“தமிழ் ராக்கர்ஸை பிடிக்க முடியலைன்னா பதவி விலகலாமே..?” – விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி..!

“தமிழ் ராக்கர்ஸை பிடிக்க முடியலைன்னா பதவி விலகலாமே..?” – விஷாலுக்கு இயக்குநர் வசந்தபாலன் கேள்வி..!

தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாமல், யாரும் கண்டுபிடிக்காத வண்ணம் நடந்து கொண்டிருக்கும் கந்துவட்டி தொழில் எப்படியெல்லாம் நடக்கிறது என்பதை விவரிக்கிறது ‘பொது நலன் கருதி’ என்னும் திரைப்படம்.

5,000 ரூபாய் பணம் கடனுக்காக 50,000 ரூபாய்வரையிலும் திருப்பிக் கொடுக்கும் ஏழை, நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சினையை அலசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் சீயோன்.

வரும் பிப்ரவரி 7-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. 

இந்த விழாவில் படக் குழுவினருடன் மே-19 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, இயக்குநர்கள் மிஷ்கின், வசந்த பாலன், மீரா கதிரவன், கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் பி.டி செல்வகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் இயக்குநர் வசந்த பாலன் பேசும்போது, “இப்போது தமிழ்த் திரையுலகத்தில் சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள ‘பேரன்பு’, ‘சர்வம் தாள மயம்’ ஆகிய படங்கள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால் காலையில் பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் மட்டும் வெளியாகியுள்ளது. 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் என்னதான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என்று சொல்லித்தானே பதவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..?

சிறிய பட்ஜெட் படங்களெல்லாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்சினையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது.

மொதல்ல தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிங்க.. இல்லைன்னா தமிழ்த் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்…” என உருக்கமாகவும், ஆவேசமாகவும் பேசினார். 

இயக்குநர் மிஷ்கின் பேசும்போது, “விஷால் உண்மையாகவே இரவு, பகல் பார்க்காமல் தமிழ் ராக்கர்ஸ் எனும் கயவர்களை ஒழிக்க போராடிக் கொண்டுதான் வருகிறார். அதை நானே என் கண் கூடாக பார்த்துள்ளேன்.  இன்றுவரை விஷால் அந்த திருடர்களை பிடிக்க முயற்சி செய்துதான் வருகிறார். ஆனால் அவர்களை பிடிப்பது என்பது கடினமான விஷயம். 

மரம், செடி, கொடி, பறவைகள் எப்படி இருக்கிறதோ அதே போல்தான் திருடர்கள் இருப்பதும் இயற்கை. வசந்த பாலனின் ஜெயில் திரைப்படம் நிச்சயமாக தியேட்டருக்கு வரும். அதையும் தமிழ் ராக்கர்ஸில் வெளியிடத்தான் செய்வார்கள். அது நல்ல படமாக இருந்தால் நிச்சயம் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். நல்ல படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணமுள்ள இயக்குநர்களுக்கு பணம், புகழ் எதையும் தேடிக் கொண்டிருக்க மாட்டார்கள்.. அவர்களுக்கு ஒரு டீ, ரெண்டு பிஸ்கட்டே போதும்..” என்றார் மிஷ்கின்.  

இப்படத்தின் இயக்குநர் சீயோன் படம் பற்றிப் பேசும்போது, “கந்து வட்டி பிரச்சனை குறித்த உண்மை சம்பவங்களை வைத்து தான் இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். மக்கள் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

இந்தப் படத்தில் ஒரு முக்கியக் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் கருணாகரனை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தோம். இத்தனைக்கும் டப்பிங் பேசுவதற்கு முன்பாகவே அவருக்கு முழு சம்பளத்தையும் செட்டில் செய்துவிட்டோம். ஆனாலும் அவர் இங்கே வரவில்லை.  இங்கே நிலைமை இப்படித்தான் இருக்கு, டிவிட்டரில் மட்டும் பேசிட்டு இருந்தால் போதுமா..? இதையெல்லாம் யார் கேட்பது..?

இந்தப் படத்தில் நடித்திருக்கும் சந்தோஷ், அருண் ஆதித் ஆகியோரெல்லாம் பொது நலத்திற்காக தற்போதுவரை சம்பளமே வாங்காமல் இந்தப் படத்தில் நடித்து கொடுத்துள்ளனர். 

வரும்  பிப்ரவரி 7-ம் தேதி இந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறோம். ஆதரவு கொடுங்கள்.. அப்போதுதான் எங்களுடைய படத்தைப் போல பொது நலம் சம்பந்தப்பட்ட நல்ல கதைகளுடன் அடுத்தடுத்து பல படங்கள் தமிழ்த் திரையுலகில் உருவாகும்…” என பேசினார். 

மே-19 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி பேசும்போது, “இன்றைய ஜி,எஸ்.டி. கொள்கைப்படி ஒருவர் 1 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்குகிறார் என்றால் அவர் தொழில் துவங்குவதற்கு முன்பாகவே வரியாக 18 லட்சம் செலுத்திவிடவேண்டும்.

வியாபாரமே எப்படி நடக்கப் போகிறது என்பதே தெரியாத நிலையில் துவக்கத்திலேயே 18 லட்சம் ரூபாயை வரியாகக் கட்டினால் முதலீடு போட்டவர்களுக்கு எப்போது அந்த 1 கோடி ரூபாய் எப்படி திரும்பக் கிடைக்கும்..?  

வெறும் கார்ப்பரேட் முதலைகள் மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்ற சூழலைத்தான் அரசாங்கம் உருவாக்க முயல்கிறது.  இதே நிலைமைதான் திரையுலகிலும் நடக்கிறது. அதைத்தான் இங்கு பேசிய இயக்குநர்கள் கூறுகிறார்கள்.

நானும் ஒரு துறையில் வேலை செய்துள்ளேன்.  அந்த நிறுவனம் எனக்கு 5 லட்சம் தர வேண்டும். ஆனால் அவர்கள் தரவில்லை. அந்த நிறுவனத்திற்கான வரியை நான் செலுத்த வேண்டும்.  இதற்காக நான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தேன். 10 வருடங்களாக அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதுதான் இந்த அரசாங்கத்தின் யோக்கியதை…” என கொந்தளிப்புடன் பேசினார்.  

Our Score