full screen background image

மேடையில் மண்டியிட்ட ‘விசாரணை’ படத்தின் வில்லன் அஜய்கோஷ்..!

மேடையில் மண்டியிட்ட ‘விசாரணை’ படத்தின் வில்லன் அஜய்கோஷ்..!

‘கிளாப் போர்டு புரொடக்ஷன்’ சார்பில் சத்யமூர்த்தி தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம்  ‘தப்பு தண்டா’.

கேமிரா கவிஞர்  பாலு  மகேந்திராவின் சீடரான ஸ்ரீகண்டன் இயக்கி இருக்கும் இந்த ‘தப்பு தண்டா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில் திருமதி அகிலா பாலு மகேந்திரா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், இயக்குநர் சக்தி சிதம்பரம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்(மாநகரம்), இயக்குநர் ஸ்ரீகணேஷ்(8 தோட்டாக்கள்), நடிகர் உதய், இயக்குநர் – நடிகர் பிரவீன்காந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

IMG_4379

மற்றும் ‘தப்பு தண்டா’ படத்தின் படக் குழுவினர்களாகிய தயாரிப்பாளர் – கதாநாயகன் சத்யா, இயக்குநர் ஸ்ரீகண்டன், கதாநாயகி சுவேதா கய், அஜய் கோஷ், இ.ராமதாஸ், ஜான் விஜய், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஒளிப்பதிவாளர் ஏ.வினோத் பாரதி, படத் தொகுப்பாளர் எஸ்.பி.ராஜா சேதுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் வில்லன் நடிகர்  அஜய் கோஷ், மேடையில் மண்டியிட்டு தமிழக ரசிகர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.

ajay kosh 

அவர் பேசுகையில், “தமிழ் படங்களும், தமிழ் ரசிகர்களும், தமிழ் ஊடகம், பத்திரிகை மற்றும் இணையத்தள நண்பர்களும், ஒரு தரமான அங்கீகாரத்தை எனக்கு பெற்று தந்திருக்கின்றனர். இந்த  கௌரவமே ஒரு நடிகனுக்கு மிக பெரிய சொத்து. இதற்காக தமிழக ரசிகர்களுக்கு மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றவர் மேடையிலேயே மண்டியிட்டு தலை வணங்கினார்.

அவர் மேலும் பேசுகையில், “நான் தெலுங்கில் பூரி ஜெகன்னாத்தின் படத்தில் அறிமுகமானேன். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால் எனக்கு மட்டும் அதற்குப் பிறகு ஒரு வாய்ப்புகூட வரவில்லை. ஏன் என்றே எனக்குத் தெரியவில்லை. இரண்டு மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகன்னாத்தின் பிறந்த நாளைக்கு வாழ்த்துச் சொல்லப் போனபோது அவரை சந்தித்தேன்.

அப்போது அவர் இனிமேல் வரக் கூடிய இளைய இயக்குநர்கள் நிச்சயமாக உங்களை தேடி வருவார்கள். நம்பிக்கையைக் கைவிடாதீர்கள் என்று எனக்கு நம்பிக்கையூட்டினார். அடுத்த மாதமே எனக்குக் கிடைத்த வாய்ப்புதான் இந்த விசாரணை படம்.

நான் தமிழகத்தின் எல்லையில் இருக்கும் நெல்லூரை சேர்ந்தவன். கம்யூனிஸ இயக்கத்தில் இருப்பவன். இதனாலேயே எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையோ என்னவோ..? ஆனால் தமிழில் நான் எதிர்பார்க்காத அளவுக்கு பாராட்டுக்களும், புகழுரைகளும் அந்த விசாரணை என்னும் ஒரு திரைப்படத்தின் மூலமே கிடைத்தது. எண்ணற்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன். 

இந்த ‘தப்பு தண்டா’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் போலீஸ்தான். ஆனால் மிக வித்தியாசமான கேரக்டர். படத்தின் துவக்கத்திலேயே கிளைமாக்ஸைத்தான் படமாக்கினார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. மூன்று நாட்கள் கிளைமாக்ஸ் எடுத்தார்கள். அதன் பின்பு ஒரு நல்ல காட்சியொன்றை படமாக்கினார்கள். அப்போதுதான் எனக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வந்தது.

என்னுடைய கதாபாத்திரம், மற்றும் இங்கு உள்ளோரின்  நல்லாசியுடன்  தமிழ் திரையுலகில் நானும் ஒரு முன்னணி வில்லனாக வருவேன் என்ற நம்பிக்கையை தருகிறது…” என்று கூறினார் அஜய் கோஷ்.  

s.r.prabhu

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளரான தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வாழ்த்தி பேசும்போது, “நம் தமிழ் சினிமாவின் வருங்காலம், இந்த மேடையில் அமர்ந்து இருக்கும் இயக்குநர்கள் லோகேஷ் மற்றும் ஸ்ரீகணேஷ் போன்ற திறமையான இயக்குநர்களின்  கைகளில்தான் இருக்கின்றது. அவர்களின் வரிசையில் நிச்சயமாக இயக்குநர் ஸ்ரீகண்டனும் இடம் பெறுவார் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன்.

‘தப்பு தண்டா’ படத்தின் பாடல்களும், டிரைலரும் என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. ரசிகர்களின் உள்ளங்களை வெல்ல கூடிய எல்லா சிறப்பம்சங்களும்  இந்த படத்தில் நிறைந்து இருக்கின்றது” என்று கூறினார்.

sathya

‘தப்பு தண்டா’ படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளருமான சத்யா பேசும்போது, “திரையுலகில் முதல் முதலாக அடியெடுத்து வைத்திருக்கும் எனக்கு நடிப்பு என்பது ஆரம்பத்தில் சற்று சவாலாகவே இருந்தது. ஆனால் என்னுடைய இயக்குநர் ஸ்ரீகண்டன் அதை மிகவும் எளிதாக மாற்றிவிட்டார். எங்கள் படத்தில் எல்லா கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயமாக ‘தப்பு தண்டா’ திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு கோடை விருந்தாக இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

srikandan

படத்தின் இயக்குநரான ஸ்ரீகண்டன் பேசுகையில், “படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்த படத்தை  எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில்தான்  உருவாக்கி இருக்கின்றேன்.

படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனைவராலும் பாரட்டப்படும்.

‘தப்பு தண்டா’ படத்திற்கு பிறகு அஜய் கோஷின் வில்லன் அடையாளம் தமிழ் திரையுலகில் மேலும் வலு பெறும். இந்த மே மாதத்தில் எல்லோராலும் பேசப்படும் படமாக எங்களின் ‘தப்பு தண்டா’ இருக்கும்.

நான் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவன். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் மனைவி அகிலா அம்மா வந்து என்னை வாழ்த்தியது எனக்கு வாழ்நாள் பெருமை…” என்று நெகிழ்ச்சியோடு  பேசினார்.

Our Score