இந்தப் படத்தை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் சந்தானம், நமீதா கிருஷ்ணமூர்த்தி, அதுல்யா சந்த்ரா, ப்ரதீப் ராவத், தீனா, மரியம் ஜார்ஜ், பிபின், ஹரிஷ், கவி ஜெ.சுந்தரம், மௌரிஷ், யுவராஜ், TSR, முருக்கனி, தர்ஷன், சேசு, ‘மகாநதி’ சங்கர், ‘லொல்லு சபா’ மாறன், மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத் தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் ரத்ன குமார் இயக்கியுள்ளார். இவர் ‘மேயாத மான்’, ‘ஆடை’ போன்ற படங்களை இயக்கியவர். அது தவிர ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ போன்ற படங்களின் திரைக்கதையிலும் பணியாற்றி உள்ளார்.
இந்தப் படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
பொதுவாக சந்தானத்தின் படங்கள் 50 சதவிகிதம் காமெடியாகவும், 50 சதவிகிதம் ஹீரோயிஸமாகவும் அமைந்திருக்கும். “ஏன் இப்படி அடுத்த ஆளை நக்கல் செய்தே பொழைப்பை ஓட்டுறீங்க..?” என்று ஒட்டு மொத்தப் பத்திரிகையுலகமே தொடர்ந்து பல வருடங்களாக கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு, “இனிமேல் இப்படியொரு கேள்வியைக் கேட்பியா..?” என்று வாயிலேயே அடிப்பதுபோல முதன்முதலாக ஒரு சீரியஸ் டைப் படத்தில் நடித்திருக்கிறார் சந்தானம்.
அமேஸான் காட்டுப் பகுதியில் வெறும் 700 நபர்களால் மட்டுமே பேசப்படும் மொழியின் வாரிசுதாரர் சந்தானம். அவருடைய இனமே அங்குள்ள ஆதிக்க இனத்தினரால் அழிக்கப்பட அங்கிருந்து தப்பித்து, தப்பித்து, கண்டம், கண்டமாகத் தாவி கடைசியாக ஆசியாவுக்குள் புகுந்து, இந்தியாவுக்குள் நுழைந்து, தமிழ்நாட்டுக்குள்ளேயே வந்து தற்போது சிங்கார சென்னையில் குடியிருக்கிறார் ‘கூகுள்’ என்ற சந்தானம்.
சென்னையில் சவப்பெட்டி செய்து தரும் தொழிலைச் செய்து தரும் சந்தானத்திற்கு தற்போது 14 மொழிகள் பேசத் தெரியும். அதேபோல் என்ன மாதிரியான வேலையையும் செய்வார். கூடவே ஒரு நல்ல குணமும் உண்டு.
யார் என்ன உதவி கேட்டாலும் ஏன், எதற்கு என்றெல்லாம் கேள்வி கேட்காமல் ஓடோடி போய் உதவி செய்யும் நல்லவர் சந்தானம். அதற்காக அவரது உடல் முழுவதும் விழுப்புண்கள் நிறையவே இருக்கின்றன. எத்தனை அடிபட்டாலும் தனது உதவி செய்யும் கொள்கையை மட்டும் சந்தானம் விட்டுக் கொடுப்பதே இல்லை.
இந்த நேரத்தில்தான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் அறைந்து தனது வீரத்தை சந்தானம் காட்டியதைப் பார்த்த ஒரு குழு, “நண்பனை சிலர் கடத்திச் சென்றுவிட்டார்கள். அவனைக் காப்பாற்ற வேண்டும். உதவிக்கு வர முடியுமா..?” என்று அழைக்க.. உடனடியாக அவர்களுடன் கிளம்புகிறார் சந்தானம்.
இன்னொரு பக்கம் மிகப் பெரிய மாபியா கும்பலான பிரதீப் ராவத் தனது அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகளை கொலை செய்யத் துடிக்கிறார். அப்பாவின் சொத்துக்கள் முழுவதும் அந்தப் பெண்ணுக்கு போய்விட்டதால் கொலை வெறியோடு தனது தங்கையைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் இந்த இரண்டு சம்பவங்களும் ஓரு சம்பவத்தால் ஒன்றாகி நேர்க்கோட்டில் செல்ல.. சந்தானத்தை இரண்டு தரப்பினரும் தேடுகிறார்கள். சந்தானமும் அவர்களைத் தேடுகிறார். கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் ‘குலு குலு’ படத்தின் திரைக்கதை.
சந்தானத்தின் கேரக்டர் பெயரான ‘கூகுள்’ என்பதுதான் சென்னையில் மருவி, மருவி ‘குலு குலு’ என்றாகிவிட்டதாம். சந்தானத்திற்கே இந்தப் படம் பார்த்தால் அவர் புதிதாகத்தான் தெரிவார். ஒரு காட்சியில்கூட சிரிப்பு வராத அளவுக்கு சீரியஸாக பேசி நடித்திருக்கிறார். யாரையும் நக்கல் அடிக்காமல், அதே சமயம் பலரும் தன்னை நக்கல் அடிப்பதையும் அனுமதித்திருக்கிறார். கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கேற்ற நடிப்பை மட்டுமே காண்பித்திருக்கிறார்.
கடத்தப்படும் வாலிபனாக நடித்திருக்கும் ஹரீஷ் ஓரளவுக்கு நடித்துள்ளார். தனது காதலியை ஒருவன் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் காட்சியில் அவர் காட்டும் துடிப்பு யதார்த்தமானது. அதேபோல் அவரது காதலியாக நடித்திருக்கும் அதுல்யா சந்திராவும் குழந்தைக்குப் பதிலாக தன்னை எடுத்துக் கொள் என்று சொல்லி தான் தியாகியாகும் காட்சியில் மனதைத் தொடுகிறார்.
இலங்கை தமிழர்களாக நடித்த ஜார்ஜ் தலைமையிலான டீம் மிக யதார்த்தமாக பேசுகின்ற பல வசனங்கள் சிரிப்பை கூட்டியிருக்கின்றன. சிக்கனம் செய்வதற்காக அவர்கள் செய்கின்ற செயல்களால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
வில்லன் கோஷ்டியான பிரதீப் ராவத்தும், அவரது தம்பியும் வெறித்தனத்தைக் காட்டியிருக்கிறார்கள். பப்ஜி விளையாடிக் கொண்டேயிருக்கும் அவரது தம்பியின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரஸ்யம். சந்தானத்தைத் தேடி வந்து விசாரிக்கும் அந்தக் காட்சியில் யார் இவர் என்று தேடவும், கேட்கவும் வைத்திருக்கிறார். பிரதீப் ராவத் மட்டும் கடைசிவரையிலும் போராடி மாள்கிறார்.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் நமீதா கிருஷ்ணமூர்த்தி தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையிடம் பேசும் பேச்சு ரகளையானது. இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் குழப்பமாகி இவர் ஹரீஷை காதலிக்கிறாரா..? இல்லையா..? என்கிற அளவுக்கெல்லாம் நம்மை மண்டை காய வைக்கிறது.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவுதான் படத்தின் மிகப் பெரிய பலம். வீட்டுக்குள் நடக்கும் அந்தத் துப்பாக்கி சண்டையை படமாக்கியவிதமே அசத்தல். அதோடு கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் ஒளிப்பதிவாளரின் திறமைக்கு ஒரு சான்றாக அமைந்திருக்கிறது. இந்த சண்டை காட்சிக்காக சண்டை பயிற்சி இயக்குநருக்கும் ஒரு சபாஷ் போடலாம்.
பிலோமின் ராஜின் படத் தொகுப்பு குழப்பம் விளையக் கூடிய திரைக்கதையை கொஞ்சம் நேராக்கியிருக்கிறது. கலை இயக்குநருக்கு மிகப் பெரிய பாராட்டு. பார்க்கும் இடங்களிலெல்லாம் அலங்காரப் பொருட்களை வைத்து அலங்காரப்படுத்தியிருக்கிறார். பாராட்டுக்கள்.
எல்லாம் இருந்தும் லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க வைத்திருக்கிறார்கள். ‘விக்ரம்’ படத்தில் நடந்தது போலவே இதிலும் எந்திரத் துப்பாக்கி களமாடியிருக்கிறது.
அதிலும் சீனாவில் இருந்து வந்த சிலர் சுட்டுத் தள்ளுவதாகக் காட்சிப்படுத்திவிட்டு அதன் பின்னான காட்சிகளில் காமெடி பீஸான ஒரேயொரு போலீஸ் இன்ஸ்பெக்டரான தீனா மட்டுமே வலம் வருவதாக வைத்திருப்பது காதில் பூச்சுற்றிய கதைதான்..!
“நிஜத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளதா..?” என்று ஒரு முறைக்கு நான்கு முறையாவது யோசித்து திரைக்கதை எழுதியிருக்கலாம். அதிலும் ஈழத் தமிழர்களைக் கடத்தல்காரர்களாகப் பயன்படுத்தியிருப்பதும் தேவையற்ற காட்சி. இங்கேயே இருக்கும் தமிழர்களே கிடைத்திருப்பார்களே.. எதற்கு அவர்கள்..?
பிரதீப் ராவத்தின் வன்முறை வெறியாட்டத்தை சென்னையில் இத்தனை நாட்களாக யார் விட்டு வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்..? கொஞ்சம் யதார்த்தமாக யோசித்திருக்கலாம். இந்த வில்லனின் செயல்பாடுகள் எக்ஸ்ட்ரீம் லெவலையும் தாண்டிவிட்டது..!
அதே சமயம் படத்தின் டைட்டிலேயே ‘பப்ஜி’ போன்ற இணைய தள விளையாட்டுகளின் ஆபத்தை சொல்லியிருப்பது சிறப்பு. பல இடங்களில் நகைச்சுவைக்கான வாய்ப்புகள் இருந்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ளாமல் சீரியஸ் போக்கிலேயே விட்டிருக்கிறார்கள்.
தன்னோடு அழியும் நிலையில் இருக்கும் தனது தாய் மொழியில் பேசவும் இன்னொரு ஆள் கிடைத்துவிட்டார் என்றதும் அந்த மொழிக்காரர் படும் சந்தோஷத்தையும், நிம்மதியையும் இறுதியில் சந்தானம் மூலமாகக் காட்டியிருக்கிறார்கள்.
மொழியின் முக்கியம்.. அழியக் கூடாதவைகளில் முதலிடத்தில் இருப்பது மொழி என்பதை கடைசி கட்டத்தில் வசனத்தின் மூலமாக இயக்குநர் உணர்த்தினாலும் இந்த மொழியை வளர்க்க சந்தானம் இங்கே சிந்தியவைகள் என்னென்ன என்பதையும் இயக்குநர் சொல்லியிருக்கலாம். அதற்கான திரைக்கதை காட்சிகளை வைத்திருக்கலாம்.
எதுவும் சொல்லாமல் வெறுமனே அழியும் தருவாயில் இருக்கும் மொழி பேசும் ஒருவன் என்ற சிம்பதியை சந்தானத்திற்குள் திணிக்க பெரும் முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர். அதுவோ இ.பி.கோ. செக்சன்படி குற்றவாளியாக சந்தானத்தைத் திசை திருப்பியிருக்கிறது.
மொத்தத்தில் இந்த ‘குலு குலு’ என்ற படம் நமக்கும் கலவையான உணர்வினையே தருகிறது..!
RATINGS : 2.5 / 5