‘வைகைப் புயல்’ வடிவேலு இன்று தனது 61-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் இயக்குநரும், நடிகருமான சேரனும் தன் பங்குக்கு வடிவேலுவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்த நாள் வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.
சேரன் இயக்கிய ‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் வடிவேலுவும், பார்த்திபனும் இணைந்து நடந்திருந்த காமெடி காட்சிகள் இன்றைக்கும் தமிழ்த் திரை ரசிகர்களால் மறக்க முடியாததாகும். துபாய் குறுக்கு சந்து என்ற அந்த வசனத்தை கேட்டாலே சிரிப்பு வந்துவிடும்.
அதே டயலாக்கை பயன்படுத்தியே சேரன் தனது டிவீட்டரில் வடிவேலுவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
“பிறந்த நாள் வாழ்த்துகள் வடிவேலு அய்யா. நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபை குறுக்குச் சந்துல இருந்து பேசுறேன். நீங்க மறுபடிக்கு துபைக்கு வந்தது சந்தோஷம்யா.. வாங்கய்யா பின்னலாம். நீங்க இல்லாம துபை ரோடே வெறிச்சோடி கிடக்குய்யா. காமெடில நீங்க எப்பவுமே கிங்…” என்று ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் சேரன்.
வடிவேலுவின் ரசிகர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். பேசுகிறார்கள்.