ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்தின் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘பொட்டு.’
இந்தப் படத்தில் பரத் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் தம்பி ராமையா, பரணி, நான் கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
வசனம் – செந்தில், ஒளிப்பதிவு – இனியன் ஹரீஷ், இசை – அம்ரீஷ், பாடல்கள் – விவேகா, கருணாகரன், சொற்கோ, ஏக்நாத், சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், படத் தொகுப்பு – எலீசா, கலை – நித்யானந்தம், நடனம் – ராபர்ட், தயாரிப்பு மேற்பார்வை – ஜி.சங்கர், தயாரிப்பு – ஜான்மேக்ஸ், ஜோன்ஸ், எழுத்து, இயக்கம் –வி.சி.வடிவுடையான்.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சில தினங்களுக்கு முன்பு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை இனியா பேசும்போது, “பொட்டு என்ற இப்படத்தின் தலைப்புக்கு உரிய கதாபாத்திரம் என்னுடையது. ஏற்கெனவே நான் சில ஹாரர் படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் மிகவும் வித்தியாசமானது. இது ஹாரரோடு, ஆன்மீகமும் கலந்த படம்…” என்றார்.
நடிகர் பரத் பேசும்போது, “நான் இந்தப் படத்தில் மருத்துவக் கல்லூரி மாணவன், வயோதிகர், ஒரு பெண் என மூன்று கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன். பெண் வேடத்தில் சில காட்சிகளே நடித்தேன்.. என்றாலும், அந்த வேடத்தில் நடித்தது எனக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
படத்தின் இயக்குநரான வடிவுடையான் தினமும் காலை 7 மணிக்கு ஷூட்டிங் என்றால் ஐந்தரை மணிக்கே வந்துவிடுவார். வந்த வேகத்தில் ஆர்ட்டிஸ்ட்டுகள் இல்லாத காட்சிகளை படமாக்குவார். ஒரு நிமிடம்கூட எங்களை உட்காரவே விடலை. அந்த அளவுக்கு கடினமான உழைப்பாளி. இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் நிச்சயம் பிடிக்கும்..” என்றார்.
இயக்குநர் வடிவுடையான் பேசும்போது, “இந்தப் படம் முழுக்க, முழுக்க ஒரு மருத்துவ கல்லூரியின் பின்னணியில் உருவாகியுள்ளது.
படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர். மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த அகோரியாக நமீதா நடித்திருக்கிறார். இனியா, மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார்.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது. இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி இருக்கிறது. படம் விரைவில் வெளியாக உள்ளது.
எனது முதல் படமான ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்திற்கு பிறகு மிக அழுத்தமான கதையில் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். எனது முந்தைய படமான ‘செளகார்பேட்டை’யில் நான் செய்த தவறுகளெல்லாம் இந்தப் படத்தில் இருக்காது. அந்தத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுதான் இந்தப் படத்தை அதைவிட சிறப்பாக உருவாக்கியிருக்கிறேன்…” என்றார்.