தமிழ்ச் சினிமாவின் பிரபல பின்னணிப் பாடகர்களில் ஒருவரான அந்தோணிதாசனை வைத்து படம் இயக்கப் போவதாக பிரபல திரைப்பட இயக்குநரான சீனு ராமசாமி அறிவித்துள்ளார்.
வாய்ப்பு கிடைக்காத நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து வழிகாட்டி தன்னைப்போல உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அந்தோணி தாசன் தொடங்கியுள்ள, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் ஆடியோ கம்பெனியின் தொடக்க விழா ஆடல், பாடல், கொண்டாட்டத்தோடு நேற்று மாலை சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் மிக மிக சிறப்பாக நடந்து முடிந்தது.
விழா தொடங்குவதற்கு முன்பாக கரகாட்டம், மானாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, புலி ஆட்டம், காவடி ஆட்டம், காளியாட்டம், கருப்புசாமி ஆட்டம், பறை ஆட்டம் என பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தோடு விழாவிற்கு வந்தவர்களை வரவேற்றது மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது.
இந்த விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி, ‘சின்னக்குயில்’ சித்ரா, இசையமைப்பாளர் பாடகர் பிரதீப்குமார், மீடியா மேஷன் நிறுவனத்தின் ரௌஃபா மற்றும் பிரதீபா, கானா பாலா, மாலதி லஷ்மண், கிடாகுழி மாரியம்மாள், நடிகர் அருள்தாஸ், பாடகர்கள் வி.எம். மகாலிங்கம், ஆந்தைகுடி இளையராஜா, ஆக்காட்டி ஆறுமுகம் , வேல்முருகன், மீனாட்சி இளையராஜா, ரீத்தா அந்தோணி, கனகராஜ், முகேஷ், லெஷ்மி சந்ரு, ஃபோக் மார்லி ரெக்கார்ட்ஸ் வெளியிட்ட ‘நாடோடிப் பாட்டுக்கு’ பாடலை சிறப்பாக இயக்கி, ஒளிப்பதிவு செய்த இயக்குநர், ஒளிப்பதிவாளர் ரியாஸ் மற்றும் அவரது குழுவினர், பாடலாசிரியர் லாவரதன் உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “அந்தோணி தாசனின் இந்த முயற்சியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். தான் நடந்து வந்த பாதையை மறக்காமல் தன்னைப்போல கலைஞர்களை கை தூக்கிவிடும் எண்ணம் கொண்டு இந்த நிறுவனத்தை துவங்கியிருப்பது பாராட்டுக்குறியது. எனது ஆதரவு எப்போதும் அந்தோணி தாசனுக்கு உண்டு.
அந்தோணி தாசன் மிகப் பிரமாதமான பாடகர் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்தோணி தாசன் பிரமாதமான நடிகனும்கூட. அந்தோணி தாசன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தை எதிர்காலத்தில் நான் இயக்குவேன்” என்றார் இயக்குநர் சீனு ராமசாமி.