“ஓடிடி ஃபிளாட்பார்ம்களுக்காக உருவாக்கப்படும் திரைப்படங்கள், சினிமா துறையை அழிக்கப் போகிறது” என்று இந்தியத் திரையுலகின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவரான மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், “செல்போன் மற்றும் லேப்டாப்பில் பார்ப்பதற்காக என்னுடைய படங்களை வெளியிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் ஒடிடியில் நானும் படங்களைப் பார்ப்பதில்லை.
தொலைக்காட்சியேகூட ஒரு சமரசம்தான். திரையரங்குகளில் பலமுறை ஓடிய படங்களைத்தான் தூர்தர்ஷ்னில் வெளியிட்டிருந்தோம். இவையெல்லாம் இரண்டாம்பட்சம்தான். உண்மையில் திரைப்படங்களுக்கான நோக்கம் இதுவல்ல.
திரைப்படங்கள் என்பது திரையரங்குகளின் காட்சி அனுபவத்திற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. அதை எப்படி சுருக்கி சிறிய திரையில் காட்ட முடியும்..? சினிமா என்பது இருண்ட திரையரங்கில் இணைந்து பார்க்கக் கூடிய ஒரு சமூக அனுபவம்.
இன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சியில் பார்ப்பதற்காக உருவாக்கப்படும் படங்கள் சினிமாவை அழித்துவிடும். கொரோனா நம்மை இரண்டு ஆண்டுகள் வீட்டுக்குள் வைத்திருந்தது. இது வீட்டிலிருந்தே படம் பார்க்கும் இடத்திற்கு நம்மை தள்ளியிருக்கிறது.
ஆனால், சினிமா உயிர்ப்பித்திருக்க வேண்டுமென்றால், அது சின்னத்திரையை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. இன்று ஹாலிவுட்டும்கூட இந்தச் சூழல் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நான் வட இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்யும்போது, ஓடும் ரயிலில் பருப்பு மற்றும் வேர்க்கடலை விற்கும் வியாபாரிகளைக் கண்டிருக்கிறேன். அவர்கள் அதை ‘டைம் பாஸ்’ என்று அழைக்கிறார்கள். நீண்ட பயணத்தின்போது நேரத்தைக் கொல்லும்விதமாக அவர்கள் உணவுப் பொருளை விற்கிறார்கள் என்பதை உணர்ந்தேன். அப்படி நீங்கள் சினிமாவை டைம்பாஸாக நினைக்க முடியாது” என்று சொல்லியிருக்கிறார்.










