ஹர ஹர மஹாதேவகி – சினிமா விமர்சனம்

ஹர ஹர மஹாதேவகி – சினிமா விமர்சனம்

தங்கம் சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.தங்கராஜ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் ஹீரோவாகவும், நிக்கி கல்ரானி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் நான் கடவுள் ராஜேந்திரன், கருணாகரன், ரவி மரியா, சதீஷ், பால சரவணன், நமோ நாராயணா, ஆர்.கே.சுரேஷ், மனோபாலா, மயில்சாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கலை – சுப்ரமணிய சுரேஷ், நடனம் – பாபா பாஸ்கர், ஷெரிப், சதீஷ், இசை – பாலமுரளி பாலு. பாடல்கள் – கு.கார்த்தி, கானா கடல், சன்தோஷ் P ஜெயக்குமார், ஒளிப்பதிவு – செல்வகுமார் S.K., நிர்வாக தயாரிப்பு – நிர்மல் கண்ணன், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  – சன்தோஷ் P.ஜெயக்குமார், தயாரிப்பு நிறுவனம் – தங்கம் சினிமாஸ், தயாரிப்பு – S.தங்கராஜ், வெளியீடு – BLUE GHOST பிக்சர்ஸ்.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்திற்கு பிறகு கண்டிப்பாக ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் என்றே பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம் இது.

கவுதம் கார்த்திக்கும், நிக்கி கல்ரானியும் காதலர்களாக இருந்தவர்கள். 24 மணி நேரத்திற்கு முன்பு அவர்களிடையே பிரேக்கப் ஆகிவிட்டது. இதனால் அவரவர்கள் தங்களிடமிருக்கும் பரிசுப் பொருட்களை திருப்பிக் கொடுப்பதற்காக சந்திக்க நினைக்கிறார்கள்.

ரவி மரியா ஒரு கட்சியின் தலைவர். தேர்தல் நேரம் இது. தேர்தல் பிரச்சார மேடையில் ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்து அதன் காரணமாக வாக்காளர்கள் மத்தியில் ஒரு சிம்பதியை உருவாக்கி எதிர்க்கட்சிக்கு விழும் அனைத்து ஓட்டுக்களையும் தானே பெற்றுக் கொண்டு அடுத்த முதல்வராக நினைக்கிறார்.

இதற்காக தனது உதவியாளரான நமோ நாராயணனிடம் சொல்லி கருணாகரன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரனிடம் வெடிகுண்டு இருக்கும் பையை கொடுத்தனுப்புகிறார்.

கள்ள நோட்டு அடிக்கும் கும்பலிடத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய்க்கு 2000 ரூபாய் கள்ள நோட்டுக்களை வாங்கிய பால சரவணன், அதனை நல்ல நோட்டாக்கி தனது கமிஷன் தொகையை பெற நினைத்து அவரும் ஒரு பையில் அந்தக் கள்ள நோட்டுக்களை வாங்கிக் கொண்டு வருகிறார்.

காதலர்கள் சந்திக்கவிருக்கும் மீட்டிங் பிளேஸ் ‘ஹர ஹர மஹாதேவகி’ என்ற ஆசிரமம். இதே ஆசிரமத்தில்தான் வெடிகுண்டை அந்தப் பக்கம் அனுப்பிவிட்டு இந்தப் பக்கம் தங்களது சகதர்மிணிகளுடன் வந்து ஒருவருக்கொருவர் தெரியாமல் ரூம் போட்டிருக்கிறார்கள் ரவி மரியாவும், நமோ நாராயணனும்.

இதே ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒரு தம்பதியினரின் 7 வயது பெண் குழந்தை கடத்தப்படுகிறது. ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் குழந்தை கிடைக்கும் என்று கடத்தல்காரர் சொல்ல.. போலீஸையும் மீறி அந்தப் பணத்தை ஒரு பையில் வைத்து கொடுக்கிறார்கள் பெற்றோர்கள்.

இந்த நேரத்தில் இந்த நான்கு டீமும் இதே ஆசிரமத்தில் வந்து சேர்கின்றன. உபயம் அந்த பை. தமிழக அரசு வழங்கும் இலவச உதவித் திட்ட பையாக இருப்பதால் ஆங்காங்கே பல முறை, பலரின் கைகளுக்கு மாறி, மாறி பயணம் செய்து கடைசியாய் ஆசிரமத்துக்குள்ளேயே வந்துவிட்டதால் அத்தனை பேரும் ஆசிரமத்தில் வந்து குவிந்துவிட்டார்கள்.

கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்துக்கு எப்படி சென்சார் சான்றிதழ் கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை. உண்மையில் கொடுத்திருக்கவே கூடாது என்பதுதான் நியாயம். ஆனால், என்றைக்கு நமது அரசு அமைப்புகள் நேர்மையாக நடந்திருக்கின்றன..? இது போன்று எதுவுமே இல்லாத சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்து சொல்லும் படமாக இருந்தால் அதற்குத் தடை விதித்து வெளியிடவே விடமாட்டார்கள்.. இதுதானே நமது நாட்டின் லட்சணம்.

படத்தில் ‘டபுள் மீனிங்’ என்றில்லாமல் ‘டிரிபுள் மீனிங்’, ‘பவுண்டரி மீனிங்’, ‘சிக்ஸர் மீனிங்’கென்றெல்லாம் அடித்து ஆடியிருக்கிறார் இயக்குநர். படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இடையிடையே வரும் அந்த ஹின்கி வாய்ஸ் ஈர்ப்பானதுதான் என்றாலும் அதுவே வரிக்கு வரி ஆபாசத்தை ஒப்பிப்பதால் ரசிக்க முடியவில்லை. கூடவே இதுவும் ஐயர் பேச்சு.. தமிழ்ச் சினிமாவில் வம்புக்கு இழுக்க ஐயர்களை விட்டால் நம்மாளுகளுக்கு வேறு ஆளே கிடைக்காது..!

அந்த ஹின்கி வாய்ஸுக்கு கொங்கு வட்டார பாஷையையும், திருநெல்வேலி பாஷையையும் கொடுத்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு.. ஆனால் ஐயராத்து பாஷைதானே.. எவன் கேக்கப் போறான் என்கிற அலட்சியம்..! இது ரொம்ப அநியாயம் இயக்குநரே..!

முதலில் இந்தப் படத்திற்கு இப்படியொரு ஆபாச சிச்சுவேஷனே தேவையில்லை. மிக அழகான கதை.. நீட்டான திரைக்கதை.. நன்கு இயக்கம் தெரிந்த இயக்குநர்.. இப்படியிருந்தும் எதற்கு தேவையில்லாமல் இதில் ஆபாச பேச்சுக்களை, காட்சிகளை அளவு கடந்து திணித்திருக்கிறார் என்று தெரியவில்லை.

ஆபாசம், வக்கிரம் என்றில்லாமல் சாதாரணமான குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்று எடுத்திருந்தால், இந்நேரம் இந்தப் படத்தின் வசூல் பட்டையைக் கிளப்பியிருக்கும் என்பது உறுதி. இப்படி ஒரு சாரார் மட்டுமே.. வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்கிற அமைப்பை இயக்குநர் ஏன் உருவாக்கினார் என்று தெரியவில்லை. ஆனால் இது பச்சை முட்டாள்தனம்.

இப்போதே இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ரசிகர்களாய் வந்த பெண்களை உடன் வரும் ஆண் வர்க்கமே ஒரு மாதிரியாக பார்க்கிறது. இதைத்தான் இயக்குநர் எதிர்பார்த்தாரோ..? தெரியவில்லை. புரியவில்லை. ஆனால் இயக்குநரின் முட்டாள்தனம் மட்டும் நன்கு தெரிகிறது.

இடையிடையே வரும் ஆபாசக் காட்சிகளில் இருக்கும் நகைச்சுவையைத்தான் இவர்கள் ‘பிளையிண்ட் காமெடி’ என்கிறார்களோ என்னவோ..? புரியலை.. கவுதம் கார்த்திக்கை சனீஸ்வர பகவான் கோவில் திருக்குள படிக்கட்டில் நிர்வாணமாக பார்த்தவுடன் அலறும் நிக்கி, தொடர்ச்சியாக மூன்று முறை கவுதமின் ‘லூல்லா’வை பார்த்துவிடுகிறாராம். இதன் பின்புதான் அவர்களுக்குள் காதல் உருவாகிறதாம்..! இந்தக் காட்சியமைப்புக்கு நிச்சயம் விருது தர வேண்டும்.

ஏற்கெனவே இதற்கு முன்பு வெளியான சில படங்களில் பெண்களை முழு நிர்வாணமாக பார்த்தவுடன் ஆண்களுக்கு காதல் வரும் என்று ரஜினி, கமல் முதற்கொண்டு அனைத்து நடிகர்களின் படங்களிலும் காட்சிகள் வந்துவிட்டதால் இந்தக் காட்சியைக் குற்றம், குறை சொல்ல யாருக்கும் தகுதியில்லைதான்..!

நமோ நாராயணன் மற்றும் ரவி மரியா இருவரின் மனைவிகளை வைத்து விளையாடியிருக்கும் காம திரைக்கதை நிச்சயமாக கொடூரமானது. இத்தனை ரசிகர்கள் மத்தியில் பார்க்க வேண்டிய, கூடிய விஷயமல்ல இது. இப்படி படம் முழுவதிலும் இயக்குநர் நிறையவே எல்லை மீறியிருக்கிறார்.

நிக்கி கல்ரானி 21-ம் நூற்றாண்டின் இந்தியப் பெண் என்பதை அழகாக காட்டியிருக்கிறார். எல்லாவிதமான வசனங்களையும் கூச்சமே இல்லாமல் ஒப்பித்து நடித்திருக்கிறார். இதில் தொனிக்கும் நகைச்சுவைதான் அவரைக் காப்பாற்றியிருக்கிறது. இல்லாவிடில் காறித் துப்பியிருப்பார்கள் தமிழ் ரசிகர்கள்.

கவுதம் கார்த்திக்கும் இப்படியே. 18 நடிகர்களைத் தாண்டி தன்னிடம் வந்த கதை என்பதாலும், முழுக்க, முழுக்க தமிழுக்கு அன்னியமாகவே பெங்களூரில் படித்து வளர்ந்த மேல்தட்டு வர்க்கப் பையன் என்பதாலும் இவர் என்ன செய்கிறோம் என்பதையே தெரியாமல் செய்திருக்கிறார் போலீருக்கிறது. கர்த்தர் இவரை மன்னிப்பாராக..! இந்தப் படத்தை அவருடைய கேரியரில் ஒரு படமாகவே இனி வரும் காலங்களில் அவரால் சொல்ல முடியாது என்பது போகப் போக கவுதமுக்கு புரியும்.

ரவி மரியாவும், நமோ நாராயணனும் அதகள காமெடியை பரப்பியிருக்கிறார்கள். நமோ மரியாவை புகழ்வதும்.. பதிலுக்கு அவர் முதலில் உச்சிக் குளிர்ந்து பின்பு கடுப்பாகி கத்துவதும் செம ரகளை.

இதேபோல் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், கருணாகரனும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணைப் பார்க்கப் போய் அங்கே படும் அவஸ்தையும், அல்லலும் ரகளையிலும் ரகளை. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இந்தப் படத்தில் அடித்து ஆடியிருக்கிறார். அப்பாவியான கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். கருணாகரன், பால சரவணன் இருவருமே அவரவர் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக ஓவராகவே உழைத்திருக்கிறார்கள்.

கள்ள நோட்டை நல்ல நோட்டாக மாற்றும் காட்சியில் வரும் ஒரு சிறிய வசனமே படத்தின் ஒட்டு மொத்த கைதட்டலை பெற்றிருக்கிறது. “நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்றெல்லாம் பார்க்காமலேயே வாங்குற ஒரே ஆளுக நம்ம போலீஸ்காரங்கதான்…” என்ற வசனத்திற்காகவே இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் ஷொட்டு..!

இதேபோல் அந்த ஆசிரமத்தில் ஒரு பக்கம் இந்து சாமியாரும், இன்னொரு பக்கம் கிறித்துவ பாதிரியாரும் சேர்ந்து நோய் விரட்டும் காட்சிகளில் நகைச்சுவை தெறிக்கிறது.. வெல்டன் இயக்குநர் ஸார்..!

எஸ்.கே. செல்வகுமாரின் ஒளிப்பதிவில் குறைவில்லை. ஷாட் பை ஷாட் அழகுற படமாக்கியிருக்கிறார்கள். பாடல் காட்சிகளையும்தான். பால முரளி பாலுவின் பாடல்கள் கேட்க நன்றாகத்தான் இருந்தன. ஒளிப்பதிவாளர் புண்ணியத்தில் காட்சிகளையும் ரசிக்க முடிகிறது.

படத்தின் இறுதியான அரை மணி நேரக் காட்சிகள்தான் படமே.. நகைச்சுவையை தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குநர். ஆனால் அது அத்தனையும், ‘விருந்து’, ‘மருதம்’ போன்ற பத்திரிகைகளில் எழுதப்பட்ட காமக் கதைகளின் முன்னோட்டம் போல இருப்பதால் சிரிக்கவும் முடியாமல், அடக்கவும் முடியாமல் அமர வேண்டியிருக்கிறது. ஆர்.கே.சுரேஷ், மனோபாலா, மயில்சாமி கூட்டணியின் இறுதியான காமெடியில்கூட காம நெடி அடிப்பது கொடுமை.

பலருக்கு இந்தப் படம் பிடிக்காது. ஆனால் ஒரு சிலருக்குப் பிடிக்கும். காமத்தை பகிரங்கமாக பேசி பழகும் அனைவருக்கும் இந்தப் படம் நிச்சயமாக பிடிக்கும். ஆனால் மற்றவர்களுக்கு…?

இயக்குநருக்கு இயக்கத் திறமையும், திரைக்கதை எழுதும் திறமையும் அபாரமாக இருக்கிறது. ஆகவே அவர் தனது அடுத்தடுத்த திரையுலகப் பயணத்தில் படத்தின் பெயரை தைரியமாக வெளியில் சொல்லும்படியான தரமான படங்களாக உருவாக்கினால் தமிழ்த் திரையுலகத்திற்கும் நல்லது. அவருக்கும் நல்லது.

இது போன்ற படங்கள் உருவாவது இதுவே கடைசியாக இருக்கட்டுமே..! இல்லாவிடில் தற்போது தமிழகத்தில் இருக்கும் அனைத்து தரமான சினிமா தியேட்டர்களும் ‘பிட்டு பட தியேட்டர்கள்’ என்றே அழைக்கப்படும் சூழல் ஏற்படும்..!

ஓத வேண்டியது நமது கடமை. ஓதிவிட்டோம்..! அவ்ளோதான்..!

Our Score