பீமாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் எஸ்.சாமுவேல், காட்சன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் D-3.
இப்படத்துக்கு மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீஜித் எடவானா இசையமைத்துள்ளார். கலை இயக்கம் – ஜெயசீலன், சண்டை பயிற்சி இயக்கம் -ராம்போ விமல், படத் தொகுப்பு – ராஜா ஆறுமுகம்.
‘D3’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி ஆர்.மனோகர், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாகுவார் தங்கம், இயக்குநர் மோகன்.ஜி, நடிகர் அபிஷேக், கூல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் படத்தின் நாயகனான நடிகர் பிரஜின் பேசும்போது, “நான் கடந்த 19 ஆண்டுகளாக 24 படங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் இன்னமும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கான இடத்தை இன்னும் அடையவில்லை. அதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த படங்கள் எதுவுமே வெளியாகாமல் இருந்ததில்லை. பாதியில் நின்று போனதில்லை.
நான் முதல்முதலாக இந்தப் படத்தில்தான் போலீஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடித்துள்ளேன். எனது அப்பா காவல்துறையில் இருந்தவர்தான். தனது துறையைப் பற்றி நிறைய சொல்லி இருக்கிறார். எனவே போலீசாக நடிப்பது எனக்கு சிரமமாக இல்லை.
இது ஒரு மணி நேரத்தில் நடக்கும் கதை. இந்தப் படத்தில் என்னுடைய அதிகபட்ச உழைப்பைக் கொடுத்திருக்கிறேன். இந்தப் படத்திற்காக கதை கேட்டுக் கொண்டதால் நான் நிர்வாணமாகவும் ஓடி இருக்கிறேன்.
படம் பண்ணுவதைவிட இன்று அதை விளம்பரப்படுத்துவது சிரமமாக உள்ளது. நாங்கள் முடிந்தவரை அதை சாத்தியப்படுத்தி இருக்கிறோம். அதற்குப் பலரும் ஒத்துழைத்தார்கள். இந்தப் படத்தின் போஸ்டர்கள் பேசப்பட்டன.
என் சினிமா, தொலைக்காட்சி அனுபவங்களில் இந்தப் படம் நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாக இருந்திருக்கிறது. நிறைய நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடந்தது. அனைவரும் நன்றாக ஒத்துழைத்தனர்.விரும்பிச் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.இந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. இருக்கிற நல்ல வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. எனவே இந்தப் படத்தை ஒப்புக் கொண்டேன். முடிந்தவரை உழைத்திருக்கிறேன். படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டுகிறேன்” என்றார்.