full screen background image

“அமலாதான் ஜோடி என்றவுடன் ஓகே சொல்லிட்டேன்” – நடிகர் ரவி ராகவேந்திராவின் பேச்சு..!

“அமலாதான் ஜோடி என்றவுடன் ஓகே சொல்லிட்டேன்” – நடிகர் ரவி ராகவேந்திராவின் பேச்சு..!

சர்வானந்த், அமலா, ரீத்து வர்மா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் இயக்கியிருக்கும் படம் ‘கணம்’.

இந்தக் ‘கணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நடிகர் ரவி ராகவேந்திரா பேசும்போது, “இந்தக் கணம்’ திரும்பிப் பார்க்க வேண்டிய கணம். இந்தக் கணம்’ எஸ்.ஆர்.பிரபுவின் கணம். இது இயக்குநர் ஸ்ரீகார்த்தியின் ‘கணம்’. இது தமிழ் சினிமாவின் கணம்’.

இது மாதிரியான கடினமான கதைக் களத்தை கையாள்வது சுலபமில்லை. நாசர் சார் கூறியதுபோல இதைப் புரிந்து கொள்வது எளிமையானது அல்ல. இதை முயற்சியெடுத்து செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஸ்ரீகார்த்திக் என்னிடம் “இதுவொரு டைம் டிராவல் படம்” என்று சொல்லி 40 நிமிடங்களாக கதை சொன்னார். ஆனால், எனக்கு ஒன்றும் புரியவில்லை. இறுதியாக, “உங்களுக்கு ஜோடியாக அமலா நடிக்கிறார்..” என்றார். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே. அதை விட்டுட்டு எதுக்கு கதையை சொல்லி நேரத்தை வீணாக்குனீங்க..?” என்று கேட்டேன். அமலாவுடன் நடித்தது அற்புதமான அனுபவமாக இருந்தது.

ஷர்வானந்த் மிகவும் உணர்வுபூர்வமான நடிகர். ஒரு காட்சி நன்றாக வந்திருந்தாலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். அது பரிபூரணமாக வந்திருக்கிறதா என்று பார்ப்பார். இப்படத்தில் அதிக நடிகர்களுடன் எனக்கு காட்சிகள் இல்லை. அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் செயல் திறன் மிக்கவர்கள்.

ஒரு வாரத்திற்கு 30-40 கதைகளை கேட்டுவிட்டு, அதில் சிறந்ததை தேர்ந்தெடுப்பாராம் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. அத்தனை கதைகளைக் கேட்டுவிட்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பது எளிதல்ல. எங்கு திறமை இருக்கிறதோ அதைத் தேடி கண்டுபிடித்து விடுவார். அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இப்படம் நிச்சயம் வெற்றியடையும். அதேபோல அவர் தேர்ந்தெடுத்திருக்கும் ஸ்ரீகார்த்திக்கும் சிறந்த இயக்குநராக வருவார். அவருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.

எஸ்.ஆர்.பிரபுவிடம் நம்பிக்கை இருந்தாலும், ஸ்ரீகார்த்திக்கின் இயக்கம் அற்புதமாக இருந்தது. ஏனென்றால், இந்தப் படம் வழமையான சாதாரண படமல்ல. கால வரிசைப்படி முன்னுக்கும், பின்னுக்கும் சென்று வர வேண்டும். குழப்பங்கள் வராமல் செயல்படுத்த வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார் இயக்குநர்..” என்றார்.

Our Score