இசையமைப்புக்கான ராயல்டியை தயாரிப்பாளர்களுக்கே விட்டுத் தருகிறார் இசைஞானி இளையராஜா..!

இசையமைப்புக்கான ராயல்டியை தயாரிப்பாளர்களுக்கே விட்டுத் தருகிறார் இசைஞானி இளையராஜா..!

இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த 1001 திரைப்படங்களின் இசை ராயல்டியையும் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கே விட்டுக் கொடுக்கப் போகிறாராம்.

இன்று மதியம் ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்ற சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா படத்தின் இசைத்தட்டை வெளியிட்டு பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய பேச்சில் இதனைத் தெரிவித்தார்.

தாணு பேசும்போது, “வரும் மார்ச் 8-ம் தேதி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் சங்க உறுப்பினர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்கப் போகிறோம்.

கடந்த சில நாட்களாக ஒரு விஷயமாக இசைஞானி இளையராஜாவை நான் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். அதை இப்போது முழுமையாக வெளியில் சொல்ல முடியாது. இருந்தாலும் ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன்..

இசைஞானி தான் இசையமைத்த 1001 படங்களின் இசை உரிமையை அந்தந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கே விட்டுக் கொடுக்கப் போகிறார். இனிமேல் அந்த உரிமத்தின் பேரில் கிடைக்கும் அனைத்து ராயல்டி தொகையும் அந்தந்த தயாரிப்பாளருக்கே சேரும். தயாரிப்பாளர்களின் நலனுக்காக இசைஞானி எடுத்திருக்கும் இந்த முடிவை அவரே எங்களது பொதுக்குழுவுக்கு வந்து சொல்லப் போகிறார். அவரை எங்களது பொதுக்குழுவில் பாராட்டப் போகிறோம். இப்படி பல்வேறு திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வரப் போகிறோம்..” என்றார்.

ஏற்கெனவே இசைஞானியின் பாடல்கள் வெளியீட்டு உரிமை மலேசியாவை சேர்ந்த அகி மியூஸிக்கல்ஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அது சிக்கலில் இருக்கிறது. இரு தரப்பினருமே இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்கள். வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நேரத்தில் இசைஞானி எடுத்திருக்கும் இந்த முடிவு நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். இதை இளையராஜாவிடம் இருந்து வாங்கி அந்தத் தயாரிப்பாளர்கள் யாருக்காவது விற்பனை செய்துவிட்டால் இசைஞானியின் இந்த உதவிக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே..?

இதற்கு பதிலாக இசை உரிமையை தயாரிப்பாளர் சங்கத்திற்கே உடமையாக்கி.. வரும் ராயல்டியை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் மூலமாகவே கொடுத்தால் தயாரிப்பாளர்களுக்கு இசைஞானி செய்ய நினைக்கும் இந்த உதவி நிச்சயம் பலனளிக்கும்..!

Our Score