இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கதையில் மீண்டும் ரீமேக்காக உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன்குமார்.
அதன் பின் ‘தொட்டால் தொடரும்’, ‘படித்துறை’, ‘நேத்ரா’ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவருடைய நடிப்பில் ‘கண்மணி பாப்பா’, ‘யாழி’ ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயாராக உள்ளன.
இந்த நிலையில் தொலைக்காட்சி சீரியல்களிலும் தமன் குமார் நடிக்கத் துவங்கியிருக்கிறார். இன்று சன் டிவியில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் ‘வானத்தை போல’ சீரியலில் நாயகன் ‘சின்ராசு’வாக நடித்து சிட்டி முதல் பட்டிதொட்டியெல்லாம் ரொம்பவே பிரபலமான நட்சத்திரம் ஆகிவிட்டார் தமன் குமார்.
ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் சின்னத்திரை என இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருகிறார் தமன்குமார்.
மேலும் தனது திரையுலக பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வு என அவர் கூறுவது நடிகர் விஜய் பாராட்டியதையும் அவர் வழங்கிய ஆலோசனைகளையும்தான்.
“சட்டம் ஒரு இருட்டறை’ படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சியில் எனக்கு காலில் காயம்பட்டிருந்தது. அந்த சமயத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த விஜய் சார் என்னிடம் வந்து அக்கறையாக விசாரித்ததுடன் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறினார்.
அதுமட்டுமல்ல அந்த படம் ரிலீசானபோது, படம் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் சார் என்னை அழைத்து, எனது நடிப்பு பற்றி பாராட்டி பேசியதுடன், ஒரு நடிகனாக எப்படி முன்னோக்கி செல்ல வேண்டும் என சில ஆலோசனைகளையும் வழங்கி கிட்டத்தட்ட கால் மணி நேரம்வரை பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறியவற்றை இப்போதுவரையிலும் பின்பற்றி வருகிறேன்” என்கிறார் தமன்குமார்.