full screen background image

“அனுமதியில்லாமல் வேலைக்குச் செல்ல வேண்டாம்” – ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி எச்சரிக்கை

“அனுமதியில்லாமல் வேலைக்குச் செல்ல வேண்டாம்” – ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி எச்சரிக்கை

கொரோனா லாக் டவுன் காரணமாக தமிழகம் முழுவதுமே தொழிற்சாலைகள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. திரையுலகத்தில் சின்னத்திரை, பெரிய திரை படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் எப்போது இந்த நிலைமை சரியாகும் என்பது குறித்து பெப்சி அமைப்பின் தலைவரான ஆர்.கே.செல்வமணி ஒரு ஆடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “இந்த இரண்டாவது லாக் டவுன் எப்போதும் முடிவுக்கு வரும் என்று தெரியவில்லை. நான் அரசிடம் விசாரித்தவரையிலும் மூன்றுவித வழிமுறைகளை அரசு கைவசம் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கொரோனா தொற்று முடிவுக்கு வந்தவுடன் மூன்றுவிதமான வழிமுறைகளில் இந்த லாக் டவுனை. அரசு விலக்கிக் கொள்ளவுள்ளது.

அதில் முதல் வழிமுறையில் சினிமா துறை இல்லை. இரண்டாவது வழிமுறையில் சின்னத்திரை மட்டுமே உள்ளது. சின்னத்திரை படப்பிடிப்பிகளுக்கும், டப்பிங், எடிட்டிங் பணிகளுக்கும் இப்போது அனுமதி கிடைக்கும்.

மூன்றாவது வழிமுறையில்தான் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டு, சினிமா படப்பிடிப்புகள் ஆரம்பமாகும். சினிமா டப்பிங், எடிட்டிங் பணிகள் துவக்கப்படும். இதுதான் அரசுத் தரப்பில் இப்போது சொல்லப்படுகிறது. எப்படியிருந்தாலும் சினிமா துறை மீண்டும் பழையை நிலைமைக்கு வருவதற்கு இன்னும் கூடுதல் நாட்களாகும்.

இப்போதுதான் கொரோனா தாக்குதலின் தீவிரம் கொஞ்சம், கொஞ்சமாக குறையத் துவங்கியிருக்கிறது. இந்த நேரத்தில் நாம் அரசுக்கு உதவி செய்யத்தான் வேண்டும். அதற்காகத்தான் அனைத்துவித படப்பிடிப்புகளையும் நாம் நிறுத்தி வைத்துள்ளோம்.

ஆனாலும் ஒரு சில பெரிய டிவி சேனல்கள் தங்களுக்கு புட்டேஜ் இல்லை என்கிற காரணத்தினால் “நாங்க அவங்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டோம். இவங்ககிட்ட பெர்மிஷன் வாங்கிட்டோம்…” என்று சொல்லி ஆங்காங்கே படப்பிடிப்புகளைத் துவக்கலாம்.

அது மாதிரியான முறைப்படி அனுமதி பெறாத படப்பிடிப்புகளுக்கு நமது பெப்சி அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைக்குச் செல்ல வேண்டாம். அப்படி மீறிச் சென்று அதன் விளைவாக ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு பெப்சி அமைப்பு எந்த உதவியையும் செய்யாது. ஆகவே தொழிலாளர்கள் இதில் கவனத்துடன் இருக்க வேண்டும்..” என்று கூறியுள்ளார்.

Our Score