full screen background image

“என்னைவிட கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு கொடுத்திருக்கார் இளையராஜா” – ரஜினியின் சுவையான பேச்சு..!

“என்னைவிட கமலுக்குத்தான் நிறைய நல்ல பாட்டு கொடுத்திருக்கார் இளையராஜா” – ரஜினியின் சுவையான பேச்சு..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இசைஞானி இளையராஜாவுக்கு, நடைபெற்ற பாராட்டு விழா 2-வது நாளாக நேற்று நடைபெற்றது.

முதல் நாள் இசைஞானி இசையமைத்த சில பாடல்களுக்கு நடிகைகள் சாயிஷா, நிக்கி கல்ரானி, பூர்ணா, இனியா, ஆண்ட்ரியா, நதியா, நமீதா போன்றோர் நடனமாடினார்கள்.

நேற்று இசைஞானியின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்குலகின் மூத்த நடிகர்களான மோகன்பாபு, வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்..

பாடகர் மனோ, பாடகி சித்ரா, உஷா உதூப் உள்ளிட்ட பல முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பல பாடல்களை பாடினார்கள். ஹங்கேரியில் இருந்து வந்திருந்த இசைக் குழுவினர் இதற்கு இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.

விழாவின்போது கீழே அமர்ந்திருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை திடீரென்று மேடைக்கு அழைத்தார் இளையராஜா. மேடைக்கு வந்த ரஜினி இளையராஜாவை கட்டிப் பிடித்துப் பாராட்டி வாழ்த்தினார்.

kamal-rajini-mohan babu-ilayaraja-1

மேடையில் இருந்த தொகுப்பாளினியான நடிகை சுஹாசினி “இப்போது இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இந்த மேடையில் உள்ளனர். ஒருவர் இசையுலகின் சூப்பர் ஸ்டார் இளையராஜா.. மற்றொருவர் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி…” என்றார்.

உடனே இடைமறித்த இளையராஜா, “ஏம்மா.. மேடையேறிட்டா என்ன வேனாலும் பேசுவீங்களா? சினிமான்னா அது ஒரேயொரு சூப்பர் ஸ்டார்தான். அது எப்பவுமே ரஜினிதான்…” என்று சுஹாசினியை கண்டிக்க சுஹாசினி சங்கடத்துடன் சிரிக்க.. ரஜினி மையமாக சிரித்து வைத்தார்.

பின்பு ரஜினி மேடையில் பேசும்போது, “திடீர்ன்னு கூப்பிட்டுட்டாரு. என்ன பேசுறதுன்னே தெரியலை. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்த நாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்துகிறார்கள். இதில் நானும் பங்கேற்பதில் எனக்கும் சந்தோஷம்தான்.

காடு, மலை, சிகரம் போன்றவையெல்லாம் இயற்கையிலேயே தானாகவே அமைந்தவை. இதேமாதிரியே கடவுளா கும்பிடுற லிங்கம் போன்றவைகளும் பூமிக்கடிலயோ, ஏதோ ஒரு தண்ணிக்குள்ளயோ அமிழ்ந்து கிடக்கும். அது என்னைக்கு வரணும்ன்னு இருக்கோ, அன்னிக்கு அது வெளில வந்தே ஆகும். அன்னிக்குத்தான் நாம அதைப் பார்க்க முடியும். அதை ‘சுயம்பு லிங்கம்’ன்னு சொல்வாங்க.

இதேபோல் மனிதர்களிலும் ஒரு சிலர் எந்தவித பின்புலமும் இல்லாமல் மிகப் பெரிய திறமைசாலிகளாக வளர்ந்து வருவாங்க.. அவங்களையெல்லாம் ‘சுயம்பு’ன்னுதான் சொல்வாங்க. நம்ம இளையராஜாவும் இது மாதிரியான ஒரு ‘சுயம்பு’தான்.  இசை உலகின் ‘சுயம்பு லிங்கம்’ நம்ம இளையராஜாதான்.

இந்த சுயம்பு அபூர்வமானது அதனாலேயே அதற்குச் சக்தி அதிகம். அதனால்தான் 42 ஆண்டுகள் கடந்தும் இளையராஜா இசை உலகில் இன்னமும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். முதல் படத்தில் இருந்து இப்போதுவரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது.

எனக்கு அறிமுகமான நாளில் இருந்து இளையராஜாவை ‘சார்’ என்றுதான் நான் அழைத்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவர் சாமியார் மாதிரி தன்னை மாற்றிக் கொண்டு ஒரு பழுத்த ஆன்மிகவாதியாக வந்துக்கிட்டிருந்தார். அதைப் பார்த்துதான் நான் அவரை ‘சாமி’ன்னு கூப்பிட ஆரம்பிச்சேன். அன்னிலேர்ந்து இன்னிக்குவரைக்கும் அவர் எனக்கு ‘சாமி’தான். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்து வைத்ததும் இளையராஜாதான்.

இசையுலகத்தில் பிரபலமானவர் என்று மட்டுமே இளையராஜாவை நாம் மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவருடைய இசை வாழ்க்கையும், சினிமா வாழ்க்கையும் பல தியாகங்கள் நிறைந்தது.

எத்தனையோ கஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு அவர் உதவி செய்து இருக்கிறார். 1980-களின் காலக்கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் வெளியாகும். அவற்றில் நிச்சயமாக 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்ததாகத்தான் இருக்கும்.

நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜாவின் ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், ‘ரீரிக்கார்டிங் முடிஞ்சிருச்சு. இனி சக்ஸஸ்தான்’ என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு அதுவே அந்தப் படத்தின் வெற்றியை சொன்ன மாதிரி நினைச்சுக்குவாங்க.

ஒரு படத்துக்கு இசையமைக்கணும்ன்னு காலைல 7.30 மணிக்கு வேலைய ஆரம்பிச்சாருன்னா மதியம் 11-30 மணிக்குள்ள எல்லா பாட்டையும் போட்டு முடிச்சுருவாரு. அவ்ளோ ஸ்பீடு. இதேமாதிரி ஒரே நாளில் 3 படங்களுக்கு தூங்காமல்கூட ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாள் ஆகுது.

தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி தன்னை வருத்திக் கொண்டு உழைத்தார். பல தயாரிப்பாளர்களுக்கு பணம் வாங்காமலேயே ரீரெக்கார்டிங்கை செஞ்சு கொடுத்திருக்கார். அது எனக்குத் தெரியும். இதனால்தான் தயாரிப்பாளர்கள் பலரும் இப்போதும் அவரின் காலில் விழுகிறார்கள்.

வெறுமனே இசையமைப்பாளரா மட்டுமே அவர் இருந்ததில்லை. இயக்குநர்கள் தன்னிடம் கதை சொல்லும்போது அது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். கதை, திரைக்கதையில் மாற்றம் செய்யச் சொல்லி அந்தப் படம் ஜெயிக்கிறதுக்குன்னு என்ன செய்யணுமே அது அத்தனையையும் சொல்வார். செய்வார்.

அவர் இசையமைத்த பாடல்களில் 70 சதவீத பாடல்களுக்கு இளையராஜாதான் பல்லவி போட்டிருக்கிறார். மொதல்ல நாலு வரியை எடுத்துக் கொடுத்திருவார். அதுக்கப்புறம்தான் பாடலாசிரியர்கள் வாலி உள்ளிட்ட பலரும் அவர் சொன்ன பல்லவிக்கேற்றபடி, சரணம் எழுதுவாங்க. மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது.

‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். வெறும் 6 வரிகள்தான். ஆனால் அதை பாடவே எனக்கு 6 மணி நேரம் ஆனது. இசைஞானி இளையராஜா சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும்.

அவருக்கு சரஸ்வதி கடாட்சம் நிறைய  கிடைச்சிருக்கு. சரஸ்வதி அவரிடத்தில் எப்போதும் இருக்கிறார். இனியும் இருப்பார். அதே மாதிரி லட்சுமியும் அவரிடத்தில் இருக்கிறார் என்றே நினைக்கிறேன்…” என்றார் ரஜினி.

அப்போது குறுக்கிட்ட இளையராஜா “இப்போ லட்சமி மட்டும் என்னிடம் இல்லை…” என்றார். ரஜினியும் பட்டென்று, “நிச்சயமா அவங்களும் வருவாங்க. உங்க கூடவே இருப்பாங்க..” என்றார்.

kamal-rajini-5

இடையில் குறுக்கிட்ட நடிகை சுஹாசினி, “இளையராஜா இசையமைத்த பாடல்களில் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும் சில பாடல்களைச் சொல்ல முடியுமா?” என்று கேட்டபோது, “நிறைய இருக்கு.. என்னன்னு சொல்றது.. ஒரு ஹீரோவுக்கு ‘முரட்டுக்காளை’யில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்..? ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவுல இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. 

அப்போது இளையராஜா “காதலின் தீபம் ஒன்று” என்று பாடலை எடுத்துக் கொடுக்க.. “ஆங்.. ‘காதலின் தீபம் ஒன்று’.. இது மாதிரி இன்னும் நிறையவே இருக்கு.. என்ன ஒரு விஷயம்.. என்னைவிட கமல்ஹாசனுக்குத்தான் அவர் நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கார்…” என்றார்.

அரங்கமே இதைக் கேட்டு அதிர.. இதை மறுத்த இளையராஜா, “இல்ல.. இல்ல.. உங்களுக்கும் நல்லாவே போட்டிருக்கேன். அவர்கிட்ட கேட்டா ‘நான் உங்களுக்குத்தான் நல்ல, நல்ல பாட்டா கொடுத்திருக்கேன்’னு சொல்றாரு.

நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான். ராமராஜன் படங்களுக்கு போடலையா… மோகனுக்கு என்னாலதான் ‘மைக் மோகன்னே பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி, நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார்.

இளையராஜா திரும்பவும் ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல.. என்னுடைய இசை வேணும்ன்னு என் முன்னாடி வந்துட்டா அதுல யார் நடிக்கிறான்னுல்லாம் பார்க்கவே மாட்டேன். அது ஒரு பாடல். அதுக்கு நான் இசையமைக்கணும். அவ்ளோதான் பார்ப்பேன்..” என்று புன்னகையுடன் மறுதலித்தார்.

சிறிது நேரம் கழித்து மேடையேறி ‘ஹே ராம்’ படத்தின் பாடலை தன் மகள் ஸ்ருதி கமல்ஹாசனுடன் இணைந்து பாடி முடித்த கமல்ஹாசனிடம் நடிகை சுஹாசினி ரஜினி சொன்ன குற்றச்சாட்டு பற்றிக் கேட்டபோது, “இல்ல. இல்ல.. என்னைவிட அவருக்குத்தான் நல்ல, நல்ல பாட்டெல்லாம் போட்டிருக்காரு. நானே பல தடவை இவர்கிட்ட சொல்லியிருக்கேன்..” என்றார்.

இதைக் கேட்டவுடன் இளையராஜா சட்டென்று ரசிகர்கள் பக்கமாக திரும்பி “இப்போ நான் என்ன சொல்றது..?” என்பது போல் சைகை செய்ய.. கூட்டமே கலகலத்தது..!

Our Score