full screen background image

“சாதியைப் பற்றிய திரைப்படம்தான் இந்தக் ‘காயல்” – இயக்குநர் தமயந்தி பேச்சு!

“சாதியைப் பற்றிய திரைப்படம்தான் இந்தக் ‘காயல்” – இயக்குநர் தமயந்தி பேச்சு!

ஜெ ஸ்டுடியோ தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாதிகா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘காயல்’.

அறிமுக இயக்குநர் எழுத்தாளர் தமயந்தி இயக்கியிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஜஸ்டின் கெனன்யா இசையில் உருவான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது.

விழாவில் தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் பேசும்போது, “இந்த படத்தின் கதையை நான் படித்துப் பார்த்ததும் தயாரிக்க முடிவு செய்துவிட்டேன். நான் அமெரிக்காவில் வசித்து வருவதால் கதையை நேரில் கேட்க சந்தர்ப்பம் அமையவில்லை. இயக்குநர் தமயந்தி அவர்கள் ஸ்கிரிப்ட் அனுப்பி வைத்திருந்தார். அதை வாசித்து முடித்ததும் இந்த படத்தை நாம்தான் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஏற்ப்பட்டது. அப்படி துவங்கப்பட்டதுதான் இந்தக் ‘காயல்’ திரைப்படம்.

நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் யாரையும் நேரில் பார்த்ததில்லை. இன்றுதான் பார்க்கிறேன். ஒரு நல்ல கதை, அதற்கான இடத்தை தானாக வந்தடையும். இந்தக் கதையும் அப்படிப்பட ஒரு இடத்தை வந்தடைந்திருக்கிறது. இன்னும் நல்ல கதைகளை திரைப்படமாக்குவதில் ஜெ ஸ்டுடியோ தயாராக இருக்கிறது. இந்தக் ‘காயல்’ திரைப்படம் தமிழில் பெரும் வரவேற்பை பெரும் என்று நம்புகிறேன்…” என்றார்.

விழாவில் இயக்குநர் தமயந்தி பேசும்போது, “இந்தக் கதை எனது வாழ்வில் நடந்த கதைதான். சாதி வன்முறை மற்றும் பிரிவினைவாத எண்ணங்கள் ஆண்கள் பக்கம் மட்டுமே அதிகம் இருப்பதைப்போன்று திரைப்படங்களும், படைப்புகளும் வந்திருக்கின்றன. ஆனால் உண்மையில் பெண்களிடம் மிக, மிக அதிகம் இருக்கின்றது.

காலங்காலமாக அதை அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தி செல்வதிலும் பெரும் பங்கு வகிக்கின்றனர் பெண்கள். அப்படிப்பட்ட ஒரு பெண்ணின் கதைதான் இந்தக் ‘காயல்’ திரைப்படம்.

இந்தக் கதை திரைப்படமாவதற்கு தயாரிப்பதற்கு முன் வந்த தயாரிப்பாளர் ஜேசு சுந்தரமாறன் அவர்களுக்கு எனது நன்றியும், வாழ்த்துக்களும். படத்தின் கதாநாயகன் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாதிகா, ஐசக், ரமேஷ் திலக் உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தில் சிறப்பானதொரு பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்கள்..” என்றார்.

விழாவில் நடிகர் லிங்கேஷ் பேசும்போது, “இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம். கதாநாயகனாக இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யும் பொழுதே இந்தப் படம் என்ன மாதிரியான அதிர்வலைகளை சமூகத்தில் ஏற்படுத்தும்… நமது பங்களிப்பு இந்த படத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதை யோசித்து வைத்திருந்தேன். படத்தின் இயக்குநர் தமயந்தி அவர்கள் இந்தக் கதையை படமாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை நான் பாராட்டுகிறேன். அதுவும் அவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை சினிமாவாக்க முயற்சித்திருப்பது வரவேற்கிறேன். ஒரு பொறுப்பானபடத்தில் நடித்த திருப்தி இருக்கிறது” என்றார்.

விழாவில் நடிகை அனுமோல் பேசும்போது, “தமயந்தி இந்த கதையை எனக்கு தயாரிப்பாளர் முடிவாவதற்கு முன்னாடியே சொல்லிவிட்டார், அப்போது நான் மலையாள படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தேன். அப்போதே நான் சொல்லிவிட்டேன் “இந்த படத்தில் நான் கண்டிப்பாக நடிக்கிறேன்” என்று!

அதன் பிறகு சொன்னதைப் போலவே படம் துவங்கும் நேரத்தில் நடிக்க வந்துவிட்டேன். பெரும்பாலும் படப்பிடிப்பு கடற்கரை ஒட்டிய ஊர்களில் படப்பிடிப்பு நடைபெற்றதால் எங்களுக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது. அதுவும் ஒரு பயணம் செய்யும் அனுபவத்தை தந்தது.

இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம். அதைவிட இப்படி பெண்களின் உண்மையான மனங்களில் இருக்கும் இன்னொரு பக்கத்தை சொல்ல துணிந்து சொல்லியிருக்கும் இயக்குநர் தமயந்திக்கு எனது பாராட்டுக்கள்..” என்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குநர் மித்ரன் ஜவஹர், மீரா கதிரவன், டிராஸ்கி மருது, அதிஷா, இசையமைப்பாளர் ஜஸ்டின், எடிட்டர் பிரவீன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகை ஸ்வாதிகா, நடிகர் ஐசக், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Our Score