full screen background image

“அமலாவை நினைத்துதான் கதையை எழுதினேன்..” – ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீகார்த்திக்கின் விளக்கம்..!

“அமலாவை நினைத்துதான் கதையை எழுதினேன்..” – ‘கணம்’ பட இயக்குநர் ஸ்ரீகார்த்திக்கின் விளக்கம்..!

கணம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று காலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் சர்வானந்த், நடிகைகள் அமலா, ரீத்து வர்மா, நடிகர்கள் நாசர், சதீஷ், ரமேஷ் திலக், இயக்குநர் ஸ்ரீகார்த்திக், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

“கார்த்தி இவ்ளோ நல்லா பாடுவாரா..?” பாடலாசிரியர் மதன் கார்க்கியின் ஆச்சரியம்..!

இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “இளமையும், புதுமையும் கலந்த மேடை இது. டைம் ட்ராவல், அறிவியல் புனை கதைகள் கொண்ட படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பொதுவாக டைம் ட்ராவல் படங்கள் என்றாலே உலகம் அழியப் போகிறது என்பது போன்ற பெரிய விஷயங்களைத்தான் பயன்படுத்துவார்கள்.

ஆனால், பாசத்தை மையமாக வைத்து ஒரு டைம் ட்ராவல் படத்தை அழகாக நகர்த்த முடியும் என்று இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இந்தப் படத்தின் திரைக்கதையில் செய்து காட்டியிருக்கிறார்.

இசையமைப்பாளர் இசையில் மெலடியை அழகாக கொடுத்திருக்கிறார். ‘இன்னும் நேரா காயங்களை எப்படி ஆற்ற’ என்ற வரிகள் மிகவும் எனக்கு ரொம்பவும் பிடித்தது. நடிகர் கார்த்தி இவ்ளோ அழகாக பாடுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

இம்மாதிரியான படத்திற்கு அழகாக தொகுத்து வழங்க நாசர் சாரால்தான் முடியும். அவரைத் தவிர வேறு யாரையும் யோசித்துப் பார்க்க முடியவில்லை. இப்படத்தில் பணியாற்றிய ரீத்து, சின்ன வயது பசங்கள் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நீண்ட வருடங்கள் கழித்து அமலா மேடத்தைத் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் ஸ்வரம் பாடியது சிறப்பாக இருந்தது. அழகான பாடலை அவர் பாடிய விதம் இன்னும் அழகாக இருக்கிறது.

வித்தியாசமான கதைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு புதுமுகங்களை வைத்து தொடர்ந்து படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர். பிரபுவிற்கும், இயக்குநர் ஸ்ரீகார்த்திக்கும் நன்றி…” என்றார்.

“அமலா மேடம் அக்காவா நடிச்சிருக்கணும்..” – நடிகர் சதீஷின் விருப்பம்..!

நடிகர் சதீஷ் பேசும்போது, “இந்த இயக்குநர் கார்த்திக் மாதிரி யாரும் கதை சொல்ல மாட்டாங்க. அப்படியொரு ஸ்டைலில் கதையை சொன்னார்.

இந்தப் படத்தின் மூலமாக ஷர்வானந்த் என்ற சிறந்த நண்பர் எனக்குக் கிடைத்திருக்கிறார். எனது அப்பா அமலா மேடத்தின் பெரிய விசிறி. நியாயமாக அமலா மேடம் எனக்கு அக்காவாக நடித்திருக்க வேண்டும். ஆனால், அம்மாவாக நடித்திருக்கிறார். ரீத்து வர்மாவுடன் ஒரு நாள்தான் படப்பிடிப்பு இருந்தது. அது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. நாசர் சார் எல்லோரையும் நன்றாக கவனித்துக் கொள்வார். நடிப்பையும் தாண்டி அவர் நன்றாக சமைப்பார்.

இடையில் கொரோனா வந்தாலும், படம் பொறுமையாக வெளியானாலும் நன்றாக வர வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பிடிவாதமாக இருந்தார். இயக்குநர் காட்சிகளில் திருப்தி ஆகும்வரை விடமாட்டார். இப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இப்போதே செப்டம்பர் 9-ம் தேதிக்கு பயணித்து படத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளது..” என்றார்.

“இந்தியாவின் சிறந்த இயக்குநராக வருவார்” – நாயகன் சர்வானந்தின் ஆரூடம்..!

நடிகர் ஷர்வானந்த் பேசும்போது, “எங்கேயும் எப்போதும் படத்திற்குப் பிறகு ஏன் நீங்கள் தமிழில் தொடர்ந்து நடிக்கவில்லை..?” என்று பலரும் என்னிடம் கேட்டார்கள். இந்தக் கணம்’ போன்ற கதைக்காகத்தான் இத்தனையாண்டுகளாக நான் காத்துக் கொண்டிருந்தேன். நான் கதையை மட்டுமே நம்பி இருக்கிறேன்.

நமக்கு எப்போதும் எஸ். ஆர்.பிரபு போன்ற தயாரிப்பாளர்கள் தேவை. இப்படத்திற்கு தூண் போல் இருந்திருக்கிறார். ரவி ராகவேந்திரா போன்று அருமையான நடிகரை யாரும் பார்க்க முடியாது. நாசர் சார், ரீத்து வர்மா இயற்கையாக நடிக்க கூடியவர்கள். இப்படத்தின் மூலம் சதீசும், ரமேஷும் நல்ல நண்பர்களாக எனக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

அமலா மேடத்தை எப்போது பார்த்தாலும் அம்மாவாகத்தான் தோன்றும். இந்தப் படம் இயக்குநர் ஸ்ரீகார்த்திக்கின் படம். இன்னும் 5 வருடங்களுக்கு இது போன்று படம் வருவது சாத்தியமில்லை. அவர் இந்தியாவின் சிறந்த இயக்குநராக வருவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை…” என்றார்.

இயக்குநர் ஸ்ரீகார்த்திக் பேசும்போது, “இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. என்னுடைய குறிப்பிட்ட வயதுவரையிலும் நான் நேரத்தை மதித்ததே இல்லை. ஒரு கட்டத்தில் மதிக்க வேண்டிய கட்டாயம் வந்தது. எனது அம்மா இன்னும் சிறிது காலம்தான் இருப்பார் என்ற சூழ்நிலை வந்தபோதுதான் நேரத்திடம் நான் பேசினேன்.

நான் கதை சொல்லும்போது என் நண்பர்கள் ஆர்வமாக கேட்பார்கள். மறுபடியும் கதையைச் சொல்லச் சொல்லி என்னை ஊக்குவித்தார்கள். அதுதான் இப்படத்தை இயக்கக் காரணமாக இருந்தது.

நிறைய தயாரிப்பாளர்களிடம் இந்தக் கதையை கூறினேன். இறுதியாக எஸ்.ஆர்.பிரபு ஸார்தான் ஒப்புக் கொண்டார். என்னை பொறுத்தவரை அவர் செலிபிரிட்டி தயாரிப்பாளர். ரோலர் கோஸ்டரெல்லாம் தயார் செய்து கொடுத்தார். நான் கற்பனை செய்தது மற்றும் எதிர்பார்த்தது போலவே எனக்கு எல்லாமே செய்து கொடுத்தார்.

“ஒரு முறை என்னை பாரம்மா”. இந்த வரிகள்தான் இப்படத்தின் ஆன்மா. என் அம்மாவை நினைத்து 2 வருடங்களாக இந்தப் படத்தின் கதையை எழுதினேன். ஆனால் எழுதும்போது அமலா மேடத்தை மனதில் வைத்துதான் எழுதினேன். ஆனால் அவர் சம்மதிப்பாரா என்று எஸ்.ஆர்.பிரபு ஸாரிடம் கேட்டேன். அவரும் அமலா மேடத்தை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். அமலா மேடம் கதையைக் கேட்டதும்  உடனேயே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார்.

எஸ்.ஆர்.பிரபு  “இந்தப் படத்தை இரட்டை மொழிகளில் பெரிதாக எடுக்க வேண்டும்” என்றார். பிறகுதான் ஷர்வானந்த் பொருத்தமாக இருப்பார் என்று யோசித்தோம். இப்படத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார். அதே போல் நாசர் சாரை நினைத்துதான் அவருடைய கதாபாத்திரத்தை எழுதினேன். நாங்கள் நினைத்ததைவிடவும் படம் அருமையாக வந்துருக்கிறது..

மூன்று குழந்தைகளின் பெற்றோருக்கும் மிக்க நன்றி. 5 வருடங்கள் பிள்ளைகளை வேறு எங்கும் அனுப்பாமல் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தார்கள். ரவி  ராகவேந்தரா ஸார் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். தூய தமிழில் பாட வைக்கவும், ஆட வைக்கவும் மதன் கார்க்கியால்தான் முடியும். இப்படம் என்னுடைய கனவு மட்டுமல்ல. என் குடும்பத்தில் உள்ள அனைவரின் கனவு…” என்றார்.

Our Score