full screen background image

‘கூர்கா’ – சினிமா விமர்சனம்

‘கூர்கா’ – சினிமா விமர்சனம்

4 மன்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

படத்தில் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ராஜ்பரத், எலீசா, ஆனந்த்ராஜ், ரவி மரியா, ‘ஆடுகளம்’ நரேன், தேவதர்ஷிணி, ஜே.பி.ஜெய், சார்லி, மனோபாலா, மயில்சாமி, லிவிங்ஸ்டன், ‘நமோ’ நாராயணன், டி.எம்.கார்த்திக், ஜப்பான் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கிருஷ்ணன் வசந்த், படத் தொகுப்பு – ரூபன், இசை – ராஜ் ஆர்யன், கலை இயக்கம் – சிவசங்கர், வசனம் – சாம் ஆண்டன், ரூபன், ஆண்டனி பாக்கியராஜ், ஆர்.சவரிமுத்து, நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், பாடல்கள் – விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், உடைகள் வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், சண்டை இயக்கம் – பி.சி., மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, எழுத்து, இயக்கம் – சாம் ஆண்டன்.

இப்படத்தை தமிழகம் முழுவதும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்டிருக்கிறார்.

நேபாளத்தின் பூர்வகுடிகளான கூர்க்கா பரம்பரையில் பிறந்தவர் பகதூர் சிங் என்ற யோகி பாபு. இவரது அம்மாவும், அப்பாவும் இறந்துவிட்டதால் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார்.

போலீஸாக வேண்டும் என்ற ஆசையில் பலவித முயற்சிகள் எடுத்து வருகிறார். இருந்தும் அவருடைய உடல்வாகு அதற்கு தோதாக இல்லாததால், அவரால் போலீஸாக முடியாது என்கிற நிலைமை.

இந்த நேரத்தில் அவரை அவரது குடும்பப் பாரம்பரியத் தொழிலான கூர்க்கா வேலைக்குப் போகும்படி அவரது பாட்டி வற்புறுத்துகிறார். பாட்டியின் தொல்லை தாங்காமல் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தும் மனோபாலாவிடம் வந்து நிற்கிறார்.

மனோபாலா அவரை ஒரு வீட்டுக்கு கூர்க்காவாக வேலைக்கு அனுப்பி வைக்கிறார். அந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் அமெரிக்க துணைத் தூதரான எலீசாவை பார்த்தவுடன் லவ்வாகிறார் யோகி.

இந்த நிலைமையில் யோகி பாபுவுக்கு பிரமோஷன் கொடுப்பதாகச் சொல்லி அவரை ஒரு பெரிய மாலுக்கு காவலாளியாகப் போகச் சொல்கிறார் மனோபாலா. முதலில் மறுக்கும் யோகிபாபு.. எலீசா அந்த மாலில் இருக்கும் ஜிம்முக்கு அடிக்கடி வந்து போவதைப் பார்த்தவுடன் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

இந்த நேரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளுக்கும், எல்லையில் பக்கத்து நாட்டுடனான போரில் உடல் ஊனமான ராணுவ வீரர்களுக்கும் உரிய அங்கீகாரமும் கிடைக்காமல் இருப்பதை பார்த்து ஒரு ராணுவ அதிகாரி மனமுடைந்துபோய் நிற்கிறார். அவருடன் கூட்டணி சேரும் ராஜ்பரத், அவரை மூளைச் சலவை செய்து எதையாவது செய்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

இதற்கு அந்த ராணுவ அதிகாரியும் ஒத்துக் கொள்ள.. ராஜ் பரத் தலைமையில் ஒரு டீம் இணைகிறது. யோகிபாபு காவலாளியாக இருக்கும் மாலில் இருக்கும் ஜிம்முக்கு அடிக்கடி வந்து போகும் அமெரிக்க துணைத் தூதரான எலீசாவை பணயக் கைதியாக்க நினைத்து சதிவேலையில் ஈடுபடுகின்றனர்.

ஒரு நாள் இரவில் மாலை சுற்றி வளைக்கின்றனர். ஏற்கெனவே திட்டமிட்டபடியே உள்ளூர் போலீஸ் உயரதிகாரிகளின் குடும்பத்தினரை தந்திரமாக டிஸ்கவுண்ட் கொடுப்பதாகச் சொல்லி மாலில் இருக்கும் தியேட்டரில் படம் பார்க்க அழைக்கின்றனர். வந்தவர்களை துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து பணயக் கைதியாக்குகின்றனர்.

இந்த நேரத்தில் மாலுக்குள் இருக்கும் காவலாளிகளான யோகிபாபுவும், சார்லியும் மட்டும் அவர்கள் கண்ணில் படாமல் பதுங்கியிருக்கின்றனர். வெளியில் போலீஸ் மாலை சுற்றி வளைத்திருக்க.. யோகியும், சார்லியும் எப்படி தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டி பணயக் கைதிகளை விடுவிக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

2009-ம் ஆண்டு வெளியான Paul Blart : Mall Cop என்கிற ஹாலிவுட் படத்தின் கதைக் கருவையும், திரைக்கதையையும் கொண்டுள்ளது இந்தத் தமிழ்த் திரைப்படம். முறைப்படி உரிமம் வாங்கினார்களா என்பது தெரியவில்லை.

யோகிபாபுவை தனி நாயகனாக்கி வெளியாகியிருக்கும் இரண்டாவது திரைப்படம் இது. முதல் திரைப்படமாக ‘தர்ம பிரபு’ சென்ற மாதம்தான் வெளியாகி எந்த ரிசல்ட்டையும் சொல்லாமல் தியேட்டரைவிட்டு வெளியேறியது. ஆனால் இத்திரைப்படத்தில் ‘தர்ம பிரபு’வில் இல்லாத அளவுக்கு நகைச்சுவை தெறிப்பதால் படம் பேசப்படும் என்றே தெரிகிறது.

முதற்பாதியில் நகைச்சுவை குறைவாக இருப்பினும், இரண்டாம் பாதியில் அதற்கு சேர்த்து வைத்து ஆடியிருக்கிறார்கள். யோகி பாபுவின் டைமிங்சென்ஸ் காமெடி வசனங்களில் கொஞ்சம் அத்துமீறலும் இருக்கிறது.

தன்னுடைய உடல் மொழி, வசனத்தை வெளிப்படுத்தும்விதம்.. அலட்சியமான நடிப்பு என்று மூன்றையும் கலந்து கட்டி செய்திருக்கிறார் யோகி. வில்லன் ராஜ்பரத்திடம் போனில் பேசி மிரட்டியே அடுத்தடுத்த காட்சிகளை அவர் நகர்த்தும்விதமே படத்தை மிகவும் ரசிக்க வைக்கிறது.

இவருக்கு உறுதுணையாய் தனது பண்பட்ட நடிப்பால் சார்லியும் இன்னொரு பக்கம் திரையில் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். காவலாளி வேலையை மிகவும் ரசித்து வேலை செய்யும் தனது கருத்தை அவர் சொல்லும்விதம் அந்தக் கேரக்டருக்கே வலு சேர்க்கிறது.

வாக்கி டாக்கி ஆள் சார்லிதான் என்று யோகிபாபு திட்டமிட்டு அவரை மட்டுமே பேச வைத்து வில்லன் கோஷ்டியை நம்ப வைத்து டிரான்ஸ் கேமிராக்களை அடித்து நொறுக்குவது டிவிஸ்ட்டான திரைக்கதை. அதை ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்கள்…!

‘ஹாரிஸ் ஜெயராஜ்’ என்ற இன்ஸ்பெக்டர் ரவி மரியாவின் அலட்டல் நடிப்பு இன்னொரு பக்கம் ஏழரையைக் கூட்டினாலும், இடைவேளைக்கு பின்பு தனது மனைவியும் உள்ளே மாட்டிக் கொண்டுள்ளார் என்பதற்குப் பிறகு அவர் காட்டும் தவிப்பும், வேகமும் நகைச்சுவையைக் கூட்டுகிறது.

‘நித்யானந்தா சாமி’ கேரக்டருக்கு நமோ நாராயணனும் அவரது சிஷ்ய கோடிகளும் அருள் பாலிக்கிறார்கள். நித்தியை அடித்தவுடன் சிஷ்யைகள் வண்டை, வண்டையாகத் திட்டத் துவங்குவது செம..

இதேபோல் 4 ஓட்டு வாங்கிய கட்சியின் தலைவராக மயில்சாமி.. டைம் பாஸுக்காக எப்படியெல்லாம் கட்சியை நடத்தி பொழப்பு நடத்துகிறார்கள் என்பதை போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இதேபோல் போலீஸ் கமிஷனரின் மனைவியாக இருந்தாலும் 5000 ரூபாய் டிஸ்கவுண்ட்டுக்கு ஆசைப்பட்டு வந்து தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொள்ளும் பெண் குலத்தினரையும் வாரியிருக்கிறார்கள்.

செக்யூரிட்டி ஏஜென்ஸி நடத்தும் மனோபாலா.. வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டே ஆட்சி நடத்தும் முதல்வர் லிவிங்ஸ்டன், தனது மனைவியும் சிக்கியிருப்பதை அறிந்தவுடன் ஷூட்டிங் ஆர்டரை வாபஸ் வாங்கும் போலீஸ் கமிஷனர் ‘ஆடுகளம்’ நரேன்.. என்று அனைத்து நடிகர்களுமே தங்களது நடிப்பை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள்.

வெளிநாட்டுப் பெண்ணான எலீசாவுக்கு பெரிய ரோல் இல்லை. சென்னையில் இருக்கும் துணைத் தூதராக இருப்பதைக் காட்டினாலும், அதை வசனத்தில் சொல்லாமல்விட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்றாலும் கதையை நகர்த்த உதவும்வகையில் பாடல் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் இரண்டாம் பாதி காட்சிகள் இரவிலும் பகலாக ஜொலிக்கிறது. மால் சம்பந்தப்பட்ட காட்சிகளை விஸ்தாரமாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

என்னதான் காமெடி படம் என்றாலும் லாஜிக் எல்லை மீறல்களை அநியாயத்திற்கு கோட்டை விட்டிருக்கிறார்கள். போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களே இதற்கு சாட்சி.

போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் இருக்கும் பயிற்சியாளர்கள்தான் அங்கே பயிற்சியளிக்க முடியும். ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான ரவி மரியா எப்படி அங்கே வர முடியும்..? அதுவும் ஒரு இன்ஸ்பெக்டராக இருந்து கொண்டு கமிஷனரிடம் மரியாதைக் குறைவாக அவர் கத்தும் கத்து இருக்கே.. முடியலடா சாமி..!

இரவு நேரத்தில் போலீஸ் டிரெயினிங்கை கொடுத்து.. அதிலும் தேர்வே ஆகாத.. யோகிபாபுவை வைத்துக் கொண்டு அவர்கள் காட்டும் பிலிம்.. இயக்குநர் சாம் ஆண்டனுக்கு இது அடுக்குமா..? தொடர்ச்சியாக 3 படங்களை அதுவும் குறிப்பிடத்தக்க படங்களாக கொடுத்துவிட்டு இப்படியொரு சப்பையான திரைக்கதையை அவர் எழுதலாமா..?

நகைச்சுவை என்பது இயல்பாக வர வேண்டும். கவுண்டமணியை போல உருவத்தை வைத்து கேலி.. கிண்டல்.. என்று அனைவரையும் சகட்டுமேனிக்கு கிண்டல் அடித்துள்ளார் யோகிபாபு.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களோ திரைப்பட விமர்சனங்களில்  தனி மனித தாக்குதல்கள் கூடாது.. அநாகரிக வார்த்தைகளில் விளாசக் கூடாது என்றெல்லாம் திரைப்பட விமர்சகர்களுக்குக் கட்டளையிடுகிறார்கள். ஆனால் இங்கே படத்துக்குப் படம் பலரையும் அநாகரிக வார்த்தைகளில் தாக்குகிறார்கள்.. இதை யார் கேட்பது..?

ராணுவத்தில் பணி புரிந்தவர்கள் மக்களுக்கெதிரான ஒரு செயலைச் செய்கிறார்கள் என்பதே ஏற்றுக் கொள்ள முடியாத திரைக்கதை. அதில் ஒரு தீவிரவாதக் கும்பல் கலந்து வந்துவிட்டதாகச் சொல்லி திரைக்கதையில் ஒரு டிவிஸ்ட்டை வைத்து தப்பியிருக்கிறார் இயக்குநர்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மரியாதையும், ஓய்வூதியமும் அவசியம் தேவை. அதை வலியுறுத்துவதும் அவசியமானதுதான். ஆனால் அதற்கு இப்படியொரு கதை தேவையா..? இதனை ஒரு குடும்பக் கதையாகக் கொண்டு சென்றிருக்கலாம். மால் முற்றுகையை வேறு வகையான அடிப்படை கதையைக் கொண்டு உருவாக்கியிருக்கலாம்.

இடைவேளைக்கு பின்பு படம் நெடுகிலும் இருக்கும் நகைச்சுவைதான் படத்தையும், யோகிபாபுவையும் காப்பாற்றியிருக்கிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்து யோகி பாபு இனிமேல் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல் இருக்க வேண்டும்..!

கூர்கா – பார்த்து சிரித்துவிட்டு வரலாம்தான்..!

Our Score