பொதுவாக பேய்ப் படங்களுக்கு எல்லா மொழிகளிலும் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைக்கும். அதனாலேயே தமிழில் மிக அதிகமாக பேய்ப் படங்கள் உருவானது.
பல பேய்ப் படங்கள் ஹிட்டானதால் அந்தத் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய லாபமும் கிடைத்தது. தமிழைத் தவிர பிற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டாலே மிகப் பெரிய தொகை கிடைக்கிறது. இதனாலேயே தற்போது பேய்ப் படங்களை அதிகமாக உற்பத்தி செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் துறை.
தற்போது உருவாகியிருக்கும் ‘இடியட்’ படமும் இந்த வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. ‘தில்லுக்கு துட்டு’ படத்தை இயக்கிய இயக்குநரான ராம்பாலா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, மயில்சாமி, ரவி மரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை விநியோகஸ்தர்களுக்காக போடப்பட்ட முதல் ஷோவிலேயே முழுமையாக விற்பனையாகிவிட்டதாம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ரவி மரியா பேசும்போது இதனைத் தெரிவித்தார்.

நடிகர் ரவி மரியா பேசும்போது, “ஒரு படத்தை பற்றி வழக்கமாக ‘இந்தப் படம் சூப்பராக வந்திருக்கிறது… நடிக்கும்போதே ஹிட்டாகும் என்று தெரியும்’ என எப்போதும் சொல்வோம். ஆனால் இப்படத்தை பற்றி உண்மையிலேயே அப்படி சொல்லலாம்.
நான் வில்லன் சேரில் உட்கார்ந்து காமெடி செய்பவன். என்னை கூப்பிட்டு ‘நீங்கள் காமெடி சேரில் அமர்ந்தே காமெடி பண்ணுங்கள்’ என்று சொன்னார் ராம்பாலா. அவர் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படப்பிடிப்பில் காட்சிக்கு காட்சி கடுமையான உழைப்பை தருபவர் ராம்பாலா. ஷீட்டிங்கில் எல்லாவற்றையும் இறுதி நொடிவரை மாற்றிக்கொண்டே இருப்பார் படம் நன்றாக வர வேண்டும் என்கிற அக்கறைதான் அதற்கு காரணம். நடிகர் மிர்ச்சி சிவாவை இயக்க அவரிடம் கதை சொல்லியிருக்கிறேன். ஆனால் அது நடக்காமல் போனதே நன்று. ஏனெனில், இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன். மிக இயல்பாக இருக்கும் நல்ல மனிதர்.
நிக்கி கல்ராணி ஷீட்டிங்கில் என்னை பார்த்து திட்டி, திட்டிதான் நடிப்பு பயிற்சி எடுப்பார். நல்ல நடிகை. மயில்சாமி நல்ல கதாப்பாத்திரம் செய்திருக்கிறார். ஒரு சின்ன அறைக்குள் அட்டகாசமாக லைட்டிங் செய்து அசத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசார்ஜீ, ராம் பாலா சாருக்கு இந்தப் படம் கண்டிப்பாக ஹாட்ரிக் வெற்றியை தரும்.
இந்தப் படம் ஒரே ப்ரிவியூ ஷோவில் அனைத்து ஏரியாவும் விற்றுவிட்டது. சமீபத்தில் இது போல் சாதனை செய்த படம் இது மட்டுமே. இப்படம் அனைவரையும் கவரும்…” என்றார்.