நான்கு புதிய தமிழ்ப் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன..!

நான்கு புதிய தமிழ்ப் படங்கள் ஓடிடியில் வெளியாகின்றன..!

தமிழகத்தில் கொரோனா நோய்த் தாக்கத்தினால் லாக் டவுன் அறிவிக்கப்பட்டு அது மேலும், மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

சினிமா தியேட்டர்கள் தொடர்ந்து ஒன்றரை மாதங்களாக மூடப்பட்டுக் கிடக்கின்றன. அடுத்து எப்போது அவைகள் திறக்கப்படும் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. கொரோனா நோய் இந்தியாவைவிட்டு வெளியேறும்வரையிலும் அதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில் கடன் வாங்கி திரைப்படத்தைத் தயாரித்து அதற்கு மாதாமாதம் வட்டி கட்டி வரும் பல தயாரிப்பாளர்கள் தற்போதே நட்டத்தில் மூழ்கிவிட்டனர். எதையாவது செய்தாவது குறைந்தபட்ச நட்டத்தோடு தப்பிக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள்.

இவர்கள் அனைவரும் தப்பிக்க நினைப்பது ஓடிடி தளங்களை வைத்துதான். இதுவரையிலும் தமிழில் ‘சூரரை போற்று’, ‘பூமி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘பென்குயின்’, ‘க.பெ.ரணசிங்கம்’, ‘லாக்கப்’, ‘டேனி’, ‘பரமபதம் விளையாட்டு’ உள்ளிட்ட பல படங்கள் ஒ.டி.டி.யில் வெளியாகிவிட்டன.

தற்போது தனுஷ் நடித்துள்ள ‘ஜெகமே தந்திரம்’ படம் ஜூன் மாதம் ஓ.டி.டியில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் ‘நரகாசுரன்’, ‘வாழ்’, ‘எப்.ஐ.ஆர்’, ‘கடைசி விவசாயி’ ஆகிய மேலும் 4 படங்களும் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

‘நரகாசுரன்’ படம் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்தசாமி நடிக்க தயாராகி உள்ளது. இந்த படம் பண பிரச்சினைகளால் நீண்ட காலம் முடங்கி கிடக்கிறது. ‘வாழ்’ படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ‘அருவி’ படம் மூலம் பிரபலமான அருண் புருஷோத்தமன் இயக்கி உள்ளார். ‘எப்.ஐ.ஆர்.’ படத்தில் விஷ்ணு விஷால், கவுதம் மேனன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ‘கடைசி விவசாயி’ படத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டன் படத்தை இயக்கியிருக்கிறார்.

“இந்த நிலை தொடர்ந்தால் சினிமா தியேட்டர்கள் திரும்பவும் திறக்கப்படும்போது மாஸ்டர்’ படம் போல ஏதாவது மிகப் பெரிய படத்தை வெளியிட்டுத்தான் ரசிகர்களை இழுக்க வேண்டி வரும்…” என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

Our Score