிறேன்..’ என்றார். எனக்கு அளவற்ற மகிழ்ச்சி. ‘தென்மேற்குப் பருவக் காற்று’ திரைப்படத்தில் தேசிய விருது பெற்ற ‘கள்ளிக்காட்டில் பொறந்த தாயே’ மாதிரியான ஒரு பாடலை இசைஞானி பாடினால் எப்படி இருக்கும்..?
ஆனால் சில நண்பர்கள் இதனை வேறு மாதிரி திரித்து எழுதி வருகின்றனர். இதைப் பகை முற்றுப் பெற்ற காலமாக நான் பார்க்கிறேன். இரண்டு பெருங்கலைஞர்களின் பெருந்தன்மை சம்மந்தப்பட்ட விஷயம் இது. நான் இருவரிடமும் வரம் கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன்.
“பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்!” – என்ற பாரதியின் வரிகளே என் நினைவுக்கு வருகின்றன. இணைத்து வைக்கும் கரங்களே, என்னை ஆசீர்வதியுங்கள்!
– நன்றியுடன்,
சீனு ராமசாமி,
திரைப்பட இயக்குநர்.
இதற்குப் பின்பும் சர்ச்சைகள் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. இது தொடர்பாக இயக்குநர் சீனு ராமசாமியை போனில் தொடர்பு கொண்டு நாம் பேசியபோது அவர் நம்மிடம் சொன்னது இதுதான் :
“நான் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் நிருபரிடம் ‘இளையராஜாவை சந்தித்துவிட்டேன்’ என்று சொல்லவே இல்லை. அந்த நிருபர்தான் அவசரத்தில் மாற்றி எழுதிவிட்டார்.
இன்றைய நிலைமையில் அம்மாவை பற்றிய பாடல்கள் எனில் தமிழர்களுக்கு இருவர் மட்டுமே நினைவில் வருவார்கள். ஒருவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்னொருவர் இசைஞானி இளையராஜா..
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பாடலும் அப்படிப்பட்டதுதான். இந்தப் பாடலை பாடும் தகுதியுள்ள ஒரே நபர் இசைஞானி இளையராஜாதான். அதனால்தான் அவரை பாட வைக்க முயன்று வருகிறேன்.
நான் இப்போது மதுரையில் என்னுடைய திரைப்படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்கு லொகேஷன் பார்ப்பதற்காக வந்துள்ளேன். இன்னும் சில தினங்களில் சென்னைக்கு வந்தவுடன் நிச்சயமாக இசைஞானியை சந்தித்து அவர் காலில் விழுந்து என் படத்தில் அந்தக் குறிப்பிட்ட பாடலை பாடும்படி வரம் கேட்பேன். நிச்சயம் அவர் சம்மதிப்பார் என்றே நம்புகிறேன்.
நான் கடந்த 16 ஆண்டு காலமாக தமிழ்ச் சினிமாவில் முட்டி மோதி தலையெடுத்திருப்பதில் இன்னொரு முக்கிய நோக்கமும் இருக்கிறது. அது ஒரு முறையாவது இசைஞானி இளையராஜாவுடன் பணியாற்றிவிட வேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு அவர் எனது ஆதர்ச இசையமைப்பாளர்.
நான் தமிழ்ச் சினிமாவில் நல்ல, தரமான படங்களை கொடுக்க விரும்பும் இயக்குநர். சின்ன பட்ஜெட் படங்கள்தான் என்னுடைய விருப்பம்.. என்னுடைய அடுத்தப் படத்திற்கான கதையும் இப்போதே தயார். அதில் 2 பாடல்கள்தான். ஆனால் அப்படத்திற்கு இசைஞானிதான் இசையமைக்கப் போகிறார். இதையும் நான் அவரிடம் கேட்கத்தான் போகிறேன்.. அந்த அளவுக்கு அவரது இசை மீது எனக்கு பிடிப்பு அதிகம்..” என்றார்.
“இளையராஜாதான் வைரமுத்து என்றாலே ஒதுங்கி போவாரே..? நீங்கள் எதற்கு மீண்டும் அவரிடத்தில் போய் அவரது பெயரை உச்சரிக்க நினைக்கிறீர்கள்…?” என்று கேட்டோம்.
அதற்கு, “நான் ஒரு திரைப்பட இயக்குநர்.. எனது படத்தில் வரும் பாடலை அதற்குப் பொருத்தமானவரிடம் பாடும்படி கேட்க வேண்டியது எனது கடமை. ஏற்பதும், ஏற்காததும் அவரது உரிமை.. ஆனால் கேட்காமலேயே போய்விட எனது மனசாட்சி இடம் கொடுக்க மறுக்கிறது.. ஏனெனில் திரும்பவும் சொல்கிறேன்.. இந்தப் பாடலை பாடும் தகுதி இசைஞானிக்கு மட்டுமே உண்டு..” என்றார் இயக்குநர்.
“உங்களுக்கு பின்னால் இருந்து வைரமுத்துதான் உங்களை தூண்டிவிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளதே..?” என்றோம்.
“இல்லவே இல்லை.. வைரமுத்துவுக்கும் இதற்கும் துளிகூட சம்பந்தமில்லை.. அவர் எதையும் என்னிடம் கேட்கவில்லை.. சொல்லவும் இல்லை. இது அத்திரைப்படத்தின் இயக்குநராக நானே மேற்கொள்ளும் தனிப்பட்ட முயற்சிகள்..” என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.
இவருடைய பிடிவாதத்தைப் பார்த்தால் இந்தப் பிரச்சினை இப்போதைக்கு முடியாது போலிருக்கே..?