காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம், சிங்கப்பூர் மீடியா அத்தாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ‘சென்னை சிங்கப்பூர்’ என்ற படத்தை தயாரிக்கின்றனர்.
இந்தப் படத்தின் மூலம் சிங்கப்பூர் நாடு, தமிழ் சினிமாவுக்கு பிரதான வர்த்தக வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பல்வேறு திரையுலக திறமையாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றும் இந்த ‘சென்னை சிங்கப்பூர்’ திரைப்படம் அடுத்த வருடத்தின் துவக்கத்தில் வெளிவரவிருக்கிறது.
சென்னையைச் சார்ந்த ஒரு வளரும் திரைப்பட இயக்குநர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடி வருகிறான். அங்கே அவன் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் உருவாகும் காதலும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சம்பவங்களும் ருசிகரமான திரைக்கதையில் படமாக்கபட்டு உள்ளது.
‘அமர காவியம் ‘ மூலம் இளைஞர்களை குறிப்பாக இளம் பெண்களை பெரிய அளவில் கவர்ந்த சத்யா இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ‘திருமணம் எனும் நிக்கா’ படத்தில் அறிமுகமான ஹெப்பா படேல். ‘ஆந்திரா மெஸ்’ என்ற படத்தில் அறிமுகமாகும் , திறமையான ஒளிபதிவாளர் என்று பரவலாக பாராட்டப்படும் முகேஷ் ஒளிப்பதிவில் , தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளர் கே எல் பிரவீன் படத்தொகுப்பில், ‘வாகை சூடவா’, ‘திருமணம் எனும் நிக்கா’, ‘அமர காவியம்’ , ‘ரன் ராஜா ரன்'[ தெலுங்கு] என்று தொடர்ச்சியாக தன்னுடைய செவிக்கினிய இசையால் எல்லோரையும் கவர்ந்த ஜிப்ரான் ‘ சென்னை சிங்கப்பூர்’ படத்துக்கும் இசை அமைக்கிறார்.
பல்வேறு ஆவணப் படங்களை தயாரித்து இயக்கிய அப்பாஸ் அக்பர் என்னும் அறிமுக இயக்குனர் இந்தப் படத்திற்கு கதை , திரைக்கதை, அமைத்து இயக்குகிறார்.










