கதை திருட்டு விவகாரம் – அமேஸானில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹீரோ’ திரைப்படம்

கதை திருட்டு விவகாரம் – அமேஸானில் இருந்து நீக்கப்பட்ட ‘ஹீரோ’ திரைப்படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் ‘ஹீரோ’. இயக்குநர் மித்ரன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று கூறி இயக்குநர் போஸ்கோ பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 10-03-2020 அன்று வழங்கிய இடைக்கால உத்தரவில், “இந்த ஹீரோ படத்தை வேறு மொழிகளில் வெளியிட கூடாது. மற்றும், மொழி மாற்றம் [டப்பிங்], சாட்டிலைட் உரிமைகளையும் யாருக்கும் தரக் கூடாது…” என்றும் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்தத் தடையையும் மீறி தெலுங்கில் ‘சக்தி’ என்ற பெயரில் ‘ஹீரோ’ படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு கடந்த மார்ச் 20-ம் தேதி தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் வெளியாக இருந்தது.

ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டதால் இத்திரைப்படம் வெளியாகவில்லை.

இதையடுத்து கடந்த மாத இறுதியில் அமேசான் பிரைம் என்ற OTT தளத்தில் ‘ஹீரோ’ தமிழ்ப் படமும், இதன் தெலுங்கு டப்பிங் படமான ‘சக்தி’ திரைப்படமும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆனால் படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடி வரும் இயக்குநர் போஸ்கோ பிரபு இது குறித்த நீதிமன்றத் தீர்ப்பினை அமேஸான் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியதால் ஹீரோ தமிழ்ப் படமும், சக்தி தெலுங்கு படமும் அமேஸான் OTT தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இயக்குநர் போஸ்கோ கூறும்போது, “ஹீரோ” திரைப்படம் எந்த ஒரு வேற்று மொழியிலும் எந்த வகையிலும் வெளியிடுவதற்கும் மற்றும் ஹீரோ திரைப்படத்தை டிஜிட்டல், இணையதளம் மற்றும் சாட்லைட் தொலைக்காட்சி என எதிலும்  வெளியாவதற்கு நான் தொடுத்த வழக்கினால் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியானது.  இதையடுத்து அமேசான் பிரைமுக்கு இமெயில் மூலம்  நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் நகலை அனுப்பினேன்.

இதைப் பார்த்த அவர்கள் இப்போது ஆன்லைனில் இருந்து அந்த 2 படங்களையும் நீக்கிவிட்டார்கள். விரைவில் நீதிமன்றத்தில் இருந்து இத்திரைப்படம் தொடர்பாக இறுதித் தீர்ப்பு நல்லவிதமாக வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்…” என்றார்.

Our Score