மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ராமகிருஷ்ணன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் ‘பசங்க’ கிஷோர் மற்றும் அறிமுக நாயகி லவ்லின், ‘ஆடுகளம்’ கிஷோர், ரஞ்சனி, ‘கவிதாலயா’ கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – கிருஷ்ணா சேகர், ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், படத் தொகுப்பு – பிரேம், மக்கள் தொடர்பு – டி ஒன், சுரேஷ் சந்திரா, ரேகா, இணை தயாரிப்பு – டில்லி, புஷ்கர் மனோகர், எழுத்து, இயக்கம் – லட்சுமி ராமகிருஷ்ணன்.
2015-ம் ஆண்டு டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் அப்போதைய தமிழக அரசின் முட்டாள்தனமான நடவடிக்கையினால் செம்பரம்பாக்கம் ஏரி நள்ளிரவில் திறந்துவிடப்பட்டது. இதனால் சென்னையே வெள்ளக்காடாக மிதந்தது.
அந்த நேரத்தில், சென்னை அடையாறு டிபன்ஸ் காலனியில் ஒரு வீட்டில் நடைபெற்ற உண்மைச் சம்பவம்தான் இந்தப் படத்தின் கதை.
‘கர்னல் வாசுதேவன்’ ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரி. அவருடைய மனைவி ‘ராதா’ என்னும் ஸ்ரீரஞ்சனி. இவர்களுடைய மகள் கல்யாணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். வயதான இந்தத் தம்பதிகள் மட்டுமே வீட்டில் இருக்கிறா்கள்.
‘கர்னல் வாசுதேவன்’ என்னும் ‘ஆடுகளம்’ கிஷோருக்கு ‘அல்சைமர்’ நோய் உள்ளது. இதனால் அவருக்கு தன்னுடைய மனைவியையே அடையாளம் தெரியவில்லை. மகளையும் தெரிவதில்லை. ஆனால் திடீர், திடீரென்று அனைத்தையும் மறந்து மனைவியையே ‘யார் நீ?’ என்று கேட்பார். ஒரு குழந்தை போன்ற நிலைமையில் இருக்கும் தன் கணவரை, கண்ணும், கருத்துமாய் பார்த்துக் கொள்கிறார் ஸ்ரீரஞ்சனி.
இந்த நேரத்தில்தான் பெருவெள்ளம் அந்த வீட்டைச் சூழ்கிறது. பக்கத்து வீட்டில் வசிப்பவர்களெல்லாம் வீட்டைப் பூட்டிவிட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்போது கிஷோர் மட்டும் இந்த வீட்டைவிட்டு வெளியில் வர மறுக்கிறார். “இது என் வீடு.. நான் எதுக்கு வீட்டைவிட்டுப் போகணும்…” என்று குழந்தைத்தனமாகச் சொல்லி மறுக்கிறார்.
இவரை அழைத்துப் போக மனைவி ஸ்ரீரஞ்சனி பெரும் முயற்சித்தும் அவரால் முடியாமல் போகிறது. வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து, அவர்களது உயிரைப் பறிக்கும் அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது.
இந்த இக்கட்டில் இருந்து இருவரும் பிழைத்தார்களா.. அல்லது ஜலசமாதி அடைந்தார்களா என்பதுதான் இந்தப் படத்தின் பரபரப்பான உச்சக்கட்டக் காட்சி.
ஆண் இயக்குநர்களுக்குக்கூட தோன்றியிருக்காத புதுமையான கதை. நான்கே நான்கு பிரதான கதாபாத்திரங்களைக் கொண்டு “ஐயோ பாவமே…” என்று பார்வையாளர்கள் வருந்தும் அளவுக்கு நடிப்பை வரவழைத்து.. அடுத்தது என்ன என்பது போன்ற படபடபப்பான திரைக்கதையையும் அமைத்து படத்தை மிக இனிமையாக இயக்கியிருக்கிறார் பெண் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
அவர் இதற்கு முன்பு இயக்கியிருந்த ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களைவிடவும், இந்தப் படமே அவருடைய இயக்கத்தில் மிகச் சிறந்த படமாக உருவாகி வந்திருக்கிறது.
‘அல்சைமைர்’ என்னும் மறதி நோயால் பாதிக்கப்படும் நோயாளி எப்படியிருப்பாரோ அதை அப்படியே அச்சு அசலாகச் செய்திருக்கிறார் ஆடுகளம் கிஷோர்.
மனைவியை தன்னைத் தொடக் கூட அனுமதிக்காமல் “யார் நீ…?” என்று கேட்டுவிட்டு, பின்பு அவரிடமே “பசிக்கிறது…” என்று கெஞ்சி.. “குளிக்கப் போங்க…” என்பதற்கு பல கேள்விகளைக் கேட்டு பார்க்கின்ற நமக்கே எரிச்சலூட்டும் அளவுக்கு இவரது நோயாளிக்கான கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இருந்தும், தாய்மையின் மறுவடிவமாய்.. அன்பே சிவமாய்.. அன்பின் உருவமாய்.. மனைவி வடிவில் இருக்கும் தெய்வமாய் காட்சியளிக்கும் ஸ்ரீரஞ்சனி தன்னுடைய தேர்ந்த நடிப்பால் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார்.
இவர்களின் தற்போதைய வாழ்க்கைக் கதையுடன் இவர்கள் எப்படி திருமண பந்தத்தில் இணைந்தார்கள் என்ற 35 வருட காலத்திற்கு முந்தைய கதையையும் பிளாஷ்பேக்கில் இணைத்துச் சொல்லியிருப்பது மிகவும் சுவாரஸ்யமானது.
நம்மை நேசித்த கணவராச்சே என்ற ரீதியில் மனைவிக்கு அவர் மீதிருக்கும் கரிசனமும், பாசமும், நேசமும், அன்பும் மகத்தானது. “யார் நீ.. நீ எப்படி என் பக்கத்துல படுக்கலாம்…” என்று தன்னை எட்டி உதைத்த கிஷோரைத் திட்ட முடியாமல் தன் நிலைமையை உணர்ந்து தனக்குத்தானே புலம்பிக் கொண்டு வேறிடத்தில் படுக்கையை விரிக்கும் ஸ்ரீரஞ்சனியின் அந்த ஒரு காட்சியே அவருடைய நடிப்புத் திறனை வெளிக்காட்டுகிறது. ஹாட்ஸ் அப் மேடம்..!
கிளைமாக்சில் தான் அறையில் மாட்டிக் கொண்டதைவிடவும், கணவர் என்ன செய்கிறாரோ.. ஏது செய்கிறாரோ என்கிற பதட்டத்தில் “அண்ணா.. நான் உங்க ராதாண்ணா.. இந்தப் பக்கம் வாங்கோ…” என்று அவர் கதறும் காட்சியில் நம் அடிவயிறே கலங்குகிறது.
இந்தக் கேரக்டெருக்கு நேரெதிரான அமைதியான, அப்பாவியான முகம் கொண்டவராகத் தெரிகிறார் சின்ன வயது ஸ்ரீரஞ்சனியாக நடித்திருக்கும் லவ்லின் சந்திரசேகர்.
அப்படியொன்றும் மிகப் பெரிய அழகியல்ல. ஆனால் கேமிராவுக்கேற்ற முகம். பள்ளிப் பருவத்தைத் தொட்ட கையோடு வாழ்க்கைப் பயணத்தில் கை கோர்க்கும் கேரக்டர் ஸ்கெட்ச். புதுப்பெண்ணுக்கே உரித்தான வெட்கத்தையும், மிரட்சியையும், கலக்கத்தையும் தனது கண்களிலேயே காட்டியிருக்கிறார் லவ்லின்.
புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதைப் போல தனது தாய் நடிகை விஜி சந்திரசேகர் மற்றும் பெரியம்மாவான நடிகை சரிதாவின் நடிப்பாற்றலை தனது ஜீனில் கொண்டு, நடிப்புத் துறையில் களம் புகுந்திருக்கும் லவ்லினுக்கு எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய பெரிதும் வாழ்த்துகிறோம்.
வாலிப வயது கிஷோராக ‘பசங்க’ கிஷோரும் நடித்திருக்கிறார். தன்னுடைய மனைவியாக வரப் போகிறவளை நேரில் பார்க்காமல் தான் கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என்ற ஏக்கத்தை வெளிப்படும் கிஷோரை ரசிக்க முடிகிறது.
இதேபோல் கல்யாணத்திற்கு முன்பு அந்த வீட்டிலேயே இருந்து கொண்டு லவ்லினை ரசிக்கும் கிஷோரும், பாடல் காட்சிகளில் இவர் காட்டும் நெருக்கமும் ஓஹோ..!
இத்தம்பதிகளின் ஊடல், கூடல், நெருக்கம், காதல்.. என்று அனைத்தையும் ஆண் இயக்குநர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அமைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநருக்கு நமது ஸ்பெஷல் பாராட்டுக்கள்.
படம் ஒரு பக்கம் பாலக்காட்டு மழையுடன் கூடிய ஊரையும், அந்தக் கிராமத்தையும் காட்டினாலும் இன்னொரு பக்கம் பெரு ஊழி மழையையும் காட்டியிருக்கிறது ஒளிப்பதிவு. ஒளிப்பதிவாளர் கிருஷ்ணா சேகரின் பணி நிச்சயமாக வியக்கத்தக்கது.
ஒரே வீட்டுக்குள் நடக்கின்ற கதை என்றாலும், தண்ணீர் நிரம்ப, நிரம்ப அந்த வீட்டுக்குள் இருக்கும் பொருட்களெல்லாம் மிதக்கத் துவங்கிய பின்பு எந்தவொரு கலை இயக்கக் குறைபாட்டையும், சீன் கண்டினியூட்டியையும் கெடுக்காமல் அப்படியே அச்சு அசலாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். கிளைமாக்ஸ் காட்சியில் இருக்கும் பதட்டத்தை கேமிரா வழியாகவும் கடத்தியிருக்கிறார் கிருஷ்ணா சேகர்.
ஸ்ரீரஞ்சனி தன் அறைக்குள் மாட்டிக் கொண்டு திணறுவதையும், அதே நேரம் தன் புத்திக்கெட்டியவாறு பீரோவை தூக்கி நிறுத்துவதையே தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் கிஷோரின் செயலையும் கண வித்தியாசத்தில் திரும்பத் திரும்ப தொகுத்தளித்து கிளைமாக்ஸ் காட்சி உயிரோட்டமாய் முடிவதற்கு மிகப் பெரிய அளவுக்கு உதவியிருக்கிறார் படத் தொகுப்பாளர் பிரேம் குமார்.
ஜிப்ரானின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறது. காதுகளுக்கு இரைச்சலைக் கொடுக்காமல் பாலக்காட்டு பிராமண பாஷையை முழுமையாக காதில் நுழையும் வண்ணம் பின்னணி இசையை கச்சிதமாக கத்தரித்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். சில இடங்களில் இசையை மெளனித்தும் நமக்கு பெரிதும் உதவியிருக்கிறார். ஜிப்ரான்.
மிகவும் எளிமையான ஒரு காதல் கதையை, மழையை பின்னணியில் சுவாரஸ்யமான திரைக்கதையில் அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.
நிபந்தனையற்ற காதல் என்று பார்க்கப் போனால் இப்போதைக்கு திருமணமான தம்பதிகளுக்குள் மட்டுமே இருக்க முடியும். இதனை இந்தப் படத்தில் அழுத்தமாய் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
நோயாளிதான் என்றாலும்.. அவரைக் கவனித்துக் கொள்வது அத்தனை சுலபலமில்லை என்றாலும் தான்தான் பார்த்துக் கொண்டாக வேண்டும் என்ற கடமையை தொடர்ச்சியாக செய்து வரும் ஸ்ரீரஞ்சனி ஒரு உண்மையான காதலியாகவே நம் கண்களுக்குத் தெரிகிறார்.
படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியையும், பிரேமையும் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். இரண்டே நபர்கள்தான் என்பதால் மிக நெருக்கமான ஷாட்டுகள் மூலம் நம் மனதுக்குப் பிடிப்பதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
கிளைமாக்ஸ் காட்சியில் புருஷன், பொஞ்சாதி ரெண்டு பேரும் என்ன ஆனாங்களோ என்பதை பார்வையாளர்களின் முடிவுக்கே விட்டுவிட்டார் இயக்குநர். அதை அவரே காட்டியிருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். இந்தக் குழப்பத்துடனேயே தியேட்டர் ரசிகர்கள் ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவித்தபடியேதான் வீட்டுக்குப் போகிறார்கள். இதுதான் படத்தில் இருக்கும் மிகப் பெரிய குறை.
வெள்ளக் கால செய்திகளை நேரடி ஒளிபரப்பும் செய்யும் டிவி செய்தி காட்சிகளையும், இரவு நேரத்தில் எஃப்.எம். ரேடியோவில் ‘கண்ணன் ஒரு கைக் குழந்தை’ பாடல் ஒலிப்பதையும் பொருத்தமான இடத்தில் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
இந்தப் படத்திற்கு எதற்கு பாலக்காட்டு பிராமண பாஷை என்று தெரியவில்லை. இதை ஒரு குறீயீடாகக்கூட சொல்ல முடியாத அளவுக்குத்தான் படத்தின் கதை இருக்கிறது. இது காதல் படம்தானே..? எந்த சாதியாக இருந்தால் என்ன..? சாதியக் குறியீடு இல்லாமல் இருந்திருந்தால் படம் இதைவிடவும் நன்றாகவே இருந்திருக்கும்.
இருந்தும் அந்த பாலக்காட்டு பிராமண பாஷையை ஸ்ரீரஞ்சனிக்காக டப்பிங்கில் பேசியிருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷணின் குரல் வளம் கவனிக்கத்தக்கது. மிகச் சிறப்பு..!
இதே நேரம் பிராமணனாக இருந்தாலும் ராணுவத்தில் இருப்பதால் கிடைப்பதை வைத்து சாப்பிட வேண்டும் என்கிற கொள்கைக்கேற்ப கிஷோரின் அசைவ சாப்பாடு பிரியத்தையும் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இதேபோல் சுப்புலட்சுமி பாட்டியிடம் பூவைக் கொடுத்து தலையில் வைத்துக் கொள்ளச் சொல்வதும்கூட ஒருவித சாதிய எதிர்ப்பு கோஷம்தான். இதற்காகவும் இயக்குநருக்கு தனி பாராட்டுக்கள்.
சிறந்த கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், கலை இயக்கம், ஒலிப்பதிவு இயக்கம், உடைகள் வடிவமைப்பு என்று அனைத்திலும் களம் புகுந்து ஜெயித்திருக்கும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இத்திரைப்படம் ஒரு மகுடம்..!
‘அன்பு என்றால் என்ன’ என்பதற்கு இத்திரைப்படம் ஒரு சான்று..!