கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் தயாரிப்பில், இயக்குநர் விஜய்ஸ்ரீஜியின் இயக்கத்தில், ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடித்திருக்கும் புதிய படம் ‘ஹரா.’
இந்தப் படத்தில் மோகனுடன், அனுமோள், கெளசிக், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜய்குமார், மைம் கோபி, சிங்கம்புலி, தீபா சங்கர், மனோபாலா, சந்தோஷ் பிரபாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பாடல்கள், எழுத்து, இயக்கம் – விஜய்ஸ்ரீஜி, இசை – பிரசாந்த் அர்வின், ஒளிப்பதிவு – பிரகாத் முனுசாமி, மனோ தினகரன், மோகன், விஜய்ஸ்ரீஜி, படத் தொகுப்பு – குணா, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.
14 வருட கால வனவாசத்திற்குப் பிறகு வெள்ளிவிழா நாயகனான மோகன் நாயகனாக நடித்திருக்கும் படம். “இத்தனையாண்டுகளாக நடிக்காமல் இருக்கும்போது கேட்ட கதைகளைவிடவும் இந்தக் கதைதான் தனக்குப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணியதால் இந்தக் கதையில் நடிக்க ஒத்துக் கொண்டதாக” மோகன் பல்வேறு பேட்டிகளில் கூறியிருந்தார்.
இந்தக் கதையும், படமும் அந்த அளவுக்குப் பாராட்டுக்குரியதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
ஊட்டியைச் சேர்ந்த மோகன், அனுமோள் தம்பதியினருக்கு டீன் ஏஜில் ஒரு மகள். கோவையில் ஒரு கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். இதனால் மனம் நொந்து போன மோகன் தற்போது கோவைக்கு இடம் பெயர்கிறார்.
கோவையில் ஒரு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தினத்தன்று தன் மகளின் சாவுக்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து கிளம்புகிறார் மோகன்.
இந்த நேரத்தில் ஊட்டியில் இன்ஸ்பெக்டராக இருந்த ஜெயக்குமார், மோகனால் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அவரும் கோவையில் மோகனைப் பார்த்துவிட்டு சில மப்டி போலீஸாருடன் அவரைப் பின் தொடர்கிறார்.
வழியில் லோக்கல் தாதாவான மொட்டை ராஜேந்திரனிடம் கள்ளத் துப்பாக்கியொன்றை வாங்குகிறார் மோகன். பேருந்தில் பயணிக்கும்போது இளம் பெண்ணிடம் ஈவ் டீசிங் செய்யும் ஒரு ரவுடியை, அதே துப்பாக்கியை வைத்துச் சுட்டுத் தள்ளுகிறார் மோகன்.
விநாயகர் ஊர்வலத்தையொட்டி நகரில் பெரும் பாதுகாப்பு ஏற்பாட்டினை செய்திருக்கும் காவல்துறை மோகனை பிடிக்க தனிப்படைகளை அமைத்து தேடுகிறது.
அதே நேரம் தன் மகளை ஒருதலையாய் காதலித்தவனைக் கண்டுபிடிக்கும் மோகன் தன் மகள் சாவுக்குக் காரணத்தைக் கேட்க கதை வேறாக விரிகிறது.
அது என்ன கதை..? கடைசியில் மோகன் அதைக் கண்டுபிடித்தாரா இல்லையா..? மோகனை போலீஸார் பிடித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
‘மைக்’ மோகன் என்ற பெயரிலேயே தமிழ் ரசிகர்களிடையே பெயர் பெற்றிருக்கும் மோகனுக்கு இந்தப் படத்தில் மைக் கிடைக்கவில்லை. கூடவே பாடல் காட்சியில்கூட பாடலுக்கு வாயசைக்கும் வாய்ப்புகூட கிடைக்கவில்லை என்பது சோகமானதுதான்.
‘ராம்’ என்ற ‘இப்ராஹிமாக’ நடித்திருக்கும் மோகன் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் இறுக்கமான முகத்துடன் சோகம் ததும்பிய தோற்றத்தில், அதே நேரம் வெறிகொண்டலையும் புலியாகவும் நடித்திருக்கிறார்.
குடும்பத்தின் மீது பாசம் கொண்டவராகவும், அதே நேரம் எல்லா விஷயத்திலேயும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அந்தக் குணத்தையும் தன் நடிப்பில் காண்பித்திருக்கிறார். ஊட்டி போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சண்டைக்குப் பிறகு ஸ்டைல் காட்டும் மோகனின் நடிப்பு நிச்சயம் அவரது ரசிகர்களுக்கே புதிதுதான்.
மகளைத் தேடியலையும் அதே நேரத்தில் வீட்டிலும் ஒரு கண் வைத்திருந்து மனைவியிடம் தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை சொல்லவிடாமல் தடுத்தாண்டு திரைக்கதையில் டிவிஸ்ட்டை கொடுத்திருக்கிறார்.
சண்டை காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சிறப்பான பெர்பார்மென்ஸை கொடுத்திருக்கலாம். முடிவை நோக்கி திரைக்கதையை நகர்த்திச் சென்றிருப்பதில் ஒரு அவசரம் தெரிவதால், மோகனின் நடிப்பிலும் பிரமாதத்தை நம்மால் காண முடியாமல் போய்விட்டது. இப்போதைய காலக்கட்டத்திற்கேற்ற அடக்கமான நடிப்பைக் காண்பித்து ஓகே வாங்கியிருக்கிறார் மோகன். பாராட்டுக்கள்.
மனைவியாக அனுமோள்.. வட்டமான, பாந்தமான முகம். சேலையில் கவர்ச்சியான தோற்றத்தில் ஊட்டி வாழ்க்கையில் சிரித்தபடியே வலம் வருபவரை மிகவும் பிடிக்கிறது. ஆனால், கோவை வாழ்க்கையில் அவர் அனுபவிக்கும் இரட்டை வாழ்க்கையையும், அதன் சோகத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் தன்னுடைய சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். பாராட்டுக்கள்..!
மகளாக நடித்த பெண் ஒரு சில காட்சிகள் என்றாலும் ரசிக்க வைத்திருக்கிறார். கடைசிவரையிலும் மோகனுக்கு உதவிகளை செய்யும் அனித்ரா நாயர் இன்னொரு பக்கம் ஸ்கிரீனை பார்க்க வைக்கப் பெரிதும் உதவியிருக்கிறார்.
மோகனின் மகளை ஒருதலையாய் காதலிக்கும் வாலிபனாக நடித்திருக்கும் புதுமுக ஹீரோ சந்தோஷ் பிரபாகரன் இயக்குநரின் இயக்கத்திற்கேற்ப தனது முதல் நடிப்பை சிறப்பாக எடுத்து வைத்திருக்கிறார். அடுத்தடுத்தப் படங்களில் இவரது நடிப்பு இன்னும் சிறப்பாக வேண்டும் என்று வாழ்த்துவோம்.
இன்றைய நாட்டு நடப்பை அப்படியே எடுத்து வைக்கும் முதலமைச்சராக பழ.கருப்பையாவும், “எப்போது வேண்டுமானாலும் ஆட்சியைக் கவிழப்பேன்..” என்று 20 எம்.எல்.ஏ.க்களை கையில் வைத்துக் கொண்டு மிரட்டும் பெண் அமைச்சராக வனிதா விஜய்குமாரும், இவருடைய மறைமுக கூட்டாளியாக சுரேஷ் மேனனும் குறிப்பிட்டத்தக்க நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள்.
மற்றும் ஒரேயொரு கோர்ட் சீனில் மட்டும் நடித்திருக்கும் யோகிபாபு, காமெடியனா, வில்லனா, ரவுடியா என்பதே தெரியாத அளவுக்கு நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன், மோகனை விரட்டிக் கொண்டேயிருக்கும் ஜெயக்குமார், மைம் கோபி, தீனா, நீதிபதி தீபா சங்கர் என்று சிலரும் தங்களுடைய இருப்பைக் காண்பித்திருக்கிறார்கள். அவ்வளவே..!
பலர் ஒன்றுகூடி செய்திருக்கும் ஒளிப்பதிவு கதைக் களம் பல்வேறு காலக்கட்டங்களில் நடக்கிறது என்பதாலும், பல ஊர்களில் நடக்கிறது என்பதாலும் நான்குவிதமான ஒளியைத் திரையில் காண்பித்திருக்கிறது. மோகன், அனுமோளின் அழகைக் காண்பித்திருப்பதில் ஜெயித்திருக்கிறார்கள்.
அர்வினின் இசையில் ‘மகளே’ பாடலும், ‘ஆசை தேவதை’ பாடலும் பட ரிலீஸுக்கு முன்பாகவே ஹிட்டடித்துவிட்டது. படத்திலும் பாடல்களைப் படமாக்கியிருக்கும்விதம் சிறப்பு. ஆனால், சண்டை இயக்கத்தில் இன்னும் கொஞ்சம் வேகம் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
சாதாரணமானதொரு இயக்கத்தில், மெலிதான திரைக்கதையில், நம்மை தூண்டிவிடாத வசனங்களுடன், நம்ப முடியாத கதை, திரைக்கதையில்… படம் சொல்ல வந்திருக்கும் விஷயம் மட்டுமே இந்தப் படத்தில் சரி என்பதாகவுள்ளது.
கல்லூரி மாணவிகள் மேலான பாலியல் துன்புறுத்தல்களை நம்ப முடியாத திரைக்கதையில் சொல்லியிருப்பதுதான் ஏற்க முடியாததாகிவிட்டது. எந்தக் கல்லூரியில் வகுப்பறைக்கே வந்து பெண்களைத் தூக்கிச் செல்கிறார்கள்.? எந்தக் காலத்துக் கதை இது..?!
அதோடு திரைக்கதையும் அடுத்த காட்சி இதுதான் என்பதை நாமளே யூகிக்கும் அளவுக்கு இருப்பதும், பல இடங்களில் திரைக்கதையின் லாஜிக், எல்லை தாண்டிப் போயிருப்பதையும் சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.
என்னதான் போலீஸ் கமிஷனராகவே இருந்தாலும் சாதாரண ரவுடிக்கே போன் செய்து எச்சரிப்பதும், கடைசியாக மோகனை உயிர் தப்பிக்க வைக்க கமிஷனரே அட்வைஸ் கொடுப்பதும் படத்தைக் காமெடியாக்கிவிட்டது என்பது உண்மைதான்.
மகளை இழந்தவருக்கு அதற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தவிப்பது இயல்புதான். ஆனால் அதற்காக நானே நீதி வாங்கிக் கொள்கிறேன்.. குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன்… என்று சொல்லி பலரும் இதேபோல் துப்பாக்கியோடு தெருவில் இறங்கினால் நாடு என்னாவது.?
ஆக, இந்தப் படம் கடைசியாக சொல்லும் நீதி சரிதான் என்றாலும் சொல்லியவிதம் தவறு என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..!
‘வெள்ளிவிழா’ நாயகன் மோகனுக்கு இதுவொரு சாதாரண படம்தான்..!
RATING : 3 / 5









