full screen background image

‘ஐ’ படத்தின் விழாவுக்கு அர்னால்டு வருகை உறுதியாம்..!

‘ஐ’ படத்தின் விழாவுக்கு அர்னால்டு வருகை உறுதியாம்..!

இதுவரையில் 200 கோடி செலவைத் தொட்டுவிட்டதாகச் சொல்லப்படும் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் மிக பிரமாண்டமாகவே நடத்தப் போகிறார் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்..

‘தசாவதாரம்’ படத்திற்கு ஜாக்கிசானை அழைத்து வந்ததுபோல இந்தப் படத்திற்கு ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு ஷெவர்நாட்ஷெரை அழைத்திருக்கிறாராம்.. இவர் போன்ற ஹாலிவுட் ஹீரோக்கள்(அதுவும் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர்) வருகையென்றால் அது இங்கே சொத்துக்களை முழுங்கும் விஷயம்..

தனி விமானத்திற்கான செலவுகள்.. தங்கும் வசதிகள்.. உடன் வரும் நபர்களுக்கான செலவுகள் என்று அர்னால்டுக்கான செலவு கோடிகளை முழுங்கப் போகிறது. ஆனாலும் எப்படியும் அர்னால்டை அழைத்து வந்தே தீருவது என்று கங்கணம் கட்டி அதைச் செயல்படுத்தியிருக்கிறார் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரனின் இளைய சகோதரர் ரமேஷ்பாபு சமீபத்தில் கலிபோர்னியா சென்று அர்னால்டை நேரில் சந்தித்து இசை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.

arnold

arnold-1

அவர் வருவதாக இருந்தால் எப்படியும் நேரு ஸ்டேடியம்தான் கட்டுப்படியாகும்.. செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள். அன்றைக்கு ஏதாவது அரசு விழா இருந்துவிட்டால் தொலைந்தது.. நேரு ஸ்டேடியத்தை 3 நாள் முன்னதாகவே வாங்கினால் மட்டும்தான் பிரமாண்டமான மேடையெல்லாம் போட முடியும். அரசுத் தரப்பில் மல்லுக் கட்டினால்தான் இது நடக்கும்.

‘ஐ’ படத்தின் டிவி உரிமையை ஜெயா டிவிக்கு கொடுத்திருப்பதாக லேட்டஸ்ட் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையெனில் நேரு ஸ்டேடியம் பற்றி இரண்டாவது பேச்சுக்கே இடமில்லை.. சகலமும் கிடைத்துவிடும்..

நேரு ஸ்டேடியம் இல்லையெனில் வேறு எங்கே என்று கேட்டால் கஷ்டம்தான்.. ஆயிரக்கணக்கான ரசிகர்களை அமர வைக்க வேறொரு இடமும் இல்லை.. ஆஸ்கர் பிலிம்ஸ் இதையெல்லாம் சமாளித்து வெற்றிகரமாக நிகழ்வை நடத்தும் என்று எதிர்பார்க்கிறோம்..!

அதே சமயம், இத்தனை கோடி செலவழித்து அவரை வரவழைத்து விழா நடத்துவதால் என்ன பயன் கிடைத்துவிடப் போகிறது என்பதையும் யோசிக்க வேண்டும்..? ஏற்கெனவே படம் 200 கோடியை முழுங்கிவிட்டது. இந்தப் பணத்தை எடுக்க  2000 தியேட்டர்களைத் தாண்டித்தான் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டி வரும்..

உலகம் முழுக்க 15000 தியேட்டர்களை புக் செய்யப் போகிறோம் என்று சொல்கிறார்களாம்.. இது சாத்தியமில்லாதது என்பது அனைவருக்குமே தெரியும்.. தீபாவளி தினத்தன்றுதான் தமிழில் ‘கத்தி’, ‘பூஜை’ போன்ற பெரிய படங்களும் திரைக்கு வர இருக்கின்றன.

தமிழ்நாட்டில் பெரிய படங்களை திரையிட இருக்கின்ற தியேட்டர்களை தொள்ளாயிரத்து சொச்சம்தான்.. இதில் 350, 350, 200 என்று பிரித்தால்தான் ‘ஐ’, ‘கத்தி’, ‘பூஜை’ மூன்றுமே ரிலீஸாக முடியும்.. தமிழிலேயே வெறும் 350 என்றால் மற்ற இந்திய மொழிகளையும் சேர்த்தால் இந்தியாவில் 1000 தியேட்டர்களுக்குள்தான் ‘ஐ’-க்கு கிடைக்கும். ஒருவேளை ரிலீஸ் தள்ளிப் போய் தீபாவளியை தாண்டிய நாள் என்றால் தியேட்டர்கள் எண்ணி்ககை கூடலாம்.

இத்தனை தியேட்டர்களை புக் செய்து கல்லா கட்டினால்தான் போட்ட காசு வரும் என்கிற நிலைமையில் இத்தனை கோடிகள் செலவு செய்து அர்னால்டை வரவழைத்து  விழா நடத்துவதால் ‘ஐ’ படம் நிச்சயம் அமோக வசூலுடன் ஓடி விடும் என்று எதிர்பார்ப்பது  நமது முட்டாள்தனம்..!

‘தசாவதாரம்’ உண்மையிலேயே சூப்பரான மேக்கிங் என்பதால்தான் அந்த ஓட்டம் ஓடியது.. ஜாக்கிசானின் வருகையினால் அப்போதைய முதல்வர் மட்டுமே மேடையில் அவரருகில் அமர முடிந்ததால் சந்தோஷப்பட்டார். அவ்வளவுதான்..! ரசிகர்களுக்கு அதுவொரு விழா.. அவ்வளவுதான்..!

ஏற்கெனவே பணப் பற்றாக்குறை.. பட்ஜெட் இடிக்கிறது.. வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு சம்பளப் பாக்கி என்றெல்லாம் பேச்சு இருக்கும் நிலையில் ஆஸ்கர் பிலிம்ஸ் இதனைச் சமாளித்து எப்படித்தான் இத்தனை விஷயங்களை செய்கிறார்களோ தெரியவில்லை..?

உண்மையில் தமிழ்ச் சினிமாவில் தயாரிப்புப் பணியில் ஆச்சரியம் என்பதற்கு ஒரேயொரு உதாரணம் ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம்தான்..!

‘ஐ’ ஜெயிக்கட்டும்..!

Our Score