‘இலை’ படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவருமே தமிழ்ச் சினிமாத் துறைக்கு அன்னியர்கள்தான். ஒட்டு மொத்த படக் குழுவும் இப்போதுதான் இந்தப் படத்தின் மூலமாகத்தான் தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் சுவாதி நாராயணன், சுஜித், கிங் மோகன், லிஜூ பிரகாஷ், சிவகுமார் குருக்கள், ஹக்கீம், மாஸ்டர் அஸ்வின் சிவா, கனகலதா, சோனியா, தேவு, ஸ்ரீதேவி அனில், ஸ்ரீஜா திருவல்லா, பேபி சோனியா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல், படத்தொகுப்பு – டிஜோ ஜோசப், வசனம் – ஆர். வேலுமணி, இசை – விஷ்ணு வி. திவாகரன், பாடல்கள் – சௌமியா ராஜ், சண்டைப்பயிற்சி – கிருஷ்ண பிரகாஷ், ப்ரோஜக்ட் டிசைனர் – ஷோப குமார், பி. ஆர். ஓ – சக்தி சரவணன், பினீஷ் ராஜ் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியிருக்கிறார். தயாரிப்பு – சுஜித் ஸ்டேபானோஸ்.
வாழ்க்கையின் முதல் அடி எடுத்து வைக்கும் ஒரு பெண்ணின் போராட்டங்கள்தான் இந்த படத்தின் மையக் கரு.
ஒரு காலக் கட்டத்தின் கதை என்பதால் அந்த காலத்திற்கு ஏற்றவாறு காட்சிகளைப் படம் பிடிப்பதுதான் புத்திசாலித்தனம். மின்சாரக் கம்பிகள், மொபைல் டவர்கள் போன்ற நவீன முன்னேற்றம் எதுவும் தென்பட்டுவிடாமல் படம் பிடிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிரமம். அந்த வகையில் இந்த ‘இலை’ திரைப்படம் முழுதாக ஒரு காலக் கட்டத்தை நம் கண் முன்னாடி கொண்டுவந்து நம்மை அதில் நம்மை வாழ வைக்கிறார்கள்.
பெரிய படங்கள், பெரிய இயக்குநர்கள், பெரிய பட்ஜெட் படத்தில் மட்டும்தான் VFX தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிகளை வடிவமைப்பார்கள். ஆனால் இந்த ‘இலை ‘ எனும் இந்த சின்ன பட்ஜெட் படத்தில் வரும் VFX காட்சிகள் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு சென்றுள்ளதாம்.
1990-களின் காலக் கட்டத்தில் நடக்கும் கதை இது என்பதால் இந்த படத்துக்கு VFX தொழில் நுட்பம் மிகவும் அவசியம் தேவைப்பட்டுள்ளது. திருநெல்லி எனும் தமிழகக் கிராமத்தை மிக அழகாகத் திரைக்குக் கொண்டு வருவதில் இந்த படத்தின் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார்.
VFX தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சி அமைப்பதன் வெற்றி என்பதே அந்தக் காட்சிகளை மக்களால் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும்போதுதான். அதே போல இந்த இலை படதிலும் மிக சிறப்பாக, யதார்த்தமாக VFX தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் படத்தில் வரும் நீர் வீழ்ச்சிகள், பூங்காக்கள், அழகு நிறைந்த தோப்புகள், மலைப் பாதைகள் என பார்க்கும் அனைவரின் கண்களையும் கவரும் மிக அற்புதமான காட்சிகளை VFX மூலமாக யதார்த்தமாக உருவாக்கியிருக்கிறார் படத்தின் இயக்குநரும், VFX இயக்குநருமான பினீஷ் ராஜ்.
ஆக்சன் ரியாக்ஷன் நிறுவனத்தின் சார்பில் ஜெனீஷ் இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 21-ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.













