full screen background image

ஏப்ரல்-5 மதுரையில் இசைஞானியின் இசைக் கச்சேரி..!

ஏப்ரல்-5 மதுரையில் இசைஞானியின் இசைக் கச்சேரி..!

இசைஞானி இளையராஜா இதுவரையிலும் உலகம் சுற்றி பல கண்டங்களிலும், பல நாடுகளிலும் தனது இசைக் கச்சேரியை நடத்திக் காண்பித்துவிட்டார். இருபது வருடங்களுக்கு முன்பாக தனது சொந்த மண்ணான பண்ணைப்புரத்தில் ஒரு கச்சேரியை நடத்தினார். அதோடு அவ்வளவுதான்.. பொறந்த ஊருக்கும், அவருக்குமான உறவு அவர் அடிக்கடி சென்று வருவதில் மட்டுமே இருந்தது..

சமீபத்தில் திடீர் உடல் நலக்குறைவால் இசைஞானி மருத்துவமனையில் இருந்த காலத்தில் அவரது மனதை இது மிகவும் உறுத்தியிருக்கும் எனத் தெரிகிறது.. தனது சொந்த மண்ணில் இருக்கும் சொந்தங்களுக்காக.. உறவுகளுக்காக.. தனியே ஒரு கச்சேரி செய்து தனது பிறவிக் கடனை பூர்த்தி செய்ய நினைத்துவிட்டார் இசைஞானி.

karthickraja-press-meet-2

வரும் ஏப்ரல் 5-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் இசைஞானியின் மாபெரும் இசைக் கச்சேரி.. பண்ணைப்புரத்து சொந்தகங்களுக்காக நடத்தப்படுகிறதாம். பண்ணைப்புரத்தின் பேரன் கார்த்திக்ராஜா இன்றைக்குத்தான் அதனை அறிவித்தார். ராஜாவின் சங்கீதத் திருநாள் என்ற பெயரில் இந்த இன்னிசை கச்சேரி நடத்தப்படவுள்ளது.

“அப்பா ஆஸ்பத்திரில அட்மிட்ன்னு தெரிஞ்சவுடனேயே முதல் போன் கால் ஊர்ல இருந்துதான் வந்துச்சு. அப்புறம் அடுத்தடுத்து தொடர்ந்து போன் வந்துக்கிட்டேயிருக்கு.. “என்னப்பா.. ராசாவுக்கு எப்படியிருக்கு?”ன்னு கேட்டு… பதில் சொல்லி நிறுத்த முடியலை.. இது எங்க மனசை ரொம்பவே பாதிச்சிருச்சு.. அப்பா மேல இத்தனை பாசமா இருக்குற எங்க ஊர் மக்களை சந்திக்கணும்னு அப்பா பிரியப்படுறார். அதுக்காகத்தான் இந்தக் கச்சேரி” என்றார் கார்த்திக்ராஜா.

பண்ணைப்புரத்தில் கச்சேரி நடத்த தோதான இடமில்லாததால் மதுரைக்கு மாற்றப்பட்டதாகச் சொன்னார். பண்ணைப்புரத்தில் இருந்து லாரியில் மக்களை ஏற்றிக் கொண்டு மதுரைக்குப் பறக்கப் போகிறார்களாம்.. இசைஞானியுடன் பணியாற்றிய அனைத்து பாடகர்களையும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்களாம்.. கண்டிப்பாக வருவார்கள் என்று நம்புவதாகச் சொன்னார் கார்த்திக்ராஜா. இசை நிகழ்ச்சியில் ஹரிச்சரண், எஸ்.என்.சுரேந்தர், ஷாலினி, வினயா, உமா ரமணன், எஸ்.பி.பி. போன்றோர் பாடல்களை பாடப் போவதாகவும் சொன்னார்..

இசைஞானியின் அனைத்து பாடல்களையும் பாட வேண்டுமெனில் 365 நாளும் அங்கேயே டேரா போட்டுத்தான் கச்சேரி நடத்த முடியும். செலக்டிவ்வான பாடல்களை மட்டுமே தேர்வு செய்யவுள்ளதாகச் சொன்னார் கார்த்திக்.. பாடலாசிரியர் வைரமுத்துவின் பாடல்கள் இடம் பெறுமா என்ற ஒரு பத்திரிகையாளரின் திடீர் கேள்விக்கு சட்டென்று தடுமாறிய கார்த்திக்ராஜா.. “அப்பாவோட இனிமையான பாடல்கள் அனைத்துமே கச்சேரியில் நிச்சயம் இடம் பெறும்..” என்று பட்டும்படாமல் பதிலளித்தார்.

மலேசியாவில் நடந்த கச்சேரிக்கே பத்திரிகையாளர்களை அழைத்துப் போவதாக வாக்குறுதியளித்து கடைசியில் கவிழ்த்துவிட்ட கார்த்திக்ராஜா.. இந்தக் கச்சேரிக்கும் பத்திரிகையாளர்களை மதுரைக்கு வாங்க போலாம் என்று அழைத்திருக்கிறார். அழைப்பு வெறும் அழைப்போடு நிற்குமா அல்லது இழுத்துச் செல்வாரா என்பதை பிறகு பார்ப்போம்..!

Our Score