full screen background image

திரைப்படங்களின் டிவி உரிமம் விற்பனைக்கு விரைவில் தீர்வு..

திரைப்படங்களின் டிவி உரிமம் விற்பனைக்கு விரைவில் தீர்வு..

திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமத்தை டிவி நிறுவனங்கள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருவதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்துள்ளார்.

இன்று மதியம் ஆர்.கே.வி.ஸ்டூடியோவில் நடைபெற்ற ‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது இதனை தெரிவித்தார்.

IMG_8291

முன்னதாக விழாவில் பேசிய இந்த ‘சார்லஸ் ஷஃபீக் கார்த்திகா’ திரைப்படத்தின் விநியோகஸ்தர் ‘விப்ரன்ட் மூவிஸ்’ வெங்கடேஷ், “டிவி சேனல்கள் புதிய திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமங்களை வாங்கினால்தான் விநியோகஸ்தர்களால் தொடர்ந்து திரைப்படங்களை திரையிட முடியும். முன்பெல்லாம் வெறும் 70, 80 தியேட்டர்களில் மட்டுமே படங்களை திரையிட்டு வந்த என்னால், இப்போது 200 தியேட்டர்களுக்கு மேல் தியேட்டர்களில் படங்களைத் திரையிட முடிகிறது. அந்த அளவுக்கு தியேட்டர்காரர்கள் இப்போது என்னைப் போன்ற விநியோகஸ்தர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அதே நேரம் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின்பு எந்தவொரு டிவியும் தமிழ்த் திரைப்படங்களின் சேட்டிலைட் உரிமத்தை வாங்கவில்லை. தயாரிப்பாளரிடமிருந்து சேட்டிலைட் உரிமத்தை பெற்றிருக்கும் நாங்கள், அதில் அதிக அளவுக்கு பணத்தை முதலீடு செய்திருக்கிறோம். இந்த உரிமம் சீக்கிரமாக விற்பனையானால்தான் எங்களால் அடுத்தடுத்து படங்களை வாங்கி விநியோகம் செய்ய முடியும்.  தயாரிப்பாளர் சங்கம் இந்த விஷயத்தில் முனைந்து செயல்பட்டு டிவிக்கள் படங்களை வாங்கும்படி செய்ய வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

இதன் பின்பு பேசிய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, “தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது 950 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் நாங்கள் பொறுப்பேற்ற பின்பு கடிதம் மூலம் சாட்டிலைட் உரிமம் பற்றி கடிதம் அனுப்பினோம். செல்போனில் மெஸேஜ் அனுப்பினோம். இப்போதுவரையிலும் சுமார் 30 உறுப்பினர்கள் மட்டுமே தங்களது படங்களின் சாட்டிலைட் உரிமத்தை விற்க வேண்டும் என்று பெயர்களை பதிவு செய்திருக்கிறார்கள்.

வரும் மார்ச் மாதத்திற்குள் சம்பந்தப்பட்ட படங்களின் டிவி உரிமையை விற்பனை செய்ய தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முனைந்து நடவடிக்கை எடுக்கும்..” என்றார்.

Our Score